சென்னை, பிப். 13 மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் வழங்க தமிழ்நாட்டில் 100 இடங்களில் ‘முதல்வர் மருந்தகங்களை’ வரும் 24-ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
முதல்வர் மருந்தகங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2024-ஆம் ஆண்டு ஆக.15-ஆம் தேதி சுதந்திர நாள்விழா உரையில், மூலப் பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில் முதல்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்கப்படும் என அறிவித்தார். அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பி.பார்ம், டி.பார்ம் படித்தவர்கள் அல்லது அவர்களின் ஒப்புதல் பெற்றவர்கள் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarundhagam.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட்டு உரிமங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் 33 இடங்கள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்களை வரும் 24-ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாகவும், சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிமுகவின் தேர்தல் சின்னம் பற்றி தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
உயர்நீதிமன்றம் தீர்ப்பு
சென்னை, பிப்.13 அதிமுக பொதுச்செயலாளர் பதவி, இரட்டை இலை சின்னம் உள்ளிட்ட அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்து உள்ளது.
தடைவிதிக்க கோரி மனு
அதிமுக பொதுச்செயலாளராக பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஏற்கக் கூடாது எனவும், உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை கட்சிக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது எனவும் கோரிக்கை விடுத்து அனுப்பப்பட்ட மனுக்களை தேர்தல் ஆணையம் விசாரிக்க தடை விதிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதித்து உத்தர விட்டிருந்தது. இந்த தடையை நீக்க கோரி மேனாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவீந்திரநாத் மற்றும் புகழேந்தி, கே.சி.பழனிச்சாமி ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (12.2.2025) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் ஆணைய விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டனர். தேர்தல் ஆணையம், சின்னம் ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் விசாரணையை தொடர அனுமதித்த நீதிபதிகள், மனுக்களை விசாரிக்க அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து திருப்தியடைந்த பிறகே விசாரணையை துவங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர்.மேலும், தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்கக் கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை தள்ளுபடி செய்து பிறப்பிக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்ற உத்தரவு, அவருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
பாலியல் துன்புறுத்தல்
14417 உதவி எண்ணில் புகார் கொடுக்கலாம்
கல்வித்துறை தகவல்
சென்னை, பிப். 13 கல்வி தொடர்பாக மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் எந்தவிதமான சந்தேகங்களையும் கேட்டுத் தெளிந்து கொள்ள கடந்த 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பில் ஒரு 24 மணி நேர இலவச வழிகாட்டி மய்யம் தொடங்கப்பட்டது.
இதனிடையே, தமிழ்நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், மனம், உடல் மற்றும் பாலியல் சார்ந்த துன்புறுத்தல்கள், பாதுகாப்பற்ற சூழல்கள், அச்சுறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகாரளிக்க 14417 என்ற உதவி மய்ய எண்ணை அணுகலாம் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புகார்கள் தெரிவிப்பவர்களின் ரகசியம் காக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்வு மற்றும் உயர்கல்விக்கான வழிகாட்டுதலும் இந்த எண்ணில் தொடர்புகொண்டால் கிடைக்கும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு
பணப் பலன் வழங்க ரூ.396 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, பிப்.13 அரசு போக்கு வரத்துக் கழகங்களில் பணியாற்றி, ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் வழங்க, 396 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஓய்வு பெற்றவர்களுக்கு வழங்க வேண்டிய வருங்கால வைப்புநிதி, பணிக்கொடை, விடுப்பு ஓய்வூதியம் ஓய் வூதிய ஒப்படைப்புத் தொகை போன்றவை இன்னும் வழங்கப்படாமல் உள்ளன. தமிழ்நாடு முழுவதும் 8,000க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். அவர்களுக்கான பணப்பலன்களை தற்போது, அரசு படிப்படியாக வழங்கி வருகிறது. நேற்று (12.2.2025) போக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றி, 2023ஆம் ஆண்டு மே மாதம் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, உயிரிழந்தவர்களுக்கான பணப்பலன் வழங்க, 396.09 கோடி ரூபாய் நிதியுதவி ஒதுக்கி, அரசாணை வெளியிட்டுள்ளது.