மதுரை,பிப்.14- மதுரை பெரியார் மய்யத்தில்,02.02.2025 அன்று மாலை 6 மணியளவில் பகுத்தறிவாளர் கழகமும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றமும் இணைந்து நடத்திய ‘மனித வாழ்வின் பெருமை எது?’ என்னும் நூல் அறிமுகக்கூட்டமும்,தமிழ் நாடு அரசின் சமூக சேவகர் விருதுபெற்ற ஏ.ராஜ்குமாரை பாராட்டும் நிகழ்வும் இணைந்து நடைபெற்றது.
அய்யாச்சாமிக்கு வீரவணக்கம்
நிகழ்வு தொடங்கியவுடன் முதல் நாள் மறைந்த பெரியாரின் பெருந்தொண்டர் விராட்டிபத்து அய்யாச்சாமிக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து அனைவரையும் வரவேற்று, மாவட்ட கழக செயலாளர் இரா.லீ. சுரேசு உரையாற்றினார்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலச்செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் இணைப்புரை வழங்கினார்.நிகழ்வுக்கு தலைமை ஏற்ற திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வே.செல்வம், விருது பெற்றிருக்கும் ஏ.ராஜ்குமாரின் பல்வேறு சிறப்புகளைக்குறிப்பிட்டு சிறப்பாக அவரை அவைக்கு அறிமுகப்படுத்தி, பொன்னாடை போர்த்தினார். மதுரை மாநகர் மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் வீர.பழனிவேல்ராசன், இராக்கு, போட்டோ இராதா, நா.முருகேசன் உள்ளிட்ட பலர் ராஜ்குமாருக்கு பொன்னாடை போர்த்திச் சிறப்பு செய்தனர்.
ராஜ்குமாரை பாராட்டி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.
அவர் தனது உரையில் “,தமிழ் நாடு அரசின் சிறந்த சமூக சேவகர் விருதினை ஏ.ராஜ்குமார் பெற்றிருக்கிறார்.பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.,”ராஜ்குமார் MSW எனப்படும் சமூகவியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர். சமூகவியல் பட்டம் பெற்ற பலரும் அதை வெறும் பாடமாகப் படித்திருப்பார்கள். ஆனால் ராஜ்குமார் தன் வாழ்க்கையாக எடுத்துக்கொண்டு மற்றவர்களுக்கு உதவக்கூடியதே தன் வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்.
170 முறைக்கு மேல்
குருதி கொடுத்தவர்
இப்படிப்பட்ட மனித வாழ்க்கையைப் பற்றித்தான் தந்தை பெரியார் அவர்கள் ‘மனித வாழ்க்கையின் பெருமை எது?’ என்று எழுதியிருக்கிறார். என்னுடைய இதய மருத்துவ சிகிச்சையின்போது பெரியார் திடலைச் சார்ந்த நம் தோழர்கள் 8 பேர் வந்து சென்னையில் குருதி கொடுத்தார்கள். குருதி தேவையின் போது எவ்வளவு அலைகின்றோம்! அதற்கெல்லாம் மதுரையில் பெரிய வழிகாட்டியாக தோழர் இராஜ்குமார் இருக்கிறார். அவரே 56 முறை குருதி கொடுத்திருக்கின்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாவட்டச் செயலாளராக இருந்த ம.ஜோசு 170 முறைக்கு மேல் குருதி கொடுத்தவர். அவர் மதுரை செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர். இன்றைய விருந்தினர் இராஜ்குமார் செயலாளர். மிக அரிதாகக் கிடைக்கக் கூடிய குருதி வேண்டும் என்றால் நம்முடைய இராஜ்குமார் மூலமாகத்தான் மதுரை, மதுரையை சுற்றியுள்ள நோயாளிகளுக்குக் கிடைக்கிறது.
ஜல்லிக்கட்டு
பசுமை வளர்ப்போம் என்னும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கூட்டங்கள் போன்றவற்றில் கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரங்களில், காளைகளினால் காயம்படும் இளைஞர்களைக் காப்பாற்ற களத்திற்குள் ஓடி அவர்களை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பதில் இவரின் பங்கு பெரும்பங்கு.அன்னை தெரசா அவர்கள் பணியாற்றியதுபோல தெருவோரும் கிடக்கும் மனிதர்களைக் காப்பாற்றி அவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செய்யக் கூடியவர். இத்தனை பணிகளைச் செய்யும் ராஜ்குமார் ஒரு பகுத்தறிவாளர் என்பதில் நமக்கெல்லாம் பெருமை.அவரைப் பாராட்டி மகிழ்கின்றோம் என்று முனைவர் வா.நேரு உரையாற்றினார்.
‘மனித வாழ்க்கையின் பெருமை எது?’
தொடர்ந்து ‘மனித வாழ்வின் பெருமை எது?’ என்னும் தந்தை பெரியாரின் நூலினை அறிமுகப்படுத்தி உளவியல் வல்லுநர் வெண்ணிலா மகேந்திரன் உரையாற்றினார்.
தொடர்ந்து தனது ஏற்புரையை ராஜ்குமார் அவர்கள் நிகழ்த்தினார். பாராட்டியமைக்கு நன்றி தெரிவித்த அவர் நெகிழ்ச்சியாக பல்வேறு நிகழ்வுகளை அரங்கில் பகிர்ந்து கொண்டார்.இறுதியாக பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்டத்தலைவர் நா.மணிகண்டன் நன்றி கூறினார்.ஏராளமான இயக்கத்தோழர்கள் கலந்து கொண்ட நிகழ்வாக இது அமைந்தது.