தமிழ்நாடு வளர்ந்த மாநிலம்; குறிப்பாக கல்வி வளர்ச்சி, மகளிர் முன்னேற்றம், மருத்துவம், வேலை வாய்ப்பு – இன்னோரன்ன துறைகளிலும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே முன்னணியில் ஏறு நடை போடுகிறது. எடுத்துக்காட்டாக,
1. தமிழ்நாடு இந்திய நாட்டின் இரண்டாவது வளர்ந்த பொருளாதார மாநிலமாக இருக்கிறது.
2. தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.4 விழுக்காடாக இருந்த தமிழ்நாட்டின் பங்கு, கடந்த நான்கு ஆண்டுகளில் 9.21 விழுக்காடாக உயர்ந்துவிட்டது.
3. பொருளாதாரக் குறியீடுகள் அனைத்திலும் தமிழ்நாடு வளர்ச்சியை எட்டி இருக்கிறது.
4. மருத்துவம், கல்வி, சமூக நலன் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக இருக்கிறது.
5. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிரின் பொருளாதார மேம்பாட்டுக்கு வழிவகுத்துள்ளது.
6. கட்டணமில்லாத மகளிர் விடியல் பயணமானது, மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது. சமூகத்தில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்துள்ளது.
7. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், பள்ளிக் குழந்தைகளின் பள்ளி வருகையை அதிகரித்துள்ளது. அவர்களது கவனிக்கும் திறனை மேம்படுத்தி உள்ளது.
8. புதுமைப் பெண் திட்டத்தால் மாணவியரின் உயர்கல்விச் சேர்க்கை அதிகரித்துள்ளது.
9. நான் முதல்வன் திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களுக்கும் பயிற்சி வழங்குவதால் இந்தியாவின் திறன்மிக்க இளைஞர்களின் தலைநகரமாக தமிழ்நாடு வளர்ந்துள்ளது. இதில் பயிற்சி பெற்ற 2.58 லட்சம் மாணவர்கள் வேலைவாய்ப்பை உடனே பெற்றுள்ளார்கள்.
10. இந்தியாவில் வலிமைமிக்க விளையாட்டு மய்யமாக தமிழ்நாடு வளர்ந்துவிட்டது.
11.ஆண்டுதோறும் 15 லட்சம் பேர் உயர்சிகிச்சை பெற தமிழ்நாடு வரும் அளவுக்கு மருத்துவத் தலைநகராக தமிழ்நாடு திகழ்கிறது.
12. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் 2024 ஆம் ஆண்டுக்கான அய்க்கிய நாடுகளின் முகமைகளுக்கு இடையேயான விருதைப் பெற்றுள்ளது.
13.தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் பன்முக வறுமைக் குறியீடுகளின் கீழ் 2.2 விழுக்காடு மக்கள் மட்டுமே ஏழைகளாக இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியான 14.96 விழுக்காட்டை விட மிகமிகக் குறைவு ஆகும். அடுத்த இரண்டு ஆண்டுகளில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை அரசு தொடங்க உள்ளது.
14.அமைதியான மாநிலமாக இருப்பதால் பணிபுரியும் பெண்கள் அதிகமாக இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இந்திய நாட்டின் மொத்தப் பெண் தொழில் பணியாளர்களில் 41 விழுக்காடு பெண்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.
15. கடந்த மூன்று ஆண்டுகளில் 10 லட்சம் கோடிக்கும் மேலான தனியார் முதலீட்டுத் திட்டங்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவை எல்லாம் கடந்த நான்காண்டு சாதனைகள்.
1912ஆம் ஆண்டில் டாக்டர் சி. நடேசனார் அவர்களின் தொலைநோக்குச் சிந்தனையோடு கட்டமைக்கப்பட்டதுதான் பார்ப்பனரல்லாதாரின் அமைப்பான சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League)
அதுதான் பின்னர் திராவிடர் சங்கமாகி, பிறகு தென்னிந்திய நலவுரிமைச் சங்கமாகி(நீதிக்கட்சி)யது. அதன் பின் திராவிடர் கழகமாக மலர்ந்து சமுதாயத் துறையில் திராவிடர் கழகமாகவும், அரசியல் – ஆட்சித் துறையில் தி.மு.க.வாகவும் செயல்பட்டு வருகிறது.
காமராசர் தலைமையிலான ஆட்சி காங்கிரஸ் என்றாலும், அது திராவிட இயக்கம் என்று சொல்லத்தக்க வகையில், பார்ப்பனரல்லாத மக்களான தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் கல்விக் கண்களைத் திறந்த ஆட்சியே! அதனால்தான் கதர்ச் சட்டைக்குள் கருப்புச் சட்டை என்று ‘கல்கி’கள் கார்ட்டூன் போட்டன.
இன்றைய தி.மு.க. ஆட்சி திராவிட மாடல் ஆட்சியாக – சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களின் தலைமையில் தந்தை பெரியாரின் சமூகநீதி, அண்ணல் அம்பேத்கரின் சமத்துவ நீதிகளை இரு கண்களாகக் கொண்டு இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைக்கும் மக்கள் நல ஆட்சியாக மலர்ந்து மணம் வீசிக் கொண்டு இருக்கிறது.
ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால் சித்தாந்த ரீதியாக, இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கும் பிஜேபி தலைமையிலான ஹிந்துத்துவா ஆட்சிக்கு எதிரானதாகும்.
அதனால்தான் தமிழ்நாட்டில் நடைபெற்றுக் கொண்டி ருக்கும் திராவிட மாடல் அரசுக்கு எதிராக எல்லா வகை யிலும், சட்ட விரோதமாகவும், நியாய விரோதமாகவும் நடந்து கொண்டு வருகிறது ஒன்றிய பிஜேபி அரசு.
முறையாக மாநில அரசுக்கு அளிக்கப்பட வேண்டிய நிதியை முடக்குவது, பேரழிவு நிவாரண நிதியைக்கூட அளிக்க மறுப்பு என்பது எல்லாம் எந்த வகையில் சரியானது?
குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தவர் தான் இன்றைய ஒன்றிய அரசின் பிரதமர் மோடி. இவர் குஜராத் மாநில முதலமைச்சராக இருந்தபோது, ‘நீட்’டை எதிர்த்தவர், ‘ஜி.எஸ்.டி.’யை எதிர்த்தவர் – ஏன் ஆதாரையும் ஏற்காதவர்.
குறிப்பாக ஜி.எஸ்.டி., என்பது மிக முக்கியமான அம்சம். ஒன்றிய பிஜேபி அரசு இதில் எப்படியெல்லாம் ஓர வஞ்சனையாக நடந்து கொள்கிறது.
பிஜேபி ஆளும் உத்தரப்பிரதேசத்துக்கு ரூ.31,962 கோடி என்றால் தமிழ்நாட்டிற்கோ வெறும் ரூ.7,268 கோடி யாகும்.
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் (ஜி.எஸ்.டி.), ஒவ்வொரு ரூபாய்க்கும், ஒன்றிய அரசு திருப்பிக் கொடுக்கும் தொகை வெறும் 28 பைசா தான்!
எல்லா வகைகளிலும் தமிழ்நாட்டிற்கு ஓர வஞ்சனை மனப்பான்மையோடு முட்டுக்கட்டை போட்டாலும் இந்தியாவிலேயே தமிழ்நாடு பல்துறைகளிலும், வகைகளிலும் முதன்மை இடத்தில் இருக்கிறது – இதனை ஒன்றிய அரசே ஒப்புக் கொள்ளும் நிலையில் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நிற்கிறது என்றால் இதற்குக் காரணம் இந்த மண்ணிற்கே உரிய திராவிட சித்தாந்தமும், அதன் அடிப்படையில் ஆட்சி புரியும் திராவிட மாடல் அரசும்தான்.
அடிக்க அடிக்க பந்து எழுவதுபோல ‘திராவிட மாடல்’ அரசுக்கு முட்டுக்கட்டைகளைப் போடப் போட, இவ்வரசு எல்லா வகையிலும் மேலோங்கி நிற்கிறது.
2026இல் நடக்கவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலி லும் கடந்த தேர்தலைவிட பெரு வெற்றி பெறும் என்பதில் அய்யம் இல்லை. இது கல்லின் மேல் எழுத்தாகும்!