அறிவியல் மனப்பான்மையால்தான் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்தார்கள்!
இவை அத்தனையும் செய்வதுதான் சுயமரியாதை இயக்கம்!
பெரியார் நூலக வாசகர் வட்ட சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை
சென்னை, பிப்.12 ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் உண்டாகும்; மாறுதல்தான் அறிவியல். மாறுதல்தான் வளர்ச்சிக்கு அடையாளம். அறிவியல் மனப்பான்மையால்தான் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்தார்கள். இவை அத்தனையும் செய்வதுதான் சுயமரியாதை இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘அறிவியல் மனப்பாங்கும் –
நாட்டின் முன்னேற்றமும்’’
சிறப்புக் கூட்டம்!
கடந்த 6.2.2025 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் பெரியார் நூலக வாசகர் வட்டம் சார்பில், ‘‘அறிவியல் மனப்பாங்கும் – நாட்டின் முன்னேற்றமும்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
மிகக் குறுகிய காலத்தில், எழுச்சியோடு பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ‘‘அறிவியல் மனப்பாங்கும் – நாட்டின் முன்னேற்றமும்’’ என்ற தலைப்பில் நடைபெறக்கூடிய இக்கூட்டத்திற்கு வந்தி ருக்கக்கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கே 5, 6 புத்தகங்கள் சிறப்பாகவெளியி டப்பட்டன. திடீரென்று அறிவித்து வெளியிடப்பட்டு உள்ள காரணத்தினால், இவற்றை வாங்க வாய்ப்பில்லாத வர்களும் இருப்பார்கள். அருள்கூர்ந்து பிறகாவது இப்புத்தகங்களை வாங்கிப் படியுங்கள், பரப்புங்கள்!
புத்தகங்கள்மூலமாக பரப்புரை என்பது காலத்தின் கட்டாயம்!
அரை மணிநேரம், ஒரு மணிநேரத்தில் நம் கருத்துகளைச் சொல்வதைவிட, புத்தகங்கள்மூலமாக இந்தக் கருத்துரைகளை ஆழமாகப் பரப்புவது என்பது காலத்தின் கட்டாயமாக இன்றைக்கு இருக்கிறது.
எங்கு பார்த்தாலும் மூடநம்பிக்கை – எங்கு பார்த்தாலும் பழைய இருண்ட காலத்திற்கே நம்மை அழைத்துப் போகக்கூடிய ஒரு கொடுமையான நிகழ்வுகள் – அன்றாட நிகழ்வுகளாக மாறிக் கொண்டிருக்கக்கூடிய காலகட்டத்தில், ஏன் அறிவியல் மனப்பாங்கு வரவேண்டும்? என்பதை எனக்கு முன்பாக உரையாற்றிய வீரமர்த்தினியானாலும், கழகத்தின் துணைத் தலைவரானாலும் மிக அழகாக எடுத்துச் சொன்னார்கள்.
பகுத்தறிவுப் பணியை முழுநேரப் பணியாக செய்து கொண்டிருக்கின்ற இயக்கம்!
வாசகர் வட்டத் தலைவர் அவர்கள் இங்கே குறிப்பிட்டதைப்போல, இந்தப் பணியை முழு நேரப் பணியாக செய்துகொண்டிருக்கின்ற ஓர் அமைப்பு, இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே என்றுகூட சொல்லலாம்.
ஏனென்றால், இந்தப் பணியை செய்பவர்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருப்பார்கள். முழுநேரப் பணியாக யாரும் செய்யக்கூடியவர்கள் அல்ல, நம்மைத் தவிர.
வெறும் பரப்புரையோடு நாம் போய்விடுவதில்லை; களப் பணி முதற்கொண்டு செய்கின்றோம்.
ஏதோ கூடினார்கள்; பேசினார்கள்; ஆய்வு செய்தார்கள்; கலைந்தார்கள் என்பதல்ல.
அறிவார்ந்த அறிவுறுத்தலை அன்றாடம் பரப்பிக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம்!
மக்கள் பிரச்சினையோடு இணைத்து, மக்களுக்கு ஓர் அறிவார்ந்த அறிவுறுத்தலை அன்றாடம் பரப்பிக் கொண்டிருக்கின்ற ஓர் இயக்கம் – தந்தை பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கம் – அதனுடைய நூற்றாண்டு இந்த ஆண்டு.
இன்றைய திராவிடர் கழகம், அன்றைக்கு நீதிக்கட்சி யாக – அரசியல் கட்சியாக அதனுடைய கால்களை வைத்திருந்தாலும், இன்னொரு பக்கத்தில் நம் சமூகத்திற்குப் பாதுகாப்பாக இருப்பது.
ஆகவே, இந்த சூழ்நிலையில், நமக்கு முழுக்க முழுக்க அறிவியல் மனப்பான்மை என்பது மிகமிக முக்கியம்.
இல்லை என்பதுதான் கசப்பான பதில்!
நம்முடைய நாட்டில் அரசியலில்கூட என்ன சிக்கல் என்று சொன்னால், வாக்கு வங்கி அரசியல். இந்த வாக்கு வங்கி அரசியலில்கூட, அறிவியல் ஆளு மையை நிலைநாட்டுகின்ற பணியை முழுமையாக, தயக்கமில்லாமல், மன ஒதுக்கீடு இல்லாமல் செய் யக்கூடிய அளவில் இருக்கின்றோமா என்று கேட்டால், இல்லை என்பதுதான் கசப்பான பதிலாகும்.
உண்மையைச் சொல்லவேண்டும்.
அந்த வகையில், பதவியேற்கும் பஞ்சாயத்துத் தலைவரிலிருந்து குடியரசுத் தலைவர் வரையில், அரசமைப்புச் சட்டத்தின்மீதுதான் பிரமாணம் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி எடுக்கவில்லை என்றால், அந்தப் பதவி செல்லாது.
மற்றபடி, அரசமைப்புச் சட்டத்தைப் படித்து முடித்து, அதனுடைய கருத்துகளை உள்வாங்கி, குறைந்தது அதனுடைய சாரத்தையாவது உள்வாங்கிக் கொள்கி றார்களா? என்றால், கேள்விக்குறிதான்.
அரசமைப்புச் சட்டத்தினால் நன்மைகள்தான் அதிகம்!
எப்படியோ, எத்தனைக் குறைபாடுகள் இருந்தாலும், அரசமைப்புச் சட்டத்தினால் நன்மைகள்தான் அதிகம்.
சில நோய்களால்கூட, ஒரு சில நன்மைகள் உண்டு. கோவிட் தொற்றுக் காலகட்டத்தில்கூட நிறைய தொல்லைகள் இருந்தன. ஆனால், அதற்கு ஒரு மருந்தை கண்டுபிடிக்கின்ற வாய்ப்பு என்பது தவிர்க்க முடியாததாக இருந்தது.
நெருக்கடி காலத்தில் நாங்கள் எல்லாம் ‘மிசா’ கைதிகளாக சிறைச்சாலையில் இருந்தோம். ஒரு பெரிய பாலைவனத்தில், சோலைவனம் போன்று ஒன்று கிடைத்தது. அதுதான் அரசமைப்புச் சட்டத் திருத்தம்.
51-ஏ பிரிவில், அன்றைக்கு அடிப்படை உரிமைகள் என்பதை மட்டுமே வற்புறுத்தினார்கள். ஆனால், அந்த நெருக்கடி காலத்தில், இன்னொன்றை அதனோடு இணைத்தார்கள். 51-ஏ பிரிவில், ‘‘அடிப்படைக் கடமை கள்” என்று சொன்னார்கள்.
உரிமைகளை வலியுறுத்தக்கூடிய உரிமை உண்டு!
உரிமைகளை வலியுறுத்தக் கூடிய ஒரு சமுதா யத்திற்கு, எப்பொழுது அந்த உரிமைகளை வலியு றுத்தக்கூடிய உரிமை உண்டு என்ற ஒரு கேள்வியைப் போட்டுப் பார்ப்போமேயானால், அடிப்படைக் கடமை களை அவர்கள் நிறைவேற்றி இருக்கவேண்டும்.
கடமையும், உரிமையும் ஒன்றுக்கொன்று பிணைந்தவை. யார் கடமையாற்றுகிறார்களோ, அவர்க ளுக்குத்தான் உரிமை கொண்டாட நியாயம் உண்டு.
அடிப்படைக் கடமைகள் என்ற ஒரு பகுதியைத்தான் நாம் எல்லா இடங்களிலும் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்தோம்.
It shall be the duty of every citizen of India;
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுடைய கட்டாயக் கடமை இது.
இங்கே வழக்குரைஞர்கள், பேராசிரியப் பெருமக்கள், கல்வி அறிஞர்களைக் கொண்ட அறிவார்ந்த அவை இந்த அவை. ஆகவே,
விரிவாக விளக்கவேண்டிய அவசியமில்லை.
அந்த வாசகங்கள் மிகவும் முக்கியமானவை. சட்டத்தின் வலிமை ஒரு பக்கம். அரசமைப்புச் சட்டம் என்பது அடிப்படைச் சட்டம். அதனுடைய தன்மையில், மிக முக்கியமான வார்த்தைகளைப் போட்டிருக்கிறார்கள்.
“It shall be the duty of every citizen of India to develop the scientific temper, humanism and the spirit of inquiry and reform.’’
எதற்காக அறிவியல் மனப்பான்மை வேண்டும்?
அறிவியல் மனப்பான்மை, மனிதநேயம், விசாரணை மற்றும் சீர்திருத்த உணர்வை வளர்ப்பது ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமையாகும்.
எதற்காக அறிவியல் மனப்பான்மை வேண்டும்? அறிவியலுக்காக அல்ல.
நாம் பெரிய அளவிற்குப் படித்துவிட்டோம்; மேதாவி யாக இருக்கிறோம்; ஆய்வறிஞராக இருக்கிறோம் என்கிற ஒருவருடைய தனிப்பட்ட பெருமைக்காக அல்ல.
மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு!
அடுத்ததாக மனிதநேயம் என்பது மிகவும் முக்கி யம். அதுவும் சமுதாயத்தில், மனித சமுதாயத்தில் வாழ்கி றோம். மனிதனுக்கு மட்டும்தான் பகுத்தறிவு உண்டு – ஆறறிவு உண்டு. அவர்கள்தான் கூட்டுச் சமுதாயத்தில் வாழ்கிறார்கள். மனிதர்கள்தான் வளருகிறார்கள்.
பகுத்தறிவினுடைய சிறப்பைப்பற்றி தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாகவும், எளிமையாகவும் சொல்வார். மற்றவர்கள் எல்லாம் பெரிய பெரிய தத்துவங்களைப் புரியாத வார்த்தைகளில் சொல்வார்கள்.
பகுத்தறிவு என்றால் என்ன?
கேள்வி கேட்டு, சிந்திப்பது. அதனுடைய முடிவுதான் சீர்திருத்தம்.
தந்தை பெரியாரின் எளிமையான விளக்கம்!
இதற்கு விளக்கம் சொல்லும்பொழுது தந்தை பெரியார் அவர்கள், ‘‘இன்றைக்குக் குருவி கூடு கட்டுவதைப் பார்த்திருப்பீர்கள். 2000 ஆண்டு களுக்கு முன்பு இருந்த குருவி எப்படி கூடு கட்டியதோ, அதேபோன்றுதான் இன்றைக்கு இருக்கின்ற குருவியும் கூடு கட்டுகிறது. ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மனிதன் கட்டிய வீட்டிற்கும், இன்றைய மனிதன் கட்டுகின்ற வீட்டிற்கும் எவ்வளவு மாறுதல் இருக்கிறது என்பதைப் பார்த்திருப்பீர்கள். இதுதான் வளர்ச்சி, இதுதான் பகுத்தறிவினுடைய சிந்தனை’’ என்றார்.
ஒரு காலத்தில் நாமெல்லாம் பத்திரம் எழுதும்போது, அசையும் சொத்துகள் – சாவர சங்கம சொத்துகள் என்று பழைய காலத்தில் எழுதுவார்கள். சுக ஜீவனம், கஷ்ட ஜீவனம் என்றெல்லாம் எழுதுவார்கள்.
அசையும் சொத்துகள் – அசையா சொத்துகள் என்று சொல்வார்கள்.
கட்டடம் அசையும் சொத்தா?
அசையா சொத்தா?
வீடுகள், கட்டடங்களையெல்லாம் அசையா சொத்துகள் என்று சொல்வார்கள். ஆனால், இன்றைய அறிவியலின் வளர்ச்சியால், ரஷ்யாவில் ஒரு கட்டடத்தை அப்படியே தூக்கி இன்னொரு பக்கத்தில் வைக்கிறார்கள். அப்பொழுது கட்டடம் அசையும் சொத்தா? அசையா சொத்தா?
மாறுதல்தான் வளர்ச்சிக்கு
அடையாளம்!
ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறுதல் உண்டா கும். மாறுதல்தான் அறிவியல். மாறுதல்தான் வளர்ச்சிக்கு அடையாளம்.
ஆகவே, அறிவியல் மனப்பான்மையால்தான் ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்தார்கள்.
இவை அத்தனையும் செய்வதுதான் சுயமரி யாதை இயக்கம். அன்றாடம் திராவிடர் கழகப் பொதுக்கூட்டத்தில் இந்தக் கேள்வியைத்தான் கேட்கிறார்கள்.
கேள்வி கேட்கும்பொழுது பகுத்தறிவாளர்களுக்கே கூட என்ன சிக்கல் என்றால், இதுவரையில் போவேன், ஆனால், அந்த இடத்திற்கு மட்டும் போகமாட்டேன்; கேள்வி கேட்பேன், சிந்திப்பேன். ஆனால், கடவுள்பற்றி என்று சொன்னால், ‘‘அது வேண்டாம். பெரியார் சொன்ன எல்லாவற்றையும் ஒப்புக்கொள்கிறோம். கடவுளைப்பற்றி சொன்னவைதான் எங்களுக்குச் சங்கடமாக இருக்கிறது’’ என்கிறார்கள்.
கடவுள் மேல் பெரியாருக்குக் கோபமோ, பகையோ, சண்டையோ கிடையாது!
கடவுள் மேல் ஒன்றும் பெரியாருக்குக் கோபமோ, பகையோ, சண்டையோ கிடையாது. இருக்கின்ற வர்மேல்தானே கோபம் வரும் – இல்லாதவர்மேல் கோபம் எப்படி வரும்?
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ஒவ்வொன்றாகக் கேள்வி கேட்டுக்கொண்டு வரும்பொழுது, அந்தக் கேள்வியினுடைய தவிர்க்க முடியாத ஒரு பாகமாக இந்நிலை வருகிறது.
இரண்டாவது, எது தடையாக இருக்கிறது என்றால், ஜாதி.
அந்த ஜாதியைக் காப்பாற்றுவது எது என்று வரிசையாகக் கேட்டுக் கொண்டே வருகிறார், பெரியார்.
கடைசியில் எங்கே கொண்டு போய் முடிக்கிறார்கள் என்றால், இது கடவுள் செய்த ஏற்பாடு. மனிதர்கள் செய்த ஏற்பாடு அல்ல என்றார்கள்.
மனிதர்கள் செய்த ஏற்பாடாக இருந்தால், அதை மாற்றுவதற்கு ஒப்புக்கொள்வார்கள். கடவுள் செய்த ஏற்பாடு என்றவுடன், அங்கே போகக்கூடாது என்று நினைத்தார்கள்.
ஆகவே, பகுத்தறிவுக்கு இதுவரையில் போகலாம் என்ற ஒரு நிலை இருக்கலாம். ஆனால், அறிவியல் மனப்பாங்கு என்பது அப்படியல்ல.
அறிவியல் தத்துவமாக உருவாகிறது!
சுருக்கமாக உங்களுக்குச் சொல்லவேண்டு மானால், அறிவியல் கண்டுபிடிப்புகளை, கேள்வி கேட்டுப் பயன்படுத்தும்பொழுது, அது மக்களுக்குப் பயன்படக்கூடிய அளவிற்குச் செய்யும்பொழுது, அறிவியல் தத்துவமாக உரு வாகிறது.
அதற்கு அடுத்த கட்டம் டெக்னாலஜி.
சயின்ஸ் அன்ட் டெக்னாலஜி என்று சொல்கி றோம். அறிவியல் தொழில்நுட்பம்.
அறிவியல் தொழில்நுட்பத்தின் பயனை முழுவதும் அனுபவிக்கிறார்கள் நம்மாட்கள்.
ஆனால், அது எப்படி உருவாயிற்று? ஏன் உருவாயிற்று? அதை மேலே மேலே கொண்டு செல்வது எப்படி? என்று கேள்வி கேட்பதுதான் அறிவியல் மனப்பான்மையாகும்.
அறிவியல் மனப்பான்மை வேறு; அறிவியல் படிப்பு என்பது வேறு!
ஆனால், அறிவியல் மனப்பான்மையில், தங்கு தடையின்றிச் சிந்திக்கவேண்டும். ஆனால், சிந்திக்கும் இடத்திற்குப் போகக்கூடாது என்று நினைக்கிறார்கள்.
பெரியார்தான் சொன்னார், அறிவியல் மனப்பான்மை வேறு; அறிவியல் படிப்பு என்பது வேறு என்று.
எல்லோரும் அறிவியலில் முனைவர் பட்டம் வாங்கியிருக்கிறார்கள்; பெரிய பெரிய ஆராய்ச்சிகளை யெல்லாம் செய்திருக்கிறார்கள். நோபல் பரிசு வாங்கியவர் என்ன சொன்னார் என்பதை இங்கு சொன்னார்கள்.
எல்லாவற்றையும் பளிச்சென்று சொல்லக்கூடிய தந்தை பெரியார் அவர்களிடம் நான், ‘‘அமெரிக்கா விலேயே இப்படி ஒரு மோசமான நிகழ்வு நடந்தி ருக்கிறது?” என்று ஒரு செய்தியைக் காட்டினேன்.
முட்டாள்தனம் என்ன உங்கள் நாட்டுக்கு மட்டும்தான் சொந்தமா?
உடனே அவர், ‘‘ஏன், முட்டாள் என்ன உங்கள் நாட்டில் மட்டும்தான் இருப்பான் என்று நினைப்பா? உலகம் முழுவதும் இருப்பான். அமெரிக்காவில் முட்டாள் இருக்கமாட்டானா? முட்டாள்தனம் என்ன உங்கள் நாட்டுக்கு மட்டும்தான் சொந்தம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா? எல்லா நாடுகளிலும் இருக்கிறான்” என்றார்.
எனவே, அறிவியல் படிப்பது என்பது வேறு; பட்டதாரியாக ஆவது என்பது வேறு. படிப்பறிவு வேறு; பகுத்தறிவு வேறு.
விஞ்ஞான ஆசிரியரின் முரணான நடவடிக்கை
அறிவியல் மனப்பாங்கு என்பதற்கு உதாரணம் சொல்லவேண்டுமானால், ஒரு பள்ளிக்கூட விஞ்ஞான ஆசிரியர், கிரகணத்தைப்பற்றி. ‘‘சூரியன், பூமி, சந்திரன் எல்லாம் ஒரே நேர்க்கோட்டில் வருகிறது. அதனால், கிரகணம் ஏற்படுகிறது. இது விஞ்ஞானம், அறிவியல்.’’
அவரே வீட்டிற்குச் சென்றவுடன், ‘‘கிரகணம் ஏற்படுவதற்கு முன்பு சாப்பிட்டுவிடவேண்டும்; கிரகணம் முடிந்ததும் குளிக்கவேண்டும்’’ என்று சொல்வார்.
ஏனென்றால், ராகுவை, கேது என்கிற பாம்பு விழுங்கு கிறது என்று அவர் சொன்னால், அறிவியல் படிப்பு படித்து என்ன பிரயோஜனம்?
படிப்பது வேறு; பகுத்தறிவு வேறு!
படிப்பது வேறு; பகுத்தறிவு வேறு. எனவே, பகுத்தறி வைப் பயன்படுத்தி சிந்திப்பதும், பயனுறுவதும்தான் அறிவியல் மனப்பான்மையாகும்.
(தொடரும்)