மனிதனின் மூளை காட்டு விலங்காண்டிப் பருவத்திலிருந்து சிந்தனை வளர்ச்சியின் காரணமாக சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து, இன்று செயற்கை நுண்ணறிவியல் (Artificial Intelligence) என்கிற அளவுக்கு மேம்பட்டுள்ளது.
கணினிகள் மற்றும் இயந்திரங்களுக்கு மனிதர்களைப் போலவே சிந்திக்கும் மற்றும் கற்கும் திறனை வழங்கும் ஒரு தொழில் நுட்பம்; இந்தத் தொழில் நுட்பம் மனிதர்களின் அறிவாற்றலைப் போன்றே செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவின் முக்கிய அம்சங்கள்:
கற்றல், இயந்திரங்கள், தரவுகளிலிருந்து கற்றுக் கொண்டு, அவற்றின் செயல் திறனை மேம்படுத்துதல், சிந்தித்தல், சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கவும், முடிவுகளை எடுக்கவும், இயந்திரங்களுக்கு உதவுதல், உணர்தல், மனிதர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், அவற்றிற்குப் பதிலளிக்கவும் இயந்திரங்கள் உதவுதல்.
செயலாக்கம்: பணிகளைச் செய்யவும், இலக்குகளை அடையவும் இயந்திரங்களுக்கு உதவுதல்.
இந்த செயற்கை நுண்ணறிவு இன்று பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
மருத்துவம், நோய்களைக் கண்டறிதல், போக்கு வரத்தில் தானியங்கி ஓட்டுநர் வாகனங்கள், போக்கு வரத்து
நெரிசலைக் குறைத்தல்
கல்வி: கற்றல் அனுபவங்களை வழங்குதல், பொழுது போக்கு, விளையாட்டுகளில் எதிர் தரப்பினரை வெல்லுதல், திரைப்படங்களில் புதிய மாற்றங்கள்.
இன்னோரான்ன வளர்ச்சிகள் ஏற்பட்டு மானுட சமூகத்தையே தலைகீழாகப் புரட்டுமளவுக்கு இந்த செயற்கை நுண்ணறிவு வளர்ந்துள்ளது.
இதனையும் கண்டுபிடித்தது மனித மூளைதான் என்பது நினைவிருக்கட்டும்!
சிந்தி, சிந்தி – செயல்படு, செயல்படு! என்று தந்தை பெரியார் தொடர்ந்து கூறி வரும் கருத்துக்களுக்கான வடிவம்தான்
இந்த செயற்கை நுண்ணறிவுக் கண்டு பிடிப்பு!
‘இனி மனிதன் சாகிறதுதான் கஷ்டம்’ என்று தந்தை பெரியார் சொன்னதை கிட்டத்தட்ட தொட்டு விடும் நிலைமை ஏற்பட்டு விட்டது.
இவ்வளவுக்கும் பிறகும்கூட அறிவியல் சாதனங்கள் இன்னும் கூட அறிவுக்கும் அறிவியலுக்கும் விரோதமான வற்றைப்
பரப்புரை செய்வது வெட்கக் கேடானதல்லவா!
இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பதை நுண்ணறிவோடு சிந்தித்துப் பார்த்தால், ஒரு சுரண்டல் கூட்டம்தான் தெரியும்!
‘முதலீடு இல்லாத மூலதனம் பக்தி’ என்ற முட்டாள்தனம்! மாட்டு மூத்திரத்தையும் – சாணியையும் கரைத்துக் கொடுத்தால், தண்டனிட்டு தட்சணை கொடுத்து, பயபக்தியோடு குடிக்கிறார்கள் என்றால், இத்தகைய மூளையையும், அறிவையும் முற்றிலும் பறி கொடுத்தவர்களுக்கு – எந்தக் காரணம் முன்னிட்டும் புத்தி மாறிடவே கூடாது என்பதுதான் ஆன்மிகப் பிரச்சாரம்.
திருப்பித் திருப்பிப் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்க வேண்டும் – அப்பொழுதுதான் அவர்களை நாம் சுரண்டிக் கொண்டே இருக்க முடியும் என்பது அவர்களின் திட்டம்.
மக்களாட்சிக்கு விரோதமாக இருக்கக் கூடிய சங்பரிவார்கள் தேர்தல் நேரத்தில் ராமன் கோயில் கட்டுவது, அதில் பிரதமர் உள்ளிட்டோர் முன்னணியில் இருந்து முகத்தைக் காட்டுவது எல்லாம், இந்த அடிப்படையில்தான்.
இந்த வார ‘விஜயபாரதம்’ என்ற ஆர்.எஸ்.எஸ். வார இதழில் (14.2.2025) ஒரு கேள்வி பதில்.
கேள்வி: எதிரி பயம் கடன் தொல்லை, நிலப் பிரச்சினை தீர வழிபட வேண்டிய தெய்வம் எது?
பதில்: வராஹி அம்மன் ஆஷாட பெளர்ணமியன்று நடத்தும் பூஜையை விருப்பமுடன் ஏற்பவள். பஞ்சமி திதிக்கு உரியவள் வராஹி என்பதால் அவளுக்கு பஞ்சமி என்ற பெயர் உண்டு. பஞ்சமி அன்று விளக்கேற்றி நவ தானியங்களால் கோலமிட்டு வழிபட்டால் எதிரி பயம், கடன் தொல்லை தீரும், குடும்பத்தில் மகிழ்ச்சிக்குப் பஞ்சமிருக்காது.
(‘விஜயபாரதம்’ 14.2.2025 பக்கம் 35)
அறிவைப் பயன்படுத்து – உழைப்பால் முன்னேறு என்பதற்கு எதிரான பிரச்சாரம் அல்லவா இது!
ஆர்.எஸ்.எஸின் அரசியல் வடிவமான பிஜேபி தானே ஆட்சி நடத்துகிறது. மக்களிடம் வரி வசூல் செய்யாமல் வராஹி அம்மனுக்கு நாடெங்கும் கோயில் எழுப்பி, பூஜை செய்ய வேண்டியதுதானே!
இதோ இன்னொரு தகவல்.
கடன் தொல்லையை விரட்டும் விநாயகரின் மூல மந்திரம்
‘‘முழு முதற்கடவுளான விநாயகரை வழிபட வினைகள் அனைத்தும் தவிடு பொடியாகும். விநாயகர் மந்திரங்களை பிரம்ம முகூர்த்தத்தில் சொல்வது மிகவும் நல்லது என்றாலும், ஒரு நாளில் எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். ‘ஓம் நமோ பகவதே ஏகதம்ஷ்ட்ராய, ஹஸ்தி முகாய, லம்போதராய, உச்சிஷ்ட மகாத்மனே ஆம் ஹ்ரேம் ஹ்ரீம் கம் கேகே ஸ்வாஹா’ என்பதை உச்சரித்து வந்தால், விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. நினைத்த காரியம் கைக்கூடும்.’’
இப்படி ஒரு கேடு கெட்ட பரப்புரை!
இந்த வெட்கக் கேட்டில் இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப் பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்கிறது.
அப்படியானால் மேலே குறிப்பிடப்பட்ட மூடநம் பிக்கையைப் பிரச்சாரம் செய்யும் தன்னம்பிக்கையைத் தகர்க்கும் சக்திகளை, ஊடகங்களைத் தடை செய்ய வேண்டாமா?