பெருந்தலைவர் காமராசர் ஆட்சிக்கு வந்தார். ராஜகோபாலாச்சாரியார் மூடிய பள்ளிகளை எல்லாம் காமராசர் திறந்தார். ஆச்சாரியார் என்னென்ன பிழைகள் செய்தாரோ அவைகளை எல்லாம் இவர் மாற்றினார். மெடிக்கல் காலேஜில் அப்பொழுது கமிட்டி உண்டு. அந்தக் கமிட்டி ஒவ்வொரு மாணவரையும் பார்த்து ‘இன்டர்வியூ மார்க்” போடுவார்கள்.
டாக்டர்கள் படிப்புக்குத் தேர்வு எழுதுவது மட்டுமல்ல; அதற்கு ஒரு கமிட்டி உண்டு. அதேபோல எஞ்சினியரிங் கல்லூரிக்கு ஒரு கமிட்டி உண்டு. அந்தக் கமிட்டியினர் மாணவர்களை நேர்காணல் செய்து மார்க் போடுவார்கள். அதற்கு இன்டர்வியூ மார்க்‘ என்று பெயர். இன்றைக்கு இருக்கின்ற நுழைவுத் தேர்வுகள் எல்லாம் அன்றைக்குக் கிடையாது. அந்த இன்டர்வியூ கமிட்டியில் பெரிய, பெரிய டாக்டர்கள் எல்லாம் இருந்தார்கள். அதற்கு 150 மார்க் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு மாணவரையும் அந்தக் கமிட்டியினர் விசாரிப்பார்கள். அந்த மாணவருடைய குடும்பச் சூழல் என்ன? அந்த மாணவருடைய தந்தையார் படித்தவரா… இல்லையா? அல்லது கிராமத்தில் இருந்து வந்திருக்கின்றாரா? இந்தச் செய்திகளையெல்லாம் தெரிந்துகொண்டு அதற்கு மார்க் போடுவார்கள்.
டாக்டர் படிப்பிற்கு இன்டர்வியூ மார்க் 150 என்று இருந்ததை ராஜகோபாலாச்சாரியார் 50 மார்க்காகக் குறைத்தார்.
இந்த மார்க்தான் நம்முடைய பிள்ளைகளுக்கு ஓரளவுக்குக் கை தூக்கிவிட்டது. இந்த மாணவர்தான் முதல் தலைமுறையாக படித்தவரா? முடிதிருத்தும் சமுதாயத்தைச் சார்ந்தவரா? அல்லது துணி வெளுக்கக் கூடிய சமுதாயத்தைச் சார்ந்தவரா? என்று பார்த்து அதற்கெல்லாம் அந்தக் கமிட்டியினர் மார்க் போடுவார்கள். அடித்தளத்து மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்படியாகத்தான் இன்டர்வியூ மார்க் போடுவார்கள். அதனால் பல சமூகமாற்றம், நடைபெற சமூகநீதி கிடைத்திட வாய்ப்பு ஏற்பட்டது. ராஜகோபாலாச்சாரியார் குலக்கல்வி திட்டம் கொண்டுவந்த மாதிரியே இந்த இன்டர்வியூ மார்க்கையும் குறைத்தார். அவருடைய வர்ணாசிரமப் பார்வையினால் 150 மார்க் என்று இருந்ததை 50 மார்க்காகக் குறைத்தார்.
இதைக் கண்டித்து ‘விடுதலை’யில் நாங்கள் தொடர்ந்து எழுதினோம். நமது கிராமப் பிள்ளைகள் படிக்க வேண்டுமென்றால், நமது ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் வர வேண்டும் என்றால், ராஜகோபாலாச்சாரியார் குறைத்த இன்டர்வியூ மார்க்கை மீண்டும் 150 ஆக உயர்த்த வேண்டும் என்று எழுதினோம்.
காமராசர் அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடனே உத்தரவு போட்டார். இன்டர்வியூ மார்க் 50 என்றிருந்ததை மீண்டும் 150 ஆக ஆக்கினார். உடனே செய்தியாளர்கள் கேட்டார்கள். செய்தியாளர்களாக அன்றைக்கு இருந்தவர்கள் எல்லாம் யார்? ராஜகோபாலாச்சாரியார்தான் ஆட்சியிலே இருக்க வேண்டுமென்று நினைத்த உயர் ஜாதிக்காரர்கள்தான் அப்பொழுது செய்தியாளர்கள். பிரபல ஆங்கிலப் பத்திரிகையின் செய்தியாளர் ஒருவர் காமராசரைப் பார்த்துக் கேள்வி கேட்டார். “இன்டர்வியூ மார்க் 150 என்று இருந்ததை ராஜாஜி அவர்கள் 50 மார்க்காகக் குறைத்துவிட்டுப் போனார். நீங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ராஜாஜி குறைத்த 50 மார்க்கை 150 என்று ஆக்கியிருக்கின்றீர்களே… அதற்குக் காரணம் என்னவென்று சொல்ல முடியுமா?” என்று கேட்டார்கள்.
காமராசர் பதவிக்கு வந்து ஒரு வாரம் ஆகிறது. வேறு ஏதாவது அவர் பதில் சொன்னால் அதை வைத்துப் பெரிதாக்கி விடலாம் என்று உயர்ஜாதிக்கார செய்தியாளர்கள் நினைத்தனர். இப்படிக் கேள்வி கேட்டவுடனே காமராசர் அவர்கள் அழகாகப் பதில் சொன்னார். “ராஜாஜி எந்தக் காரணத்திற்காக 150 மார்க்கை 50 ஆகக் குறைத்தாரோ அதே காரணத்திற்காகத்தான் 50அய் 150 ஆக ஆக்கியிருக்கின்றேன் – போங்கள் என்று பதில் சொன்னார்.
`அவர் அவருடைய ஜாதியினருக்காகச் செய்தார். நான் எங்கள் ஆட்களுக்காகச் செய்தேன், என்பதை வெளிப்படையாகச் சொல்லாமல் எல்லோரும் புரிந்து கொள்கின்ற மாதிரி காமராசர் அவர்கள் அவ்வளவு நுணுக்கமாகப் பதில் சொன்னார்.
சொன்னவர்: ஆசிரியர் கி. வீரமணி