இது ‘‘பெரியார் மண்’’ – திராவிட இயக்கப் பூமி என்பதற்கான மக்களின் சரியான அங்கீகாரமே!
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை ஈட்டுவதற்குக் கூட்டணிக் கட்சிகள் ஆயத்தமாகட்டும்!
தமிழர் தலைவர் ஆசிரியரின் அறிக்கை
ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்குக் கிடைத்திட்ட வெற்றி – இது பெரியார் மண் – திராவிட பூமி என்பதற்கான தாக்கமே. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று இந்தியாவுக்கே வழிகாட்டவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க.வை எதிர்த்துப் போட்டியிட தமிழ்நாட்டில் உள்ள எந்த எதிர்க்கட்சியும் தயாராக இல்லை. காரணம், தி.மு.க.வின் கடந்த நான்கு ஆண்டு ‘திராவிட மாடல்’ ஆட்சி, சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘‘மக்கள் நல அரசாக’’ ஒளிவீசுகிறது.
ஒன்றிய பி.ஜே.பி. அரசு
பல நெருக்கடிகளைக் கொடுத்தாலும்…
இந்த ஆட்சிக்கு சட்ட விரோதமாகவும், அரசியல் காழ்ப்புணர்வோடும், சித்தாந்த ரீதியாகவும் ஒன்றிய அரசு பலவித நெருக்கடிகளைக் கொடுத்து வந்தாலும், அவற்றை எல்லாம் புறந்தள்ளி, மக்கள் நல அரசாக செயல்பட்டுவருகிறது. வெகு மக்களது அரசாக, வெகுமக்களால் பாராட்டப்படும் அரசாக செயல்பட்டு வருகிறது என்பதற்கு அடையாளம்தான் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் பெற்ற – வரலாறு காணாத பெரும் வெற்றியாகும்!
இந்தத் தொகுதியில் 2016 இல் 7,794 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. 2021 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் (தி.மு.க. கூட்டணி) திருமகன் ஈ.வெ.ரா. 8,904 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அவர் திடீர் மறைவால் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் 2023 ஆம் ஆண்டில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திரு. ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள் 66 ஆயிரத்து 233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி மாலை சூடினார்.
எதிர்பாராத வகையில் அவரும் மரணமுற்ற நிலையில், இப்பொழுது நடந்து முடிந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் திரு.சந்திரகுமார் 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்தியாவையே திரும்பிப் பார்க்கச் செய்துள்ளார்.
தி.மு.க. வேட்பாளரை எதிர்த்து நின்ற அத்தனைப் பேரும் டெபாசிட்டை இழந்தனர் என்பது சாதாரணமா?
தந்தை பெரியார்பற்றி
அவதூறு பேசியவர்களுக்கு மரண அடி!
நேற்றுவரை தந்தை பெரியாரின் புகழ்பாடி அடையாளம் காணப்பட்ட ஓர் ஆசாமி, ‘விபீஷணராகக்’ கிளம்பி, தந்தை பெரியாரையும், திராவிட இயக்கத்தையும் இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும், தரம் தாழ்ந்து பேசி வந்த ஒருவரின் கட்சிக்கு ஈரோட்டு மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யின் ‘அம்பாக’ அக்கட்சியின் வேட்பாளர் நிறுத்தப்பட்டார் என்பது ஊரறிந்த இரகசியமாகும்.
பார்ப்பன ஊடகங்கள் மூக்கால் தண்ணீர் குடித்து தூக்கி தூக்கி நிறுத்திப் பார்க்கின்றன!.
தி.மு.க. வேட்பாளரைத் தோற்கடித்துவிட்டால், ‘பெரியார் மண்’, ‘திராவிட மண்’ என்ற மய்யக் கருத்தை மண் மூடிப் போகச் செய்யலாம் என்பது அவர்களின் எண்ணமும், தப்புக்கணக்குமாகும்.
ஈரோட்டு மண், அத்தகைய கயமைத்தனத்தை 91 ஆயிரம் அடி ஆழத்தில் புதைத்துவிட்டது!
2026 சட்டப் பேரவைத் தேர்தல் வெற்றிக்கான மணியோசை!
இது 2026 இல் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான முதல் மணியோசையாகும்.
200 இடங்களில் நமது வெற்றி உறுதி என்பதற்கான எடுத்துக்காட்டுதான் ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தலின் முடிவு என்று நமது மாண்புமிகு முதலமைச்சர் கருத்துத் தெரிவித்திருப்பது கடசிக்காரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அல்ல – நாட்டு மக்களின் நாடியைப் பிடித்துச் சொல்லப்பட்ட கணிப்பாகும்.
தமது ஆட்சியின் மகத்தான சாதனைகளின் மீது வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.
இந்த நேரத்தில், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுக்கு நமது கனிவான வேண்டுகோள்!
தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் கவனத்திற்கு…!
பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இடைவெளியே இருக்கிறது. இந்த நிலையில் தி.மு.க. தலைமையிலான கட்சிகள் கலந்துரையாடல் நடத்தி, தேர்தலுக்கான வியூகங்களை உருவாக்கி, திட்டமிட்ட வகையில் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் ஈடுபடவேண்டும்.
சிறுசிறு பிரச்சினைகளாக இருந்தாலும் நேரில் பேசித் தீர்த்துக் கொண்டு, நடக்க இருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலின் மகத்தான வெற்றியே நமது ஒரே இலக்கு என்ற பாட்டையில் நடை போடவேண்டும். இன்றேல், நமது கொள்கை எதிரிகள் கொட்டம் கும்மாளம் போடும்!
தமிழ்நாடு கொடுக்கும் 2026 ஆண்டுக்கான தேர்தல் முடிவு மதவாத சக்திகளுக்கு – குறிப்பாக ஒன்றியத்தை ஆளும் – சமூகநீதிக்கும், மதச்சார்பின்மைக்கும், ஜன நாயகத்துக்கும், அரசமைப்புச் சட்டத்திற்கும் எதிரான பி.ஜே.பி.க்குப் பேரிடியாக அமையவேண்டும். அதன் தாக்கம் இந்தியத் துணைக் கண்டத்தில் உள்ள பிற மாநிலங்களுக்கும் போய்ச் சேரவேண்டும்.
தந்தை பெரியார்மீது அவதூறுச் சேற்றை வாரி இறைக்கும் கூட்டத்தின் வாலை தமிழ்நாட்டு மக்கள் ஒட்ட வெட்டி எறிவார்கள் என்பதை ஈரோட்டு மக்கள் தெளிவுபடுத்திவிட்டார்கள்.
வெற்றிப் பயணம் தொடரட்டும்!
நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்; தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுப்படட்டும்! சிறக்கட்டும்!!
பாராட்டுகள்! வாழ்த்துகள்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
10.2.2025