சென்னை, பிப்.9 சுற்றுலா விசாவில் வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்ல வேண்டாம் என்று சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் தெரிவித்தார்.
ஓன்றிய வெளியுறவுத் துறை சார்பில் வெளிநாடு செல்வோர் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள் வது தொடர்பான ‘பாத்து போங்க’ விழிப்புணர்வு நடைப்பயணம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று (8.2.2025) காலை நடை பெற்றது. குடிபெயர் வோர் பாதுகாவலர் ஜென ரல் சுரிந்தர் பகத், சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் ஆகியோர் நடைப்பயணத்தை தொடங்கி வைத்தனர். அயலகத் தமிழர் நலத் துறை ஆணையர் கிருஷ்ண மூர்த்தி உட்பட 400-க்கும் மேற்பட்டோர் நடை பயணத்தில் பங்கேற்றனர்.
சைபர் க்ரைம் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் சந்தீப் மிட்டல் செய்தியாளர்களிடம் கூறும்போது, “அதிக அளவில் வெளி நாடுகளுக்கு வேலைக்காக செல்கின்றனர். ஆனால், பெரும்பாலானோர் முறையாக செல்வதில்லை. சுற்றுலா விசாவில் செல்கின்றனர். அங்கு மிரட்டலுக்குப் பயந்து, தவறான செயல்களில் ஈடுபட தொடங்குகின்றனர். முதலில் சுற்றுலா விசாவில் சென்று, பிறகு வேலைக்கான விசா வாங்கி கொள்ளலாம் என்று யாராவது தெரிவித்தால், அவர்களை நம்பி போக வேண்டாம். அதுபோல் செல்வதால் ஆபத்துள்ளது” என்றார்.
குடிபெயர்வோர் பாதுகாவலர் ஜெனரல் சுரிந்தர் பகத் பேசும்போது “வெளிநாடுகளுக்கு பாது காப்பாக எப்படி செல்வது குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தவே இந்த நிகழ்வு நடைபெறுகிறது. சமூக வலைதளங்கள் மூலமாகவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். தமிழ்நாடு அரசு போதுமான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது” என்றார்.
அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் கிருஷ்ணமூர்த்தி கூறும் போது, “வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்பவர்கள் பதிவு பெற்ற முகவர்கள் மூலமாக மட்டுமே செல்ல வேண்டும். பதிவு பெறாத முகவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.