சென்னை,பிப்.10- பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026இல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, தமிழ்நாட்டு மக்கள் திராவிட மாடல் அரசின் மீதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மீதும் வைத்திருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை உணர்த்தி இருக்கிறது.
ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொரு நபருக்கும் பயனளிக்கும் வகையில் திட்டங்களை செயல்படுத்தி வரும் நமது முதலமைச்சரின் ஓய்வில்லா உழைப்புக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அளித்திருக்கும் ஊக்கமே இந்த வெற்றி! களத்திற்கு வரும் முன்னே முடிவினை உணர்ந்து, ஒதுங்கி ஓடிய பாசிஸ்ட்டுகளும்-அடிமைகளும் இனிமேலாவது பொய்ப் பிரச்சாரத்தையும் அவதூறு அரசியலையும் கைவிடுவது நல்லது.
ஈரோடு கிழக்கில் வெற்றி பெற்றிருக்கும் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமாருக்கும், வெற்றிக்காக உழைத்த திமுகவினர்-தோழமை இயக்கத்தினருக்கும் வாழ்த்துகள். தொகுதியின் வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த நன்றி. தாழ்ந்து கிடந்த தமிழினத்தை சுயமரியாதை உணர்வூட்டி தட்டி எழுப்பிய பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் மண்ணில் திமுக பெற்றிருக்கும் மாபெரும் வெற்றியை, 2026இல் தமிழ்நாடெங்கும் எதிரொலிக்கச் செய்வோம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி!
தொல்.திருமாவளவன்
சென்னை,பிப்.10- தில்லி சட்டப் பேரவைத் தோ்தல் முடிவுகள், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் தொல்.திருமாவளவன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒற்றுமையின்மை
டில்லியில் காங்கிரசும், ஆம் ஆத்மி கட்சியும் முறையாகப் பேச்சுவார்த்தை நடத்தி சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்தித்திருக்க வேண்டும். கருத்து வேறுபாடு காரணமாக, தனித்து நின்று வாக்குகளைச் சிதறடித்துவிட்டனா்.
தார்மிகப் பொறுப்பு
இந்தியா கூட்டணியை வலிமைப்படுத்தும் தார்மிகப் பொறுப்பு காங்கிரசுக்கு உள்ளது. சட்டப்பேரவைத் தோ்தலாக இருந்தாலும், மக்களவைத் தோ்தலாக இருந்தாலும், இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்.
வழக்கத்துக்கு மாறாக, டில்லியில் பாஜகவினா் வாக்குகளுக்கு பணம், பொருள் கொடுத்திருப்பதாக விமா்சனம் எழுந்திருக்கிறது. தலைநகா் டில்லியைக் கைப்பற்றியாக வேண்டிய நிர்பந்தத்துடன் பாஜக களமிறங்கியது. கெஜ்ரிவாலுக்கு கிடைத்த தோல்வி என்பதைவிட, இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமையின்மைக்கு கிடைத்த தோல்வி என்பதே நிதா்சனம்.
டில்லியைத் தொடா்ந்து, தமிழ்நாட்டிலும் இந்தியா கூட்டணி தோல்வி அடைய வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாக இருக்கலாம். ஆனால், இந்தக் கூட்டணியை வலிமைப்படுத்த வேண்டும் என்பதில் திமுக கூட்டணிக் கட்சிகள் உறுதியாக இருக்கிறோம்.
திருப்பரங்குன்றம்
முன்னதாக, மதுரை வந்த தொல். திருமாவளவன் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறும்போது,
திருப்பரங்குன்றத்தில் பொதுமக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்கின்றனா். ஒரு சில கட்சிகள்தான் இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, தமிழகத்தில் மதம் சார்ந்த பதற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனா்.
தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்களைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒன்றிய பாஜக ஆட்சி நிர்வாகம் திராவிட கருத்துகளுக்கு எதிராக உள்ளது. இதனால், திமுக அரசு புதிய தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறது. இதன் காரணமாக, ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஊடுருவி அழிக்கும் ஆரியத்தின் விஷமம்
தமிழ் செம்மொழி நிறுவனத்தின் சார்பில்
அகத்தியர் வேடமிட்டு மாணவர்கள் ஊர்வலமாம்
சென்னை,பிப்.10- காசி தமிழ்ச் சங்கமத்தின் 3ஆவது ஆண்டை முன்னிட்டு, அகத்திய முனிவர் போல உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற நடைப் பயணத்தில் (வாக்கத்தான்) பங்கேற்றனர்.
மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனமும், சாஸ்திரா நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. சாந்திபனி வித்யாலயா, பிஎஸ் சீனியர், பிஎஸ்பிபி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
ஹிந்திப் பிரச்சார சபாவில் தொடங்கி தியாகராயர் நகரில் உள்ள அகத்திய முனிவர் ஆசிரம கோவிலில் முடிவடைந்த இந்த நடைப்பயணத்தில் அவர்கள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அகத்தியர் குறித்த அமர் சித்ரா கதா வெளியீட்டு நூல் பிரதி வழங்கப்பட்டது. மேலும் தரிசனத்திற்குப் பிறகு பிரசாதங்களும் வழங்கப்பட்டனவாம்.