பெருந்தலைவர் காமராசர் வாழ்த்து!

2 Min Read

அரசியல்

கல்வியினைப் பரப்புதற்கே பிறப்பெடுத்த காமராஜர் – அவர்

   கருமவீரர் என்றுபெயர் எடுத்திருந்த தமிழ்நேசர்

பள்ளியினைப்  பலவாறாய்க் கட்டிவைத்தார் – நாம்

படிப்பதற்கே பாரெல்லாம் சுற்றிவந்தார்!

எல்லாரும் ஒன்றென்றே எண்ணச் செய்தார் – அதற்கு

   இதமான சீருடையை எடுத்துத் தந்தார்!

சொல்லாமல் செய்கின்ற சுடரொளியாய் இருந்தார் – நாளும்

   சூரியனாய் உழைத்தவராய் அறிவொளியைத் தந்தார்!

மதியவுணவுத் திட்டத்தால் மாணவர்க்கு அன்னை -இவர்

   மானுடத்தைக் கொண்டதனால் மக்களுக்குத் தந்தை

பதவியினை விரும்பாமல் பாடுபட்ட தால்பெருந்  தலைவர் – தம்

   பட்டறிவு ஒன்றாலே படையமைத்தத் தமிழர்

உதவிகளைச் செய்வதற்கே உயர்ந்துவந்த முதல்வர்

   உழைப்பாளி குமாரசாமி சிவகாமிப் புதல்வர்

சிதையாத நெஞ்சத்தின் சொந்தக் காரர்-  நம்

   செந்தமிழின் செழிப்புக்கோ நல்லுறவுக் காரர்!

அறியாமை இருள்ஒழிக்க ஆண்டுவந்த மேதை – நாம்

   அனைவருமே ஒன்றென்றிட போட்டுவந்தார் பாதை!

வறுமையினை ஒழிப்பதற்கு அணைகள்பல கட்டினார் – நாடு

   வளமாக இருப்பதற்குத் திட்டங்கள் தீட்டினார்!

பெரியாரின் வழியினிலே பேதத்தை ஒழித்தார் – மக்கள்

   பெருமையினைப் பெறுவதற்கோ பெரியாராய்ச் சிரித்தார்!

உரிமையினைப் பெற்றெடுக்க உழைப்பினையே கொண்டார் – நாளும்

ஒழுக்கத்தில் உயர்ந்தவராய் உலகத்தை வென்றார்!

பொதுநலத்தைத் தம்நலமாய்க் கொண்டிருந்தார்-  அதனால்

   புதுமையினை எந்நாளும் செய்தவராய்ச் சிறந்தார்!

மதுவினையே ஒழித்தவராய் மாநிலத்தை ஆண்டார் – நாளும்

   மக்கள்தொண்டு மகேசன்தன் தொண்டென்று ரைத்தார்!

இதமாக ஆகட்டும் பார்க்கலாமென்று சொல்லி – நம்

   எல்லாரின் உளத்தினையும் வென்றெடுத்த வெள்ளி!

பொதுவாகக் காந்தியத்தின் வழியினிலே நின்றார்-  அதனால்

  புவியெங்கும் கறுப்புகாந்தி என்றிங்கே ஆனார்!

தென்னாட்டுக் காந்தியென சிறப்பினையும் கொண்டார் – இந்திய

   தேசத்துப் பிரதமரை உருவாக்கி நின்றார்

எந்நாளும் கதராடை தனையேதான் அணிந்தார்

   ஏழ்மையினைப் போக்குதற்கு ஆட்சியினைத்   தந்தார்

கண்ணெனவே கல்வியினைக் கருதி வாழ்ந்தார் – எங்கும்

   கல்விவள்ளல் என்றுபெயர் பெற்றுச் சிறந்தார்!

இன்றிங்கே இவருக்குப் பிறந்தநாள் எடுக்கின்றோம் – எங்கள்

   பெரியவரே என்றபெயரில் சிறந்தவராய் வாழ்த்துகின்றோம்!

– புலவர் கந்தசாமி

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *