அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாகச் செயல்படுகிறார்! சட்டமன்ற மாண்பைக் குறைக்கிறார்!
அத்துமீறும் தமிழ்நாடு ஆளுநர்!
சென்னை,பிப்.14– ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் வலுவான தலையங்கத்தினை சுட்டிக்காட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமது சமூக வலைதளத்தில் “அத்துமீறும் ஆளுநருக்குக் கண்டனம்” என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை என ‘தி இந்து’ நாளிதழின் வலுவான தலையங்கத்தில் எழுதியுள்ளதைச் சுட்டிக்காட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைதளப்பதிவில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
‘‘தமிழ்நாடு ஆளுநரின் அரசமைப்புச் சட்டத்திற்கு முரணான அத்துமீறல்களும், பா.ஜ.க தலைமையிலான ஒன்றிய அரசின் கீழ்த்தரமான ஒப்புதலும் உச்சநீதி மன்றத்தால் சரியாகவே வலியுறுத்தப்பட்டுள்ளன.
வலுவான வார்த்தைகள் கொண்ட தலையங்கம், தமிழ்நாடு ஆளுநர் தன்னிச்சையாக சட்டமன்றத்தின் மாண்பையும் மதிப்பையும் குறைக்கிறார் என்பதையும், பதவியில் தொடர அவருக்கு தார்மீக அதிகாரம் இல்லை என்பதையும் மீண்டும் வலியுறுத்துகிறது.
ஒன்றிய அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக…
இந்தியா முழுவதிலும் உள்ள முன்னணி செய்தித்தாள்கள் மற்றும் அரசமைப்பு வல்லுநர்களின் தொடர்ச்சியான கண்டனங்கள் மூலம் மாநிலத்தின் தலைவரான ஆளுநரோ, டில்லியில் உள்ள அவரது பாஜக எஜமானர்களோ எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்பது திகைப்பூட்டும் விஷயம். இடையூறு விளைவிக்கும் வகையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களின் அருவருப்பான மற்றும் அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானச் செயல்களை ஒழுங்குபடுத்துவதற்குப் பதிலாக, ஒன்றிய அரசு, அரசியல் எதிரிகளை பழிவாங்குவதற்காக இத்தகைய அதிகப்படியான செயல்களுக்கு வெகுமதி அளிக்கிறது’’ –என்று “தி இந்து” நாளிதழில் நேற்று (13.2.2025) வெளிவந்துள்ள தலையங்கத்தை மேற்கோள் காட்டி தனது ‘எக்ஸ்’ வலைதளப் பகுதியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிவிட்டுள்ளார்கள்.
‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்!
வேண்டுமென்றே விதிமீறலில் ஈடுபடும் தமிழ்நாடு ஆளுநரின் நடத்தை குறித்து ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டில் நேற்று (13.2.2025) எழுத்தப்பட்ட தலை யங்கம் வருமாறு:
இந்திய உச்சநீதிமன்றம் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எழுப்பிய கூர்மையான கேள்விகள், அவர் வேண்டுமென்றே தனது அரசமைப்புக் கடமை யில் இருந்து மீறியதை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளன. அவர் முன்பு “ஒப்புதல் வழங்காமல்” வைத்திருந்த சட்ட மசோதாக்களை, மாநிலச் சட்டமன்றம் மறுபடியும் நிறைவேற்றியபோது, அரசமைப்பின்படி அவற்றுக்கு ஒப்புதல் வழங்கவேண்டும் என்பதற்குப் பதிலாக, அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதன் சட்டபூர்வத்தன்மை தொடர்பான கேள்விகள் எழுப்பப்பட்டன.
சட்டமன்றம் மறுபடியும் நிறைவேற்றினால், அவற்றுக்குக் கட்டாயம் ஒப்புதல் வழங்க வேண்டும்
“சட்டப்பிரிவு 200-இன் முதல் விதியின்படி, ஒப்புதல் வழங்காமல் தவிர்ப்பதற்காகவே ஆளுநர் ரவி இந்தச் சட்ட மசோதாக்களைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்கிறாரா?” என நீதிமன்ற பெஞ்ச், அனை வரின் சார்பாகவும் கேள்வி எழுப்பியது. முன்பு, ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தால், அந்த மசோதாவின் ஆயுள் முடிந்ததாகக் கருதப்பட்டது. ஆனால், 2023-ஆம் ஆண்டு நீதிமன்றத் தீர்ப்பின்படி, ஆளுநர்கள் இப்படிச் செயல்படும்போது, அந்த மசோதாவைச் சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதும், சட்டமன்றம் மறுபடியும் நிறைவேற்றினால், அவற்றுக்குக் கட்டாயம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.
நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இந்தியத் தலைமை வழக்குரைஞர் “ஒன்றிய சட்டத்துடன் முரண்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது” எனக் கூறினார். குறிப்பாக, இந்தச் சட்டமசோதாக்கள் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் நியமன முறையை மாற்றுவதால், யுஜிசி விதிமுறைகளுடன் முரண்படும் என்பதால், ஆளுநர் அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பியது சரியானது என அவர் வாதிட்டார். மேலும், முன்னர் ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தபோது, அந்த மசோதாக்கள் செல்லுபடியாகாமல் போய்விட்டதாகவும், அவற்றை ஆளுநர் திருப்பி அனுப்பியதாகக் கருதிச் சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றியது எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், மசோதாவில் முரண்பாடு இருக்கிறதென்றால், அதைத் திருப்பி அனுப்பத் தேவை இல்லை என்றும் அவர் வாதிட்டார். ஆளுநர்கள் சட்டமசோதாக்களை எதிர்கொள்ளும் போது எந்த வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதில் இந்த வாதங்கள் ஆர்வமூட்டும் வகையில் இருக்கலாம். தீர்ப்பை வழங்கவுள்ள நீதிமன்ற அமர்வு இதற்கான பதில்களை வழங்கும் என எதிர்பார்க்கலாம். எனினும், சட்டங்களை முடக்குவதற்காக ஆளுநர் தனது அதிகாரங்களைப் பயன் படுத்தி வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.
இவற்றில் சில சட்டமசோதாக்கள் மீது அவர் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அத்தோடு, ஒப்புதல் மறுத்தபோது முரண்பாடு சார்ந்த அவரது கருத்துகளையும் வெளிப்படுத்தவில்லை. மேலும், சட்டமன்றம் அவற்றை இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பியபோது, அவற்றுக்குக் கட்டாயம் ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற சட்டக் கட்டுப்பாட்டையும் அவர் உதாசீனப்படுத்தி, அவற்றைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பினார்.
நீதிமன்றம் எழுப்பிய கேள்வி!
2023 ஆம் ஆண்டில் நடந்த ஒரு விசாரணையிலும், “ஆளுநர் ஒப்புதல்அளிக்காமல் நிறுத்தி வைக்கும் விருப்பத்தைத் தேர்வு செய்த பிறகு, அதே மசோதாவைக் குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் மற்றொரு தேர்வை பயன்படுத்தலாமா?” என்ற கேள்வியை நீதிமன்றம் எழுப்பியது. திரு. ரவி, தனக்கு ஏற்பில்லாத எந்தச் சட்டத்தையும் நிறைவேற விடாமல் தடுக்கும் நோக்கில் இருப்பது வெளிப்படையாகிறது. அவர் தனது பதவியில் தொடர்வதால் தமிழ்நாட்டில் அரசமைப்பு ஆட்சி முறைக்கு ஏற்படும் சவால்களை ஒன்றிய அரசு கவனிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.
இவ்வாறு ‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலை யங்கத்தில் கூறப்பட்டுள்ளது.