திருப்பத்தூர் மாவட்டம் வடசேரியில் வசிக்கும் மீரா (ஜெகதீசன்) அவர்களை, அவரின் இல்லத்தில் சந்தித்தோம். 79 வயதாகிறது. குறைவான ஞாபகங்களோடு இருக்கிறார். எனினும் தொடர்ந்து பேசப் பேச, ஒவ்வொன்றாய் நினைவிற்கு வருகிறது. மகளிர் சந்திப்பில் மேலும் சிலரும் இப்படித்தான் இருந்தார்கள். அவர்களிடம் உரையாடுகிறபோது, அவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது; அதன் மூலம் தம்மைத் தாமே புதுப்பித்துக் கொள்கிறார்கள்!
முதியோர்களிடம் பேசுவதற்கு என்ன இருக்கிறது என இளம் தலைமுறையினர் நினைப்பார்கள். பேசாமல் விடுவதே அவர்களுக்கான தனிமை தான்!
அதேநேரம் சிலர் இயல்பாகப் பேசும்போதே நகைச்சுவை உணர்வு அதிகம் இருக்கும். மீரா அம்மாவும் அப்படி ஒரு நகைச்சுவை உணர்வில் நம்மை மகிழ வைத்தார்கள். வயது கூடியிருக்கலாம், உடல் தளர்ந்திருக்கலாம். ஆனால் முகத்தில் அந்தச் சிரிப்பும், பிறரை சிரிக்க வைக்கும் நுட்பமும் சற்றும் குறையவில்லை. வாருங்கள் அந்த நகைச்சுவை நாயகர் மீரா அம்மாவிடம் பேசுவோம்!
அம்மா வணக்கம்!
உங்களைக் குறித்துக் கொஞ்சம் கூறுங்கள்?
“எனது தாயார் பெயர் கிருஷ்ணவேணி என்கிற கண்ணம்மாள். தந்தை பெயர் சபாரத்தினம். நீதிக் கட்சியில் இருந்து, பல மாநாடுகளை முன்னெடுத்து செய்தவர். அவர்கள் மூலமே கொள்கை உணர்வை நாங்கள் பெற்றோம். வாணியம்பாடியில் நான் எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என்னுடன் பிறந்தவர்கள் 5 பேர். அனைவருக்குமே பெரியார் தலைமையில் தான் சுயமரியாதைத் திருமணம் நடைபெற்றது. அதேபோல எங்களுக்கு 4 குழந்தைகள். அவர்கள் அனைவருக்கும் ஆசிரியர் அய்யா தான் திருமணம் செய்து வைத்தார்கள்.
தங்களின் இணையர் ஜெகதீசன் அவர்கள் குறித்து நினைவு கூறுங்கள்?
எங்கள் திருமணத்தை வடசேரியில், 8.9.1965 அன்று தந்தை பெரியார் நடத்தி வைத்தார். இணையர் ஏராளமான நிலங்கள் வைத்திருந்தார். அதில் விவசாயம் செய்து வந்தார். அத்துடன் கோழிப்பண்ணை ஒன்றும் வைத்திருந்தார். இதன் நிதி, நிர்வாகத்தை நான்தான் பார்க்க வேண்டும் எனக் கூறி, அந்தத் காலத்திலேயே என்னை உற்சாகப்படுத்தியவர். வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளடக்கிய ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத் தலைவராக இருந்தார். திராவிடர் கழகத்தின் “டிரஸ்ட்” உறுப்பினராகவும் இருந்தார். இயக்கத்திற்கு நல்ல வண்ணம் செலவுகள் செய்பவர்.
அனைத்துப் போராட்டங்கள், மாநாடுகளிலும் கலந்து கொள்வோம். சென்னையில் சில பணிகள் காரணமாக, பெரியார் திடலில் கவிஞர் கலி.பூங்குன்றன் இருந்த வீட்டிற்கு எதிரில் இரண்டு ஆண்டுகள் குடியிருந்தோம். எங்களின் இரண்டு பெண்களுக்குமே பெரியார் திடலில் தான் திருமணம் நடைபெற்றது.
திருச்சி சுந்தர் நகரில் அமையப் பெற்ற பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம் தொடக்க காலத்தில் மேடு, பள்ளமாக இருந்தது. ஆசிரியர் அவர்களின் ஆலோசனையின் பேரில், 20 க்கும் மேற்பட்டோரை வடசேரியில் இருந்து அழைத்துச் சென்று நானும், இணையரும் அங்கேயே தங்கி சமைத்து, வேலைகளை முடித்துத் திரும்பினோம். 1997 ஆம் ஆண்டு இணையர் மறைந்தார்.
உங்களின் இயக்கப் பணிகள் எப்படி இருந்தது?
இணையருடன் இணைந்தே அனைத்துப் பணிகளும் செய்தேன். எங்களின் தென்னந்தோப்பில் ஒரு வாரம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்தினோம். மணியம்மையார் அவர்கள் எங்கள் வீட்டிலேயே தங்கி, அதில் கலந்து கொண்டார்கள். ஆசிரியர் அவர்கள் முழுவதுமாகப் பங்கேற்றார்.
எனக்குச் சமையலில் மிகுந்த ஆர்வம். விதவிதமாகச் சமைப்பேன். “நீ சுவையாகச் சமைத்துப் போடுவதால் தான், மாணவர்கள் சாப்பிட்டு விட்டுத் தூங்கி விடுகிறார்கள்”, என மணியம்மையார் வேடிக்கையாகச் சொல்வார்.
ஒவ்வொரு ஊரிலும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் என அன்னை மணியம்மையார் அவர்கள் தீர்மானம் இயற்றினார்கள்.
அதையொட்டி நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமில் ஆம்பூர் பெருமாள், ஆம்பூர் மாணிக்கவாசகம், தந்திர இயல் கலைஞர் பொன்னுச்சாமி உள்ளிட்ட 50 பேர் பங்கேற்றனர். அதன் கருப்பு வெள்ளைப் புகைப்படம் இன்றும் எங்கள் வீட்டில் இருக்கிறது. அந்தப் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட சிலர், பின்னாளில் பெரிய நிலைக்கு வந்தனர்.
பெரியாருடன் உங்களின் தோழமை
எப்படி இருந்தது?
சேலம், தர்மபுரி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளுக்குப் பெரியார் வரும்போது நானும், இணையரும் வேனில் உடன் செல்வோம். நிகழ்ச்சிகள் முடித்துத் திரும்பும் போது வடசேரிக்கு அருகில் எங்களை இறக்கிவிட்டு, வேனில் இருக்கும் பழங்களை அய்யா கொடுப்பார்.
பெரியார் ரவா லட்டு, முறுக்கு, பொரி உருண்டை போன்ற பலகாரங்கள் விரும்பிச் சாப்பிடுவார். நான் வீட்டிலேயே தயார் செய்து கொடுப்பேன். மணியம்மையார் அவர்களின் தங்கையும் எனக்கு நல்ல அறிமுகம். “நீங்களும் எனக்கு ஒரு அக்காதான்”, என அடிக்கடி கூறுவார்.
பெரியார் தலைமையில் நான் திருமணம் செய்திருந்தாலும், தாலி கட்டிக் கொண்டேன். பிறகு கும்பகோணம் மகளிர் மாநாட்டில் தாலியை நீக்கிவிட்டேன். அந்த மாநாடு எனது தலைமையில் நடந்தது. அதில் நான் பேசியதை கவிஞர்
கலி.பூங்குன்றன் ‘விடுதலை’யில் எழுதியிருந்தார்.
குறிப்பிடத்தகுந்த இயக்க நிகழ்வுகள்
வேறென்ன நினைவில் இருக்கிறது?
1978ஆம் ஆண்டு பெரியார் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிக்கு மும்பைக்கு வேனில் சென்றோம். ஆசிரியர் அவர்கள், வீ.மோகனா அம்மா, கவிஞர்
கலி.பூங்குன்றன், கா.மா.குப்புச்சாமி, சூர்யா, வெற்றிச்செல்வி ஆகியோருடன் நானும் சென்றேன். டில்லியில் நடைபெற்ற மண்டல் கமிசன் போராட்டம் மற்றும் லக்னோ மாநாட்டிலும் கலந்து கொண்டேன்.
டில்லி பெரியார் மய்ய கட்டடத் திறப்பு விழாவின் போது சந்திரஜித் (யாதவ்) கொடுத்த தேநீர் விருந்திலும் தோழர்களுடன் பங்கேற்றேன். சித்ரா, துரை, வீரமணி, சுமதி ஆகிய 4 பிள்ளைகளுடன் குற்றாலம் பயிற்சி முகாமிலும் கலந்து கொண்டுள்ளேன்.
மனு அநீதி எரிப்பில் பங்கேற்று வேலூர் சிறையில் 15 நாட்கள் சிறையில் இருந்தேன். உடன் பார்வதி, சொர்ணாம்பா, வீரமர்த்தினி உள்ளிட்ட தோழர்கள் இருந்தார்கள். அதேபோல சென்னை மத்திய சிறையிலும் ஒரு வாரம் இருந்துள்ளேன். ஆம்பூரில் நடைபெற்ற அஞ்சலக மறியலில் பங்கேற்று ஒருநாள் சிறையில் இருந்துள்ளேன்.
ஆசிரியர் அவர்களைப் போலவே வீ.மோகனா அம்மாவும் மிகுந்த பாசத்தோடு பழகுவார்கள்”, எனத் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் மீரா (ஜெகதீசன்) அவர்கள்!