அந்நாள் – இந்நாள் (14.2.1932) மாஸ்கோ சென்றடைந்தார் தந்தை பெரியார்

viduthalai
3 Min Read

பெரியாரின் வாழ்க்கை வரலாறு அய்ரோப்பியப் பயணம்

கொழும்பிலிருந்து சூயஸ் கால்வாய், கெய்ரோ, ஏதென்சு, கான்ஸ்டான்டிநோபிள் வழியாக சோவியத் யூனியன் சென்றார் பெரியார். பின்னர் ஜெர்மனி, பிரான்சு, ஸ்பெயின், போர்ச்சுகல், இலங்கை வழியாக இந்தியா திரும்பினார். இருப்பினும் அவர் சோவியத் நாட்டுக்குச் சென்றதே இந்த ஓராண்டுப் பயணத்தின் முக்கியப் பகுதியாகும்.

இந்தப் பயணத்தின்போது ஒரு நாள்குறிப்பை பெரியார் எழுதியிருந்தார். அவர் காலத்திலேயே அதிலிருந்து சில பகுதிகள் அச்சில் வந்தன. அப் பயணம் தொடர்பான பல புகைப்படங்களும் கிடைத்துள்ளன.

சோவியத் பயணம்

சோவியத் பயணத்துக்கு முன்பாகவே, ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’யின் முற்பகுதியை பெரியார் தமிழில் வெளியிட்டார். எஸ்.ராமநாதன், பெரியாருடைய உறவினர் ராமு ஆகியோர் இப்பயணத்தில் பெரியாரோடு சென்றனர்.

ஏதென்சு நகரில் சோவியத் அரசின் அனுமதிக்காக இரு வாரங்கள் அவர்கள் காத்திருந்தனர். 1932 பிப்ரவரி 2இல் அனுமதி கிடைத்தது. சிட்செரின் என்ற நீராவிக் கப்பலில் சென்றனர். கடல்காய்ச்சலால் அல்லலுற்று, கருங்கடலைக் கடந்து ஓடெஸ்ஸா துறைமுகத்தை அடைந்தனர். அங்கிருந்து கீவ் நகருக்கு ரயிலில் சென்று இறுதியாக பிப்ரவரி 14இல் மாஸ்கோவை அடைந்தனர்.
வெளிநாடுகளுடனான கலாச்சார உறவுக்கான அனைத்து ஒன்றிய சங்கத்திடம் தமது வருகையைப் பதிவுசெய்தார் பெரியார். பயணத்தின் முதல் இரு மாதங்கள் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

மாஸ்கோ நகரில் செஞ்சதுக்கத்தில் லெனின் நினைவிடத்துக்குச் சென்றார் பெரியார். அஜர்பை ஜானின் பாகு பகுதியில் எண்ணெய் வயல்கள், அப்கா ஸியா பகுதியில் சுகுமி, ஜார்ஜியாவில் திபிலிசி ஆகிய இடங்களுக்கும் அவர் சென்றார். லெனின்கிராடு தவிர நிப்ரோஸ்த்ராய், ஜப்போருஷியா ஆகிய இடங்களில் இருந்த மாபெரும் புனல் மின்நிலையங்களையும் அவர் பார்வையிட்டார்.
ஏப்ரல் 19இல் மாஸ்கோ திரும்பிய பிறகு அடுத்த 30 நாட்களில் என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள பெரியாரின் நாள்குறிப்பேடு துணையாகிறது. நாத்திகச் சங்கம் அவருடைய பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரியாரும் லீக் அமைப்பினரும் சில கடிதங்கள், ஆவணங்கள், புத்தகங்களைப் பகிர்ந்து கொண்டனர். ஜெர்மனியைச் சேர்ந்த சுதந்திரச் சிந்தனையாளர் சங்கத்தின் கடிதமும் சங்கத்தின் வெளியீடுகளும் அதில் அடங்கும்.

பெரியாரும் அவரது நண்பர்களும் எங்கு சென்றாலும் உற்சாகமாக வரவேற்கப்பட்டனர். பொருளாதாரப் பெருமந்தத்தில் மேலை நாடுகள் உழன்றுகொண்டிருந்த வேளையில், சோவியத் நாட்டின் வளர்ச்சி கண்டு அவர்கள் மலைத்தனர். மாஸ்கோ நகரில் நடந்த மக்கள் நீதிமன்ற நடவடிக் கைகளை பெரியார் பதிவுசெய்துள்ளார்.

லெஃபோர்டோவா என்ற இடத்திலிருந்த சிறையையும் பெரியார் பார்த்தார். ரஷ்யாவின் உளவு அமைப்புக்கு நெருக்கமான இந்தச் சிறையில்தான் ஸ்டாலின் சர்வாதிகாரியாக இருந்தபோது அரசுக்கு எதிரானவர்கள் என்று அடையாளம் காணப்பட்டவர்கள் வதைக்கு உள்ளாயினர். மாஸ்கோவிலிருந்த மோட்டார் வாகன நிறுவனத்துக்கும் பெரியார் சென்றார். அங்கிருந்த பிரம்மாண்டமான பொதுச் சமையலறையும் உணவுக் கூடமும் பெரியாரை மிகவும் கவர்ந்தன. சர்வதேசத் தொழிற்சங்க அலுவலகம் சென்று அங்கிருந்தவர்களுடன் அவர் கலந்துரையாடினார்.

மே தினப் பேரணியில் பெரியார்

மே தினத்தன்று மாஸ்கோ நகரில் பெரியார் இருந்தார். தொழிலாளர்களின் உற்சாகம் மிகுந்த கொண்டாட்டத்தை நேரில் கண்டு பரவசமானார். அவை மாரியம்மன் கோயில் திருவிழாக் காட்சிகளை அவருக்கு நினைவூட்டினவாம்! ஸ்டாலின், மிகைய்ல் காலினின், யெமல்யான் யரோஸ்லாவ்ஸ்கி போன்ற முக்கியத் தலைவர்கள் லெனின் நினைவிடம் அருகில் மேடையில் நின்றபடி மே தினப் பேரணியைப் பார்வையிட்டனர். ஊர்வலத்தில் வந்த மக்களைப் பார்த்துக் கையசைத்தனர். அந்த ஆண்டு துருக்கி பிரதமர் இஸ்மெட் இனோனு அரசு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

சில நாட்களுக்குப் பிறகு கிரெம்ளின் மாளிகையில், மே நாள் நிகழ்ச்சிக்காக வந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு வரவேற்பும் விருந்தும் அளிக்கப் பட்டன. பழைய போல்ஷ்விக்குகள் ஏற்பாடு செய்திருந்த அக்கூட்டத்துக்குப் பெரியாரும் அழைக் கப்பட்டிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவன உறுப்பினரான அபானி முகர்ஜியையும் மாஸ்கோவில் பெரியார் சந்தித்தார்.
1932 ஏப்ரல் மாத இறுதியில் சோவியத் பயணத்தை முடித்துக்கொள்வது பற்றி அவர் பேசலானார். அதற்கான காரணம் புலப்படவில்லை. சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பெரியார் தொடர்பில் இருந்தாலும், அனைத்து ஏற்பாடுகளையும் நாத்திகர் சங்கமே கவனித்துக் கொண்டது.

பெர்லின் நகருக்குப் பெரியார் செல்வது மே 14இல் உறுதியானது. பயண அனுமதி ஆவணங்கள் மே 17இல் கிடைத்தன. பெரியார் உடனே மாஸ்கோவிலிருந்து புறப்பட்டார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *