அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்; அதனால்தான் அவர் பெரியார்!
அன்புடன் ஆனந்தி – கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியிடம் நேர்காணல்!
சென்னை, பிப்.8 ‘‘நான் பேசியது தவறுதான்; நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார் தந்தை பெரியார். ‘‘அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்! அவர்தாம் பெரியார்! அதனால்தான் அவர் பெரியார்! என்னே மாண்பு – இவர்தான் பகுத்தறிவுப் பகலவன்’’ என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கூறினார்.
பெரியார் பன்னாட்டமைப்பின் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியருடன் (7.12.2024), அன்புடன் ஆனந்தியின் நேர்காணலின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
அன்புடன் ஆனந்தி: மிகவும் சிறப்பு அய்யா.
உங்கள் ஆசிரியர் திராவிடமணி அவர்களிடம் தொடங்கி, 10 வயது பகுத்தறிவு பேச்சாளர் என்ற பெயர் பெற்றீர்கள்.
10 வயது சிறுவன் பகுத்தறிவுச் சிந்தனை களை எப்படி பேச முடியும்? என்று எல்லோரும் வியப்போடு வந்து பார்க்கின்ற நிலை ஏற்பட்டி ருக்கிறது அந்தக் காலகட்டத்தில்.
அந்த வயதில் உங்களுடைய உள்ளத்தில் ஊறியிருக்கிறது. பெரியாரைப் பார்த்தபொழுது எப்படி பேசினார் என்பதைப்பற்றியும் சொன்னீர்கள்.
அண்ணாவைப்பற்றி நீங்கள் சொன்னீர்கள். அறிஞர் அண்ணா அவர்கள் உங்கள்மேல் அபரிமிதமான அன்பு வைத்திருந்தார் என்று நிறைய இடங்களில் சொல்லியிருக்கிறீர்கள்.
அறிஞர் அண்ணாவுடன் உறவு
உங்களுக்கு எப்படி இருந்தது?
எங்களுக்காக அதை நீங்கள் சொல்லுங்கள். அறிஞர் அண்ணாவுடனான உறவு உங்களுக்கு எப்படி இருந்தது?
தமிழர் தலைவர்: அண்ணாவிற்கு எப்பொழுதுமே தன்னுடைய இயக்கத்தில் இளைஞர்கள் வரவேண்டும் என்று விரும்புவார்.
குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் வந்தால், அவர்களை உற்சாகப்படுத்துவார். அதில் வயது இடைவெளி என்பது இந்த இயக்கத்தில் கிடையாது!
பெரியாருக்கும், அண்ணாவிற்கும் 30 ஆண்டுகள் வேறுபாடு.
அதேபோன்றுதான் கலைஞர் வயதும் இடை வெளியும்!
அதேபோன்று, எனக்கும், அய்யா பெரியாருக்கும் 50 ஆண்டுகளுக்குமேல் வேறுபாடு.
அதற்கு அய்யா சொன்ன விளக்கம் மிகவும் அற்புத மான விளக்கமாகும்.
பெரியாரின் இளமையின்
இரகசியம் என்ன?
‘‘என்னுடைய வயதைப்பற்றி எல்லோரும் சொல்கி றார்கள். நான் என்னுடைய வயதைக் குறைப்பதற்காக, நான் ‘வயதானவர்களிடம்’ பழகுவதில்லை. இளை ஞர்களிடம்தான் பழகுவேன்’’ என்று சொன்னார்.
அதேபோன்று, அண்ணாபற்றி ஒரு சிறிய நிகழ்வை சொல்லவேண்டும்.
அண்ணா அவர்கள், திருப்பூரில் அய்யாவை சந்தித்தபோது அவரை இயக்கத்திற்கு வரச் சொன்னார்.
இயக்கத்திற்கு வந்த அண்ணாவின் திறமைக்கு மதிப்பு கொடுத்து, 1937, ஆகஸ்ட் 27 ஆம் தேதி துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இளைஞர் மாநாட்டிற்கு அண்ணா அவர்களையே தலைமை தாங்கச் சொல்கிறார்:
அண்ணாவை உற்சாகப்படுத்திய அய்யா!
அம்மாநாட்டில் அண்ணா அவர்கள் உரை யாற்றும்பொழுது, ‘‘நான் ஒரு இளைஞன். என்னை இந்த மாநாட்டிற்கு தலைமை தாங்க வைத்திருக்கிறார் அய்யா பெரியார் என்றால், எனக்கு பயமாகவும் இருந்தது” என்றார்.
அதற்குப் பிறகு உரையாற்றிய அய்யா பெரியார் அவர்கள், ‘‘நான் யாரையும் சின்னப் பசங்கள் என்று கருதவில்லை. வயதான வாலிபர்கள் என்றுதான் நான் நினைக்கிறேன்.” என்றார்.
ஒரு புதிய சொல்லாக்கத்தை தந்தை பெரியார் அவர்கள் சொன்னார். ‘‘வயதான வாலிபர்கள்’’ அதிகமாகப் பயன்பட்டார்கள், செயலுக்கு. ஆகவேதான், நான் பழகுவது, பேசுவது, என்னை உற்சாகப்படுத்துவது, களமாடக் கூடியவர்கள் வாலிபர்கள்தான் என்று சொல்லி, அண்ணாவை உற்சாகப்படுத்தினார்.
அய்யா அவர்கள் எல்லோரிடமும் அன்பாக இருந்தாலும்கூட அய்யாவை தூரத்திலிருந்துதான் எல்லோரும் பார்ப்பார்கள். ஆனால், அண்ணா அவர்கள், எல்லோர்மீதும் தோள்மேல் கைகளைப் போட்டுப் பேசக்கூடியவர்.
அய்யா பெரியாரிடம்,
அண்ணா தெரிந்துகொண்டது என்ன?
அய்யா அவர்களிடமிருந்து, அண்ணா அவர்கள் என்னென்ன தெரிந்துகொண்டார் என்பதைப்பற்றி சில நிகழ்வுகளைச் சொல்வார்கள்.
‘‘எம்.என்.ராய் விருது’’ பெரியாருக்குக் கொடுத் தார்கள். இப்படி நடந்தது, அப்படி நடந்தது என்று சொல்லிச் சொல்லி சிரிப்பார்.
ஆகவே, அய்யா – அண்ணா உறவு என்பது வெறும் அரசியல் அமைப்பு முறையிலோ, தலைவர் – செயலாளர் என்ற முறையிலோ கிடையாது. ஒரு குடும்பப் பாசம். அதுதான் கொள்கைக் குடும்பம்!
அண்ணா அவர்கள், தி.மு.க. பிரிந்த பிறகு 18 ஆண்டுகளுக்குப் பிறகு, திருச்சியில் அய்யாவை சந்திக்கிறார். அய்யா அவர்களின் பிறந்த நாள் விழா நிகழ்ச்சியில் பேசுகிறார்.
‘‘படித்து முடித்தவுடன் என்ன செய்யப் போகிறீர்கள்? என்று அய்யா கேட்டார்” என்று பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து பேசினார்.
அப்படி பேசிக் கொண்டே வரும்பொழுது, ‘‘என்னுடைய தொத்தா அவர்களிடம், எங்கே உங்கள் பிள்ளை?” என்று கேட்டிருக்கிறார்கள்.
அப்பொழுது என்னுடைய தொத்தா, ‘‘யாரோ ஒருவர் ஈரோட்டிலிருந்து வந்தார். அவர் பிள்ளை பிடித்துக் கொண்டு போவதுபோன்று, என் பிள்ளை யைப் பிடித்துக் கொண்டு போய்விட்டார்” என்று சொன்னார்கள் என்பதைச் சொன்னார்.
அவர் எப்படி தயாரானார்; பெரியார் வழியில் எப்படி பயணித்தார். அய்யாவின் மேன்மை என்ன? இந்தக் கொள்கையின் தேவை என்ன? என்பதையெல்லாம் எடுத்துச் சொன்னார்.
எல்லோருக்கும் வாய்ப்பு கொடுத்து, எல்லோரையும் தட்டிக் கொடுத்து உற்சாகப்படுத்துவதுதான் இந்த இயக்கத்தின் தலைமையின் தனித்தன்மை!
அதேபோன்றுதான் தந்தை பெரியார் அவர்கள், அண்ணாவை முன்மொழிந்தார்.
எப்பொழுது?
1937 ஆகஸ்ட் மாதம் துறையூரில் நடைபெற்ற சுயமரியாதை இளைஞர்கள் மாநாட்டிற்கு. இது ஒன்றுபோதும், இந்த அமைப்பு எப்படி உருவாயிற்று என்பதற்கு.
தலைமுறை இடைவெளி இல்லாத இயக்கம்!
அதுதான் தலைமுறை இடைவெளி இல்லாத ஓர் இயக்கம் – அன்றும் – இன்றும் – என்றும்.
அன்புடன் ஆனந்தி: அருமை அய்யா. ‘வயதான வாலிபர்கள்’ என்ற சொல்லாட்சியே மிகவும் சிறப்பாக இருக்கிறது.
நேற்று நடந்ததே சில பேருக்கு ஞாபகத்தில் இருக்காது. ஆனால் நீங்கள், நடந்த ஆண்டு களைச் சுட்டிக்காட்டி, இவ்வளவு அழகாக நினைவு கூர்கிறீர்கள்.
நீங்கள் சொன்னதுபோல, பெரியார் பன்னாட்டமைப்பும் அதே கொள்கையைத்தான் பின்பற்றுகிறது. சிறிய குழந்தைகள்தான் வாழ்த்துப் பாடலை உங்களுக்குப் பாடினார்கள். நிகழ்ச்சியும் தொடங்கியது.
ஏனென்றால், இளைய தலைமுறையினரிடம் அதை நம்பி கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான விஷயம்.
பெரியார் செய்ததை அண்ணா அவர்களும் செய்திருக்கிறார்கள்.
அரசியல் சார்ந்து இல்லாமல், ஒரு குடும்ப உறவு போல பழகியிருக்கிறார்கள். அதில் நீங்களும் பாராட்டப்பட்டு, சீராட்டப்பட்டு, வளர்க்கப்பட்டு இருக்கிறீர்கள் என்பது எங்களுக்கெல்லாம் கூடுதல் மகிழ்ச்சி!
நாங்களும் இந்த வார்த்தையைப் பிடித்துக் கொள்கிறோம், ‘வயதான வாலிபர்கள்’ என்பதை.
நான் அடிக்கடி சொல்வது உண்டு; சின்ன சின்ன குழந்தைகளுடன் பிரண்ட்ஷிப் வைத்துக் கொள்ளவேண்டும். என் தாயார் சொல்வார்கள், உன் சேர்க்கை சரியில்லை என்று. அது என்னவென்றால், சின்ன சின்ன பிள்ளைகளோடுதான் நான் பழகுவேன். அதனால், நம் மனதிற்கு உற்சாகமாக இருக்கும். நாம் வேகமாக இயங்கக் கூடிய மனநிலையைக் கொடுக்கும்.
அதுபோன்று குழந்தைகளோடு, இளவய தினரோடு பழகவேண்டும் என்று நீங்கள் அழகாகச் சொன்னீர்கள், மகிழ்ச்சி அய்யா!
அடுத்ததாக, பகுத்தறிவு திருமணங்கள் நம்முடைய கழகத்தின் மிகவும் முக்கியமான வழிமுறையாகும். நிறைய சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள். அதிலும் குறிப்பாக, உங்களைவிட பெரியவர்க ளுக்கும்கூட மண விழாக்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள். அதில் ஏதாவது ஒன்றை நீங்கள் சொல்லுங்கள்?
ஆசிரியருக்கே திருமணத்தை நடத்தி வைத்த ஆசிரியர்
தமிழர் தலைவர்: நான் எழுதிய ‘அய்யாவின் அடிச்சுவட்டில்’ என்கிற புத்தகத்தில் தேதி வாரியாக பதிவு செய்திருப்பேன்.
கடலூரில் ராமச்சந்திரன் என்பவருடைய மண விழாவினை நடத்தி வைப்பவர் வரவில்லை. திருக்கு றளாரும் வரவில்லை. யாரும் இல்லை என்றவுடன், என்னை தலைமை தாங்கி நடத்தச் சொன்னார்கள். அந்த மணவிழாவினை நான் நடத்தி வைத்தேன். அன்று மணமகனான பிறகு, அவரே எனக்குப் பள்ளி ஆசிரியராக வந்தார்.
சடங்காச்சாரமாக இருந்தால், மந்திரம் சொல்லித்தான் மணவிழாவினை நடத்தி வைக்கவேண்டும்; மந்தி ரங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்று சொல்வார்கள்.
ஆனால், சுயமரியாதைத் திருமண முறை என்பது பிரச்சார முறையாகும். மணவிழாவில், இரண்டு பேரும் வாழ்க்கை இணையர்களாக ஆகிறார்கள்.
அது ஒரு கொள்கைப் பதிவு – வாழ்க்கை இணை யேற்பு – கொள்கையைப் பரப்பும் முறைதான்.
ஏன் பழைய மணமுறை மாற்றப்பட்டது என்பதைச் சொல்வதுதான் சுயமரியாதைத் திருமண முறையாகும்.
இதுபோன்ற பணிகளைச் செய்யவேண்டும் என்று என்னுடைய ஆசிரியர் திராவிடமணி அவர்கள் சொன்னார்.
எனக்கு 16 வயது இருக்கும்பொழுதே மூத்தவர்க ளுக்குக்கூட நான் திருமணம் செய்து வைத்திருக்கிறேன். காரணம், தொடர்வண்டியை தவறவிட்டதால், மணவிழாவினை நடத்தி வைப்பவர்கள் வரவில்லை.
நம்முடைய தோழர்கள் பகுத்தறிவுவாதிகள். அதனால், சடங்கு, சம்பிரதாயம், அவர்தான் மண விழாவினை நடத்தி வைக்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. வைதீகர்கள் என்றால், மனதில் ஒரு சங்கிலியைப் பிணைத்திருப்பார்கள்; அவர் வரவில்லை என்றால், அது கெட்ட சகுனமாயிற்றே – ஆரம்பத்திலேயே தடங்கலாக இருக்கிறதே என்று நினைப்பார்கள்.
ஆனால், சுயமரியாதை மணமுறை என்பது அப்படியல்ல. யார் வந்திருக்கின்றார்களோ, அவர்களது தலைமையில் மணவிழாவினை நடத்தலாம். புதிதாக வருபவர்களுக்கு விளக்கம் சொல்லலாம் – பிரச்சாரம் – பரப்புரைதானே!
பகுத்தறிவு என்பது எல்லாத் துறையிலும் பகுத்தறிவு என்பதற்கு இதுவே ஓர் அடையாளம், அதுவே உற்சாகம், அதுவே ஒரு நல்ல பயிற்சியாகும்.
அன்புடன் ஆனந்தி: அருமையாகச் சொன்னீர்கள் அய்யா. வயது ஒரு பொருட்டல்ல; கொள்கை தான் அதற்கு முக்கியம். கொள்கைக்கு வயது ஒரு தடை இல்லை. 16 வயதிலேயே மணவிழாக்களை நடத்தி வைத்திருக்கிறீர்கள் என்பது பெருமையாக இருக்கிறது.
உங்கள் தலைமையில் மணவிழாவினை நடத்திக் கொண்டவர்கள் இன்றும் உங்களுடன் தொடர்பில் இருக்கிறார்கள்; உங்களைவிட வயதில் மூத்தவர்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சியாகும்.
அடுத்ததாக உங்களிடம் ஒரு கேள்வி. தகப்பன் – மகன் என்ற நிலையில் ஒரு கேள்வி.
தந்தை பெரியார் எதையாவது சொல்லி, அதனைத் தாங்கள் மறுத்தது உண்டா?
தந்தை பெரியார் ஏதாவது சொல்லி, அதை நீங்கள் மறுத்தது உண்டா? எதிர்த்துப் பேசியது உண்டா?
தமிழர் தலைவர்: இது ஒரு நல்ல கேள்வி. அய்யா அவர்கள் சொல்லி நான் மறுத்தது இல்லை. ஆனால், அய்யா அவர்கள் என்னை ‘விடுதலை’ ஆசிரியராக அமர்த்திய நேரத்தில், எனக்கு ஒரு தனி உரிமை கொடுத்தார்.
எனக்கு முன்பு ‘விடுதலை’ ஆசிரியராக இருந்த தோழர் குத்தூசி குருசாமி அவர்கள் நீண்ட அனுபவம் பெற்றவர். அவர் எழுத்துத் துறையில் சிறந்தவர். நான் எழுத்துத் துறையில் இருந்தவன் அல்ல. அவசியத்தை முன்னிட்டு, நெருக்கடியிலிருந்து பத்திரிகையைக் காப்பாற்றுவறத்காக இந்தத் துறைக்கு வழக்குரைஞர் தொழிலை விட்டுவிட்டு வந்தேன். சிற்சில நேரங்க ளில் முன்பு கட்டுரைகளை எழுதியுள்ளேன்.
அய்யா அழைத்தவுடன், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அப்போது அய்யா அவர்களிடம் பணிவாக ஒரு வேண்டுகோள் வைத்தேன்.
அது என்னவென்றால், அய்யா இந்தப் பணியில் நான் எப்படி நடந்துகொள்ளவேண்டும்? இந்தத் துறையில் எனக்கு அனுபவம் இல்லையே என்றேன்.
அது ஒன்றும் பிரமாதம் இல்லை. இந்த இயக்கத்தி னுடைய கொள்கைகள் உங்களுக்கு நன்கு தெரியும். எழுதவும் தெரியும் உங்களுக்கு என்று சொல்லிவிட்டு, என்னை அழைத்து வந்து, ஆசிரியர் நாற்காலியில் அமர வைத்தார். என்னுடைய வாழ்நாளில் பெற முடியாத பேறு அது.
என்னுடைய உரை, நான் எழுதி அனுப்பும் அறிக்கைகள் வரும்பொழுது, உங்களுக்கு சந்தேகக் கருத்து இருந்தது என்றால், அதை நீங்கள் கேட்கலாம் திருத்தலாம்; ஏன், சிலவற்றை நிறுத்தலாம் என்று சொன்னார்.
அய்யா அவர்கள் எனக்குக் கொடுத்த உரிமை என்பது தாராளமான உரிமை. அது ஆழமானதாகும். மறக்க முடியாது.
ஒருவருக்கு அதிகமான உரிமையைக் கொடுத்தால், அதில் பொறுப்புணர்ச்சியோடு நடந்துகொள்வதற்கு அதிகமாகக் கவலைப்படவேண்டும் அல்லவா?
மிக விலையுள்ள ஒரு பொருளை, ஒருவரிடம் கொடுத்து, பத்திரமாகக் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று சொன்னால், அதிகமான கவலை எடுத்துக்கொண்டு, அதிகமான அக்கறை எடுத்துக்கொண்டு அந்தப் பொருளை உரியவரிடம் கொண்டுபோய்ச் சேர்க்கவேண்டும் அல்லவா?
அதுபோன்று, சரியாகச் செய்யவேண்டுமே என்ற அதிகமான பொறுப்புடன் செய்தேன். சந்தேகம் இருந்தால், கேட்பேன், அதை நிவர்த்தி செய்வார் அய்யா பெரியார்.
தந்தை பெரியாருடைய தனித்தன்மை என்ன வென்றால், மாறுபட்ட கருத்தை அவரிடம் தாராளமாக விவாதிக்கலாம். நல்ல உணர்வில் அதை எடுத்துக் கொள்வார்!
தந்தை பெரியாருக்கும், ஆசிரியருக்குமிடையே நடைபெற்ற ஒரு விவாதம்!
ஒருமுறை ஒரு குறிப்பிட்ட கருத்தை – திருச்சியில் அய்யா அவர்களின் உரையை வெளியிடும்பொழுது, அவருடைய உரையில் சட்டபூர்வமான விஷயம் வருகிறது. ஃபேக்சுவல் எரர் (Factual Error) என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இன்றைய சட்டம், அதற்கு முன்பிருந்த சட்டத்திற்கு விரோதமாக இருக்கிறது. அந்தச் சட்டத்தைப்பற்றி அய்யாவிடம் எடுத்துச் சொல்லவில்லை. அதனால், அவர் பழைய சட்டப்படி எதுவும் செய்ய முடியாது என்ற கருத்தில் பேசியிருக்கின்ற பகுதி அது.
அந்த உரையை நான் வெளியிடாமல் நிறுத்தி விட்டேன். ஏனென்றால், அய்யா அவர்கள் தவறாகப் பேசினார் என்று பிறகு வரக்கூடாது என்பதால்.
அடுத்த நாள் அய்யா பெரியார் அவர்கள் சென்னைக்கு வந்துவிட்டார். அவரிடம் நான், ‘‘அய்யா ஒரு சந்தேகம். நேற்று நீங்கள் ஆற்றிய உரையில் ஒரு சந்தேகம். அதற்குப் பிறகு அந்த சட்டம் மாறிவிட்டது’’ என்றேன்.
‘‘இல்லையே, எனக்கு சரியாகத்தான் சொன்னார்களே’’ என்றார்.
அய்யா அவர்கள் ஒரு கருத்தை உள்வாங்கிவிட்டார் என்றால், அதில் மிகவும் உறுதியாக இருப்பார்.
என்னிடம் சொல்கிறார், ‘‘என்னிடம் தெளிவாகச் சொன்னார்களே, நீங்கள் சொல்வது எனக்கு ஏற்புடையதாகத் தெரியவில்லையே” என்றார்.
‘‘இல்லீங்க அய்யா, அதற்குரிய ஆதாரம் என்னிடம் இருக்கிறது’’ என்றேன்.
‘அப்படியா?’ என்றார் அய்யா.
இரண்டு பேருக்கும் பெரிய விவாதமே நடை பெற்றது சில மணித்துளிகள்.
‘ஆதாரத்தோடுதான் நான் சொல்கிறேன்’ என்றேன்.
என்ன இப்படி சொல்கிறீர்கள்? ஒருவருடைய பெயரைக் குறிப்பிட்டு, அவர் சொன்னாரே என்றார்.
இரண்டு பேரும் சமதளத்தில் நின்று வாதம் செய்கி றோம்! அது எதிர்பாராத ஒன்று. என் வாழ்நாளிலேயே அது ஒரு நிகழ்வுதான்.
கொஞ்சம்கூட குரலை தாழ்த்தாமல் நான், ‘‘என்ன அய்யா நீங்கள், நான் திரும்பத் திரும்ப சொல்கிறேன். அவர் சொன்னார் என்று சொல்கிறீர்களே? அவர் வக்கீல் இல்லை அய்யா; நான் சட்டம் படித்தவன்” என்றேன்.
அப்படியா? என்றார் அய்யா.
அப்போதும் அய்யா விடவில்லை. ‘‘அதற்கு என்ன ஆதாரம் உங்களிடம் இருக்கிறது?’’ என்று கேட்கிறார்.
‘‘ஆதாரம் வீட்டில் இருக்கிறது. எனக்கு 24 மணி நேரம் அவகாசம் கொடுங்கள்’’ என்றேன்.
‘‘இப்பொழுது போய் நான் எடுத்து வரட்டுமா?’’ என்றேன்.
‘‘வேண்டாம், வேண்டாம். உங்களுடைய வேலை யைப் பாருங்கள்; நாளைக்குப் பார்த்துக் கொள்ளலாம்’’ என்றார்.
அய்யா அவர்கள் ஒரு கருத்தை மனதிற்குள் பதிய வைத்துக் கொண்டார் என்றால், எந்தக் காரணத்தை முன்னிட்டும் அதிலிருந்து பின்வாங்கமாட்டார். அதே புத்தியை எனக்கும் அவர் தந்ததினால், நான் சொல்வதில் தவறு இல்லை என்றால், நான் வாதம் செய்வேன்.
அதனால்தான் அவர் பெரியார்!
ஒரு தலைவரிடம் தொண்டன் எதிர்த்துப் பேசி னால், மற்ற கட்சிகள், இயக்கங்களில் அவனை அந்தக் கட்சியிலிருந்து, இயக்கத்திலிருந்து நீக்கி விடுவார்கள்.
நான், பெரியாரிடம் பணியாற்றுகிறேன். அடுத்த நாள் அந்த ஆதாரத்தைக் கொண்டு வந்து காட்டினேன்.
‘‘ஆமாம், நான் பேசியது தவறுதான். நீங்கள் சொன்னது சரிதான்’’ என்றார். அந்தப் பெருந்தன்மைக்குப் பெயர்தான் பெரியார்!
அவர்தாம் பெரியார்!
அதனால்தான் அவர் பெரியார்!
என்னே மாண்பு – இவர்தான் பகுத்தறிவுப் பகலவன்!
(நாளை தொடரும்)