மருத்துவர்
சு.நரேந்திரன்
சிறப்பு நிலைப் பேராசிரியர்
நாம் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை இடையிடையே நம்மைப் பாதிப்பது வயிற்றுப் போக்கு. முக்கியமாகக் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். பலருக்கு வயிற்றுப் போக்கு திடீர் என வந்து, சிறிது நேரத்தில் நின்றுவிடும். ஆனால், மற்றவர்களுக்கு அது நாட்பட்டுக் கூட காணப்படும்.
சாதாரணமாகக் கூறப் போனால் வயிற்றுப் போக்கு என்பது அதிகமான நீர் மலத்துடன் வெளியேற்றப்படுவது ஆகும். இதற்குக் காரணம் குடலில் நீர் உறிஞ்சப்படுவதில்லை. அல்லது அதிகமான நீர் சுரக்கப்படுகிறது அல்லது இரண்டும் இணைந்து செயல்படுகிறது. ஈகோலை மற்றும் ஸ்டபைலோ காக்கஸ் பாக்டீரியாக்கள் நீர் சுரப்பதைத் தூண்டி வயிற்றுப் போக்கை உண்டாக்குகிறது. இதுவே உணவு நீர் வழியாகத் தொற்று பரவும் போது வயிற்றுப் போக்கை உண்டாக்குகிறது. இதுவே பயணம் போகிறவர்களிடையே காணப்படும் வயிற்றுப் போக்கிற்கு முக்கிய காரணமாகும். சில மலமிளக்கியும் இது மாதிரியே வேலை செய்கிறது. வயிற்றுப் போக்கு உண்டாக முக்கியக் காரணங்கள் இரைப்பை, குடலில் காணப்படும் பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒட்டுண்ணிப் பூச்சிகளால் ஏற்படும் தொற்று அல்லது உணவுப் பொருள்கள் உண்டாக்கும் அசாதாரண உணர்ச்சியாகும். யாராவது நாட்பட்ட வயிற்றுப் போக்கில் அவதிப்பட்டால் அதாவது வாரக் கணக்கில் அல்லது மாதக் கணக்கில், அவர்களுக்கு நிச்சயம் ஏதாவது வியாதி அடிப்படை காரணமாயிருக்கும். இவர்கள் உடனே மருத்துவரைக் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
வயிற்றுப் போக்கு சுகாதாரமில்லாத உணவுகள், காரமான பொருட்கள், கெட்டுப் போன பொருட்கள் ஆகியவற்றை உண்பதால் ஏற்படுகின்றது. இறைச்சியை வாங்கியவுடன் சமைக்காமல் சிலமணி நேரம் வெளியில் வைத்தால் வெப்பநிலை மிகுதியாகும். மேலும் அதைச் சமைத்துச் சாப்பிடுவதால் வயிற்றுப் போக்கு ஏற்படுகின்றது.
இதுபோல வாசனைப் பொருட்கள் மிகுந்த உணவை அதிகமாக உட்கொண்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும். மேலும் கிருமிகளாலும் (ஜியார்டிய லாம்டியா) வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. பயறு வகைகள், வாசனைப் பொருட்கள் பால் மற்றும் பால் வகைப் பொருள்கள் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு அதிகரித்து அதிக பாதிப்பை விளைவிக்கும்.
உணவு வயிற்றுப் போக்கை அதிகப்படுத்தலாம் அல்லது குணப்படுத்தலாம். உணவைத் தூண்டி வயிற்றுப் போக்கைக் கொண்டு வரலாம். இது ஒரு குழப்பமான செயல். நீங்கள் உண்ணும் உணவு, அரிதாக இடையிடையே வரும் வயிற்றுப் போக்கை நிச்சயமாகக் குணப்படுத்தலாம் அல்லது வயிற்றுப் போக்கைக் குறைக்கலாம். உண்மையில் சரியான உணவை உண்பதால், வயிற்றுப் போக்குக் காலத்தை 1/3லிருந்து 1/2 ஆக குறைக்க முடியும்.
குடலுக்கு ஓய்வு என்பது தவறு
மிகவும் முக்கியமானது உண்பதை நிறுத்த வேண்டாம். எந்த வயதிலும் உங்களுக்கு வயிற்றுப்போக்கு இருக்கும் போது தொடர்ந்து உண்பது சரியானதே.
வயிற்றுப் போக்கினைக் குறைக்க உதவும் உணவு
வயிற்றுப் போக்கு இருக்கும்போது உண்ண வேண்டிய உணவுகள்: தானியங்கள், கனியாத வாழைப்பழம், அரிசி, மரவள்ளிக் கிழங்கு, பிஞ்சுக் காய்கறிகள், காரட், உருளைக்கிழங்கு.
வயிற்றுப் போக்கை
அதிகரிக்கும் உணவு வகைகள்
வாயு உள்ள பொருள்கள், (எ.கா.) பீன்ஸ், முட்டைக் கோஸ் மற்றும் வெங்காயம் வயிற்றை உப்ப வைத்து, வலியுடன் தொந்தரவு கொடுக்கும் பொருட்கள்!
அதிக நார்ச்சத்து உள்ள உணவு. (எ.கா.) கரடுமுரடான பழங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் முழுமையான தானிய வகைகள் இவைகள் சீரணிப்பதற்குக் கடினமாகும்.
பால், முக்கியமாகப் பாலில் உள்ள லாக்டோஸ் ஒத்துக் கொள்ளாமல் வயிற்றுப் போக்கு இருக்கலாம்.
அதிகமான சர்க்கரை சேர்த்த நீர். (எ.கா.) குளிர்பானம், பழச்சாறு, காபி மற்றும் கொஃபைன் உள்ளடங்கிய பானங்கள். உடலுக்குத் தேவையான நீரை வெளியேற்றுகிறது.
மிகவும் நீர்த்த சூப்புகள், அடிக்கடி தேவைக்குப் பரிந்துரைத்தாலும், இதில் தேவையான ஊட்டச்சத்து இல்லை. அத்துடன் அதிக சோடியம் காணப்படும்.
குழந்தைகளில் காணப்படும் வயிற்றுப் போக்கிற்கு உதவும் சில சிறுகுறிப்புகள்
சிறு குழந்தைகளில் திடீர் என வயிற்றுப் போக்கு வந்தால் தாய்ப்பாலை நிறுத்தாமல் கொடுக்க வேண்டும், பாலில் உள்ள லாக்டோஸ் ஒவ்வாமை ஒருவேளை வயிற்றுப்போக்கிற்குக் காரணமாக இருக்கலாம்.அப்படி இருந்தால் மற்றொரு வகை பாலுக்கு மாறவேண்டும். இதில் உள்ள புரதம் சமப்படுத்தப் பட்டுள்ளது. இதுபற்றி உங்கள் மருத்துவரைக் கலந்து ஆலோசியுங்கள். குழந்தைகள் மற்றும் 5 வயதுக்குக் குறைவான சிறுவர்களுக்குக் கடையில் விற்கும் நீரின் தன்மையைக் கூட்டும் நீர் பானங்களைக் கொடுக்கலாம். தானிய சூப்பைப் பாலுக்குப் பதில் கொடுக்கலாம். வயிற்றுப் போக்கு உள்ள குழந்தைக்கு ஸ்டார்ச், காரமற்ற உணவுகள், அரிசிக் கஞ்சி, நீருடன் சேர்ந்த சமைத்த தானியங்கள் சிறந்தவை.
வயிற்றுப் போக்கு, பாலினால்தான் என்று சந்தேகப்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
குழந்தைகளுக்கும் பசும்பால் கொடுத்து வந்தால், அதை உடனே ஒரு வாரத்திற்கு நிறுத்தவும். கடைகளில் கிடைக்கும் கேசீன் ஹைடிரோலைசேட் பால் கொடுப்பது நல்லது. இதில் வயிற்றுப் போக்கை உண்டாக்கும் பால் புரதம் சமப்படுத்தப்பட்டுள்ளது.
நீங்கள் உங்கள் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கும் போது வயிற்றுப் போக்கு குழந்தைக்கு வந்தால், நீங்கள் பால் கொடுப்பதைத் தற்காலிகமாக நிறுத்தவும். ஏன் என்றால் உங்களுடைய தாய்ப்பால், வயிற்றுப் போக்கு உண்டாக்கும் பொருள்களை எடுத்துச் சென்று உங்களுடைய குழந்தைக்கு அனுப்பலாம். இது மிகவும் அடிக்கடி நடக்கும் ஒரு சம்பவமாகும். ஆய்வுகளின்படி தாய்ப்பாலைக் கொடுக்கும் தாய் எல்லாவிதமான பால் உணவுப் பொருள்களைத் தவிர்த்தால் குழந்தையின் வயிற்றுப் போக்கு மற்றும் இரைப்பை, குடல் சம்பந்தப்பட்ட அறிகுறிகள் முற்றிலும் மாறிவிடும்.
சிறுவர்கள் மற்றும் வாலிபர்களிடையே நாட்பட்ட வயிற்றுப் போக்கு காணப்பட்டால் அவர்கள் சில வாரங்கள் லாக்டோஸ் இல்லாத உணவை உண்ண வேண்டும். முதலில், பால், சீஸ் மற்றும் அய்ஸ்கிரீமைத் தவிர்க்க வேண்டும். தயிர் பரவாயில்லை. ஆனால், அது உறைந்த நிலையில் வைக்கப்பட்டிருக்கக் கூடாது. இந்நிலையில் வயிற்றுப் போக்கு குறைந்தால், அது சில வேளைகளில் பாலுக்கான ஒவ்வாமையிலிருந்து விடுபட்டதன் காரணமாக இருக்கலாம்.
தற்காலிகமாகக் காபி குடிப்பதை நிறுத்துங்கள்
நீங்கள் நாட்பட்ட வயிற்றுப் போக்கால் கஷ்டப்படுகிறீர்களா? அப்படியானால் சில் நாட்கள் காபியை நிறுத்திப் பாருங்கள். உங்கள் வயிற்றுப் போக்கு காணாமல் போகும். உணர்வுள்ள பெருங்குடல் உள்ளவர்களுக்குக் காபியே வயிற்றுப் போக்கிற்குப் பொதுவான காரணமாக இருக்கலாம். ஏனெனில் பெருங்குடல் தசைகளைத் தூண்டி குடல் இயக்கத்தைத் தொடங்குகிறது. மேலும், காபி சிறுநீரை அதிகம் வெளியேற்றும் தன்மையுள்ளதால் வயிற்றுப் போக்கு காணப்படும்போது மிகவும் தேவையான உடலில் உள்ள நீரைச் சிறுநீர் வழியே வெளியேற்றும்.
நார்ச்சத்து அதிகமாக உண்பதில்
எச்சரிக்கையாய் இருங்கள்
நமக்கு உதவக்கூடிய நார்ச்சத்து நல்ல மருந்துப் பொருள். அதுவே அளவுக்கு மீறினால் மிக மோசமான வயிற்றுப் போக்கை உண்டாக்கலாம்.
வயிற்றுப் போக்கை நிறுத்த ஆலோசனைகள்
குழந்தைகளிடமோ, சிறுவர்களிலோ அல்லது வாலிபர்களிடையே நாட்பட்ட வயிற்றுப் போக்கு காணப்பட்டால் அதற்குக் காரணம் உணவில் உள்ள ஏதோ ஒரு பொருளின் பின்விளைவாகவே இருக்கும்.
நாட்பட்ட வயிற்றுப் போக்கிற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க, முதலில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் உள்ள அனைத்தையும் நிறுத்த வேண்டும். பிறகு வயிற்றுப் போக்கு நிற்கிறதா? எனக் காண வேண்டும். இந்நிலையில் சார்பிடால் இனிப்பு கலந்த உணவைத் தவிர்க்கவும்.
காபியை நிறுத்தவும், வாயு உணவுகளைத் தவிர்க்கவும். சிறு குழந்தைகளில் பழச்சாற்றை அதிலும் முக்கியமாக ஆப்பிள் சாறை நிறுத்தவும்.
வயிற்றுப்போக்கிற்குச் சிகிச்சை
உடம்பில் நீர்ச் சத்துக் குறையாவண்ணம் பாதுகாக்க அதிகமான நீர் சர்க்கரையைச் சோடியத்தைக் குறைவாகக் கொடுக்க வேண்டும்.
தானிய சூப் கொடுக்கலாம் அல்லது கடைகளில் விற்கும் நீரூட்டும் உப்பைக் கொடுக்கலாம். (ORS)
பழக்கமான உணவுகளைத் தொடர்ந்து உண்க. (எ.கா) ஸ்டார்ச்சு சேர்ந்த மிருதுவான உணவு (அரிசிக் கஞ்சி) வேக வைத்த காரட், கிழங்கு மரவள்ளிக் கிழங்கு ஆகியவை.
ஒருபோதும் வெறும் தண்ணீர் மட்டுமே உணவாகக் கொடுக்கக் கூடாது. குடலுக்கு ஓய்வு கொடுப்பதாக நினைத்துப் பட்டினி இருக்க வேண்டாம்.
அதிகமான நார்ச்சத்து உள்ள தானியங்களைத் தவிர்க்க வேண்டும். மற்றும் முக்கியமாக பிரக்டோஸ் ஒத்துக் கொள்ளவில்லை என்றால் பாலையும் தவிர்க்க வேண்டும்.
அதிகமான சர்க்கரை உள்ள பழச்சாறு மற்றும் இனிப்பான கார்போனேட் பானங்களை ஒதுக்குங்கள். முக்கியமாகச் சிறுவர்களுக்கு கலோரி அற்ற (Diet Drinks) பானங்களைக் கொடுக்கக் கூடாது.
உண்ணுங்கள். திரவம் குடியுங்கள். வாந்தி இருந்தாலோ அல்லது வருவது போல் இருந்தாலோ, ஒரு தடவையில் ஒவ்வொரு மடக்காகக் குடிக்கவும். இது வயிற்றுப் போக்கைச் சீக்கிரம் குணமாக்க உதவும். எப்போதும் திரவத்தைக் கொஞ்சமாகக் குடிக்கவும். ஒரே தடவையில் அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஒரே நேரத்தில் அதிகமாகக் குடித்தால் வாந்தி வரும். முக்கியமாக எவ்வளவு வெளியேறுகிறதோ? அதைச் சரிசெய்ய குடிக்க வேண்டும்.
வயிற்றுப் போக்குக் காரணமாக எதுவும் சாப்பிடாமல் இருக்கும் உணர்வு தோன்றினாலும், அவ்வப்போது புழுங்கல் அரிசி கொண்டு தயாரித்த கஞ்சி ஓரளவிற்கு நிவாரணம் தரும். அரிசி எளிதில் செரிமானம் ஆகும் ஒரு உணவாகும். மற்றும் இது உங்கள் குடலை எந்த விதத்திலும் பாதிக்காது. உங்கள் குடல் மேலும் பாதிக்காத அளவிற்கு உங்கள் வயிற்றுக்கு இதமளிக்கும் உணவாக அரிசி உள்ளது. அரிசியில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் இது வயிற்றுப் போக்கைக் குறைத்துக் குடல் இயக்கங்களை இயல்பு நிலைக்குக் கொண்டு செல்ல உதவுகிறது.
கனிவானதாக இல்லாத வாழைப்பழம் வயிற்றுக்கு இதமளிக்கலாம் மற்றும் இது பொட்டாசியத்தை மீட்டெடுக்க உதவலாம். பொட்டாசியம் உடலுக்கு மிகவும் தேவையான தாதுப் பொருள் ஆகும். இது உடலில் உள்ள திரவங்களை ஒழுங்குபடுத்துகிறது. மற்றும் தசை வலிமை மற்றும் நரம்பு சிக்னல்களை ஒழுங்குபடுத்துகிறது.
வயிற்றுப் போக்கின் காரணமாக உடலில் பொட்டாசியம் அளவு குறைவதால் தசை வலிமை குறையலாம் மற்றும் பிடிப்பு ஏற்படலாம். வாழைப்பழம் பொட்டாசியம் சத்தின் ஆதாரமாக விளங்குவதால் இது வயிற்றுப் போக்கிற்கு நன்மை அளிக்கிறது.
குடலில் உள்ள கெட்ட பாக்டீரியா காரணமாக வயிற்றுப் போக்கு ஏற்படுவதால் நல்ல பாக்டீரியா உட்செலுத்துதல் அவசியமாகிறது. அதனால் உடனடி நிவாரணம் கிடைக்கிறது. ப்ரோபயோடிக் எடுத்துக் கொள்ள ஒரு பாதுகாப்பான வழியாக மட்டும் இல்லாமல் வயிற்றுப் போக்கு பாதிப்பில் இருந்து விரைந்து குணமாக உதவுகிறது. யோகர்ட் (தயிர்) போன்ற உணவுகளில் ப்ரோபயோடிக் அதிகம் உள்ளது என்பதால் இதனை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். ஒருவேளை புரோபடியோடிக் நிறைந்த தயிர் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் புதிய தயிரை மட்டும் சாப்பிடுங்கள்.
வாழைப்பழம் (Banana), அரிசி (Rice), ஆப்பிள் சாஸ் (Apple Sauce) மற்றும் டோஸ்ட் (Toast) ஆகியவை அடங்கிய உணவு வயிற்றுப் போக்கிற்காகப் பரிந்துரைக்கப்படும் உணவாகும். இந்த உணவில் போதுமான ஊட்டச்சத்து இருப்பதால் குழந்தைகள் கூட இந்த பாதிப்பில் இருந்து விரைந்து குணமாக உதவுகிறது.
மற்றும் இந்த வகை உணவில் அதிக ஸ்டார்ச் மற்றும் குறைந்த நார்ச்சத்து இருப்பதால் மலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இவை வயிற்றுப்போக்கு இதமளித்து விரைவில் இந்த பாதிப்பில் இருந்து வெளிவர உதவுகிறது. காபி குடிப்பதற்குப் பதிலாக பால் இல்லாப் பிளாக் டீ, ஹாட் சாக்லேட்டைக் குடிக்கலாம். இது வயிற்றுப் போக்கை மிக வேகமாகக் கட்டுப்படுத்தும்.