அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,பிப்.11- அரசு மருத்துவர்கள் அவரவர் இடங்களி லேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னை வேளச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க நாளில் மாணவர் களுக்கு மாத்திரைகளை மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர் அவர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
“அரசு மருத்துவர்கள் பணி நியமனத்திற்காக ஜனவரி 5ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. 2,553 மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு அறிவிக்கப்பட்டது.
தற்போது கூடுதலாக 89 காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு 2642 மருத்துவர் காலிப்பணியிடங்களுக்கான மதிப்பெண் பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது.
ஜாதிவாரி ஒதுக்கீடு
அந்த வகையில் 4585 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது. சான்றிதழ் சரிபார்ப்புகள் முடிந்தவுடன் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தலின்படி, தரவரிசைப் பட்டியல் வழங்கப்படவுள்ளது. இந்தப் பணிகள் முடிவடைந்தவுடன் ஜாதிவாரி இடஒதுக்கீடு செய்யப் படவுள்ளது.
கட் ஆஃப் மதிப்பெண்கள் பொறுத்தவரை பொதுப்பிரிவு 61, பிற்படுத்தப்பட்டோருக்கு 55, முசுலிம்களை பொறுத்தவரை 52, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 53, ஆதிதிராவிடர் பிரினருக்கு 51, அருந்ததியினர் பிரிவினருக்கு 48, பழங்குடியினர் பிரிவினருக்கு 45 என்கின்ற வகையில் கட் ஆப் மதிப்பெண்கள் அறிவிக்கப் பட்டிருக்கிறது.
பணிநியமனம் செய்யப்பட உள்ள மருத்துவர்களுக்கு பிப்ரவரி 20ஆம் தேதிக்குப் பிறகு கலந்தாய்வு நடத்தப்படவுள்ளது.
விரும்பிய இடங்களில் பணி நியமனம்
முதல் முறையாக பணி நியமனம் செய்யப்படும் பணியாளர்களுக்கு அவரவர் விரும்பும் இடங்களுக்கே கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்பட்டு விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரால் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன. இப்பணியிடங்கள் நிரப்பப்பட்டவுடன் தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பணியிடங்கள் காலியாக இல்லை என்பதற்கான மகத்தான சூழல் முதல்முறையாக உருவாக இருக்கிறது.
அதோடு மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு 1021 மருத்துவர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அவர்களுக்கும் முதன்முறையாக கலந்தாய்வு நடத்தி எங்கெங்கு காலிப்பணியிடங்கள் அதிகமாக உள்ள 20 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு பணி நியமனம் வழங்கப்பட்டது. 20 மாவட்டங்களில் அவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் போது அவர்களுக்கு சொன்னது எந்த சூழ்நிலையிலும் நீங்கள் பணிமாறுதல் கேட்டு சிபாரிக்கு வரக்கூடாது என்று சொல்லியிருந்தோம்.
ஒரு ஆண்டு கண்டிப்பாக மருத்துவர்களை பணியாற்ற வேண்டும் என்று கூறியிருந்தோம். அவர்களுக்கு ஓர் ஆண்டு முடிவுற்றிருக்கிறது. அவர்களுக்கு 15ஆம் தேதி 1021 மருத்துவர்களுக்கு பணிமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்படவிருக்கிறது.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒட்டுமொத்த மருத்துவர்களும், அவரவர் விரும்பும் இடங்களுக்கே பணியாற்றுகின்ற சூழல் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிறது.” இவ்வாற அவர் கூறினார்.