தமிழ்ச் சமூகம் இழந்த உரிமைகளை மீட்டுத் தந்தவர் தந்தை பெரியார் – பேச்சரங்கத்தில் புகழாரம்!

2 Min Read

தூத்துக்குடி, பிப். 13- தூத்துக்குடி உண்மை வாசகர் வட்டம் 36ஆவது நிகழ்ச்சி ‘பேச்சரங்கம்’ நிகழ்வாக நடைபெற்றது. 8.2.2025 அன்று மாலை 5.30 மணியளவில், ‘பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் சமூகநீதி என்றாலே பெரியார் தாம்’ என்ற தலைப்பில், பெரியார் மய்யப் பொறுப்பாளர் சு.காசி தலைமையில், மாவட்டப் பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் சி.மோகன்தாஸ் வரவேற்புரையுடன் தொடங்கியது.
தி.மு.க. கலை, இலக்கிய அணி மாவட்டத் துணை அமைப்பாளர் மோ.அன்பழகன், “மனுதர்மம், பார்ப்பனரல்லாதார்க்கு வழங்கிய அநீதிகள், பெண் குழந்தைகளை ‘விதவை’ என்ற அலங்கோலத்தில் வருந்தச் செய்த அநீதிகள், உடன்கட்டை ஏற்றி உயிர்ப் பலியாக்கிய அநீதிகள், கல்வி கற்றலை மறுத்து, வேலைவாய்ப்பினையும் மோசடியாய்ப் பறித்துக் கொண்ட அநீதிகளையும் எடுத்துக்கூறி அத்தனை அநீதிகளுக்கும் சரியான நீதி கிடைத்தது தந்தை பெரியார் எடுத்த முடிவால்தான்” என்று தொடக்கவுரையாற்றினார்.

புரட்சிப் பெண்களாக…
அடுத்து, மாவட்டத் துணைத் தலைவர் இரா.ஆழ்வார், “தந்தை பெரியாரால் தான் நம் சமூகம் முன்னேற்றம் கண்டது. இந்தக் கருத்துகளை நம் தோழர்களின் இல்லந்தோறும் சென்று கூட்டம் நடத்தி எடுத்துரைப்போம்” என்றார். தொடர்ந்து மாவட்டப் பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் சொ.பொன்ராஜ், “ஆங்கிலம் படி என்று வழிகாட்டியதால் தான் இன்று நம் தமிழ்ச் சகோதரர்கள் உலக நாடுகளில் முறையாகப் பணியாற்றி மேம்பாடு அடைந்து வருகிறார்கள். அடிமைப்பட்டுக் கிடந்த பெண்கள் இன்று அடிமை நிலை ஒழிந்து, புரட்சிப் பெண்களாகத் துறைதோறும் பெருந்திரளாகப் பணியாற்றி வருகிறார்கள்,” என்று தந்தை பெரியாரின் சீரிய சிந்தனை முடிவுகள் சமூகத்திற்கு அளித்த நீதியை எடுத்துரைத்தார். அதற்கடுத்து, பகுத்தறிவாளர் கழகத் தோழர் சீ.மனோகரன், “சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்ட நோக்கம் நிறைவேறாது சிதைய வேண்டும், திராவிடர் சமூகத்திற்கு நீதி கிடைத்திடக் கூடாது என்ற சூழ்ச்சியோடு பலர் உள்குத்தில் ஈடுபட்டச் சூழலைத் தெரிந்து கொண்ட தலைவர் பெரியார் அவர்கள் இயக்கத்தைக் காத்திட செய்யப்பட்ட ஏற்பாடுதான் அன்னை மணியம்மையாரைத் இணையராக ஆக்கிக் கொண்டது.
அய்யாவின் ஆயுளும் நீண்டு, இயக்கச் செயல்பாடும் கூடுதலாகிக் களையப்பட்ட அதீதிகளைப் பல பக்கங்களில் பட்டியலிடலாம்,” என்று எடுத்துக் கூறினார்.

இழந்த உரிமைகளை மீட்டு தந்தவர் பெரியார்
இறுதியாகச் சிறப்புரையாக வாசகர் வட்டச் செயலாளர் மா.பால் ராசேந்திரம், “ஜாதி இழிவால் தமிழ்ச் சமூகம் பெற்ற அநீதிகளையும், இழந்த உரிமைகளையும் மீட்டுத் தந்த தலைவர் தான் தந்தை பெரியார் அவர்கள். பெண்ணுரிமை என்பது என்ன வரையறை கொண்டது? கடவுள் பெயரால் நடந்த அநீதிகள், மொழித்திணிப்பின் வெறித்தனம், மதம் சார்ந்து செயல்படும் மதம்பிடித்த அரசியல், ஆங்கிலப் படிப்பால் தமிழர் பெற்றிடும் வளர்ச்சிகள், ஆட்சிகளை ஆதரிப்பதால் சமூகத்திற்குக் கிடைத்த நன்மைகள், எண்ணிக்கையில் குறைவான பார்ப்பனர்களை எதிர்ப்பதன் நோக்கம், தன்னைப் பழித்தோரையும் நாணும்படித் தவறை உணர வைத்த விதம், ஆத்திகம், நாத்திகம் பற்றிய எளிமையான விளக்கம்” என தந்தை பெரியார் சொன்ன கருத்துகளைக் குறுகிய நேரத்தில் எடுத்துக் கூறினார்.
பெ.இராமசெல்வேந்திரன் நன்றி கூறப் பேச்சரங்கம் இரவு 8.20 மணியளவில் நிறைவுபெற்றது. கி.கோபால்சாமி, த.பெரியார் தாசன், சி.மணிமொழியன், சு.திருமலைக்குமரேசன், சே.விவேகானந்த கிளிண்டன், செ.நவீன்குமார், கழக இளைஞரணி மாநிலச் செயலாளர் நாத்திக பொன்முடி, பொ.போஸ் ஆகிய தோழர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *