தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித் தீர்மானம் கூறுவதாவது:
தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது அதாவது, ஒன்றிய அரசால் மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம், அதாவது, Census Act 1948இன்கீழ் மேற்கொள்ளப்படும் ஒரு மாபெரும் பணி. இது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலிருந்து 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் நடத்தப்பட்டுவரும் ஒரு மாபெரும் பணி. மக்கள்தொகை தொடர்பான புள்ளிவிவரங்கள் அனைத்தும் இக்கணக்கெடுப்பின் மூலம் சேகரிக்கப்பட்டு ஒன்றிய அரசால் தொகுத்து வெளியிடப்படுகிறது.
மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின் பிரிவு 3இன்படி ஒன்றிய அரசுதான் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டும். ஆனால், பொதுவெளியில் பரவலாகத் தெரிவிக்கப்படும் ஒரு கருத்து என்னவென்றால், புள்ளிவிவரச் சட்டம் 2008, அதாவது, Collection of Statistics Act, 2008-இன் அடிப்படையில் ஜாதிவாரிக் கணக்கெடுப்பை மாநில அரசு மேற்கொள்ளலாம் என்பதாகும்.
இந்தச் சட்டத்தின்படி மாநில அரசுகள் சமூகப் பொருளாதார புள்ளிவிவரங்களைச் சேகரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதே தவிர, இதே சட்டத்தின் பிரிவு 3, உட்பிரிவு (அ)இன்படி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 7ஆவது அட்டவணையிலுள்ளபடி இனங்கள் தொடர்பாக புள்ளிவிவரங்கள் சேகரிக்க இயலாது.
அந்த 7ஆவது அட்டவணையில்தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு 69ஆவது இனமாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. அதுமட்டுமல்ல, இச்சட்டத்தின் பிரிவு 32இன்படி மக்கள்தொகை கணக்கெடுப்புச் சட்டம் 1948-இன்கீழ் கணக்கெடுக்கப்படும் மக்கள்தொகை தொடர்பான புள்ளி விவரங்களை (Census data) சேகரிக்க இயலாது என்று மிகவும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இப்பொருள் தொடர்பான வழக்கு தற்போது மாண்பமை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானத்தில் குறிப்பிட்டார்.