பெரியார் மீது காமராஜர் எவ்வளவு பற்று வைத்திருந்தார் என்பதற்கு 1956இல் நடந்த ஒரு நிகழ்வைக் கூறலாம்.
தந்தை பெரியாருக்கு மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து அழைப்பு வந்தது. அதன்படி முதலில் பர்மாவுக்கு போய் பின்னர் அங்கிருந்து மலேசியாவின் பினாங்கு பிறகு சிங்கப்பூர் எனப் பயணம் செய்வதாகத் திட்டம் வகுக்கப்பட்டது.
பெரியாருடன் நால்வர் செல்வதாக இருந்தது. அனைவருக்கும் விசா எடுத்து, அடுத்த நாள் பயணம் என்ற நிலையில் எஸ்.எஸ். ரஜுலா என்கிற புகழ்பெற்ற கப்பல் கம்பெனியில் பயணச் சீட்டு எடுக்கப் போனார்கள். அப்போதுதான், ‘கப்பலில் பயணம் செய்ய வேண்டும் என்றால் மாநில அரசு கொடுக்கும் ‘நோ அப்ஜெக்ஷன் சர்டிபிகேட்’ வேண்டும்‘ என்பது தெரியவந்தது.
அப்போதே மாலை 6 மணி. அடுத்த நாள் காலை 7 மணிக்குக் கப்பலில் புறப்பட வேண்டும்.
இரவுக்குள் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளரிடம் சான்றிதழ் பெறுவது நடக்கிற காரியமா என்று பயணத்தை ஏற்பாடு செய்தவர்கள் மிரண்டு போனார்கள். பெரியாரிடம் சொன்னால் கோபப்பட்டு பயணத்தை ரத்து செய்துவிடுவார் என்று, தகவலை மணியம்மையிடம் சொன்னார்கள்.
சற்று யோசித்த மணியம்மை, “நீ உடனே முதலமைச்சர் காமராஜரைப் போய்ப் பார். அவரால் உடனே ஏற்பாடு செய்ய முடியும். அய்யாகிட்டே இதை எல்லாம் சொல்லிக்கிட்டு இருக்காதே. அவர் சத்தம் போடுவார். முதலமைச்சருக்கு தொந்தரவு கொடுக்கக் கூடாது என்பார்” என்று சொன்னார்.
உடனே இரவு 8 மணிக்கு திருமலைப்பிள்ளை சாலை காமராஜர் வீட்டுக்கு போய்த் தகவலைச் சொன்னார்கள்.
கொஞ்சநேரம் யோசித்த காமராஜர், “சரி நீ நாளைக்குக் காலைல பத்து மணிக்கு வா. நான் சீல் போட்டுக் கொடுக்கச் சொல்றேன்” என்றார்.
காலை 7 மணிக்கு கப்பல் புறப்படும் தகவல் சொல்லப்பட்டது.
காமராஜர் உடனே, “அட என்னப்பா நீ? போகப்போறது பெரியார்! அவர் சாதாரண ஆளில்லை. கப்பலை நிக்கச்சொல்லி மத்தியானமா எடுக்கச் சொல்வோம்! போ போ… காலைல வா? என்றார்.
இதெல்லாம் நடக்கிற காரியமா என தயக்கத்தோடு நின்றார்கள். உடனே காமராஜர் அங்கிருந்த உதவியாளர்களிடம், “ரஜுலா கப்பல் சதக் தம்பி மரைக்காயருக்கு போனைப் போடு” என்றார். தொலைபேசித் தொடர்பை ஏற்படுத்தி அவரிடம் கொடுத்தனர்.
“இந்தாப்பா.. நாளைக்கு பெரியார் பர்மாவுக்கு போறாரு. அவருக்கு அரசாங்க அனுமதி 12 மணிக்குத்தான் கெடைக்கும். அவர் கப்பலுக்கு வந்து சேர 1 மணி ஆயிடும். நீங்க என்ன பண்றீங்க… நாளைக்கு மட்டும் கப்பல் மதியம் ரெண்டு மணிக்கு எடுங்க. பயணிகளிடம் முன்கூட்டியே அறிவிச்சுடுங்க. மற்ற பயணிகளுக்கும் தொல்லை இருக்காதில்லையா? ஞாபகம் இருக்கட்டும். போறது நம்ம பெரியார்.. புரியுதான்னேன்” என்று உரிமையோடும் அதிகாரத்தோடும் பேசினார்.
அதன்பிறகு காத்துக்கொண்டு நின்றவர்களிடம், “என்னய்யா இப்போதாவது தைரியம் வந்துச்சா, புறப்படுங்க. கவலையே வேண்டாம். கப்பலையே நிறுத்திப்புடுவோம்!” என்றார். சொன்னபடியே அடுத்த நாள் சான்றிதழ் வாங்கிக் கொடுத்து, மதியம் கப்பலை செல்ல வைத்தார். ஆனால், இந்த விவகாரம் எதுவுமே பெரியாருக்குத் தெரியாது.
(குறிப்பு: எஸ்.கே.முருகன் எழுதியுள்ள “பெருந்தலைவர் காமராஜர்” என்ற நூலிலிருந்து.)
—–
தந்தை பெரியார் பாராட்டு!
கல்வித்துறையில் காமராசரால் பெற்ற நன்மைகள் கணக்கில் அடங்காதவை. இன்று 30 ஆயிரம் பள்ளிக் கூடங்கள் உள்ளன.
ஏழைப் பிள்ளைகளுக்குப் பதினொன்றாம் வகுப்புவரை இலவசக் கல்வி: ஒருவேளை சோறுபோட்டு, துணியும் கொடுத்து பிள்ளைகளைப் படிக்க வைக்கிறார். 550 உயர்நிலைப் பள்ளிகளே இருந்த தமிழ்நாட்டில், 1000 உயர்நிலைப் பள்ளிகளைத் திறந்திருக்கிறார். இன்று 1500 உயர்நிலைப் பள்ளிகள் உள்ளன. 100க்கு 15பேரே படித்தவர்கள் என்ற நிலையை மாற்றி, 100க்கு 32 பேராக உயர்த்தியவர் பகல் உணவு தந்த பகலவன் காமராசர்.
காமராசரைப் போன்ற ஒருவர். முன் எப்பொழுது நமக்குக் கிடைத்தார்? தமிழனுடைய நலத்தை மனத்தில் வைத்துக் கொண்டு, துணிந்து காரியம் செய்கிறவருக்கு நன்றியுள்ள தமிழன் ஆதரவு தரவேண்டாமா?
(‘விடுதலை’, 21.2.1962)