சமூகநீதி சமத்துவத்தை மறுக்கும் ஒன்றிய அரசு இன்றளவும் பெரும்பான்மை இந்தியக் கிராமங்களில் 95% மக்கள் குடிசைகளில் வாழ்கின்றனர்.
பார்ப்பன ஆதிக்கம்
அதே கிராமங்களில் ஊரில் உள்ள சில உயர்ஜாதி நபர்களின் வீடுகள் அனைத்து வசதிகளையும் கொண்ட பெரிய அரண்மனை போன்று இருக்கும். தமிழ்நாட்டைத் தாண்டிவிட்டால், இந்த வேறுபாடு மிகவும் பிரமாண்டமாகத் தெரியும். குறிப்பாக, ஒன்றிய மோடி அரசால் நாட்டின் உயர்ஜாதி அல்லாத மக்களை ஏழையாகவே வைத்திருக்க சதிகள் தீட்டப்படுகின்றன. பார்ப்பன ஆதிக்கத்திற்கு எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கும் அவர்களது கட்டளைக்கு மறுபேச்சின்றி ஆடும் சற்சூத்திரக் கூட்டத்திற்கும் ஆதரவாக மோடி அரசு மிகவும் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.
கடந்த 10 ஆண்டுகளாக, ஏழை – பணக்காரர் பாகுபாடு குறியீடு மிக அதிக அளவில் வேறுபாட்டோடு காணப்படுகிறது. தொழிலதிபர்கள், குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்த கூட்டங்கள் அனைத்து வசதிகளையும் பெற்று, மேலும் மேலும் தங்களின் பொருளாதாரத் தகுதியை வளர்த்துக் கொண்டே வருகின்றனர். இந்த மண்ணின் மைந்தர்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஏழைகளாக உள்ளனர். அன்றாட வாழ்க்கைக்கே அவர்கள் மிகவும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இதனால், தனிமனித வளர்ச்சி இங்கே மிகவும் அபாயகரமான நிலையில் தான் உள்ளது.
ஆசியாவில் மனித வளர்ச்சி குறியீட்டில் இந்தியா 48ஆவது இடத்தில் உள்ளது. உலகளவில் 130ஆவது இடத்துக்குப் பின்னால் வருகிறது. கிராமப்புறங்களில் சமூக நீதி மற்றும் சமத்துவம் மறுக்கப்பட்டதால், உயர் ஜாதியினர் அல்லாத இளைஞர்கள் பிழைப்பு தேடி பெருநகரங்களுக்குச் செல்கின்றனர். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, அதை வைத்து மத்திய கிழக்கு, அய்ரோப்பா மற்றும் அமெரிக்காவுக்குச் செல்கின்றனர்.
வளர்ச்சி நாடுகள்
நாம் சுதந்திரம் பெற்ற பின்னர், விடுதலை பெற்ற நாடுகளான சீனா, தென் கொரியா, ஜப்பான், வியட்நாம், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்றவை மனித வளர்ச்சி குறியீட்டில் மிகவும் முன்னணியில் உள்ளன. இவற்றிற்குக் காரணம், இந்த தென் ஆசிய நாடுகளில் மக்களின் கல்வி, சுகாதாரத்திற்கு முதன்மை முக்கியத்துவம் தரப்பட்டது.
அடிப்படை வசதிகளான குடிநீர், அனைவருக்கும் சமமான வசிப்பிடம், விவசாயத் தொழிலுக்குத் தேவையான அனைத்து சாதனங்கள் அனைத்து மக்களுக்கும் சமமாகக் கிடைக்க பலவகை திட்டங்கள், மின்சாரம், தரமான சாலைகள் வழங்கப்பட்டன. இங்கு மக்களிடையே எந்த பாகுபாடும் இல்லாமல் சீரான வளர்ச்சி, கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இருந்தது. ஆனால், இங்கே ஏற்றத் தாழ்வுகளால் ஆசியா அளவில்கூட தங்கள் சாதனையை முழங்க முடியாதவர்கள் உலகில் எப்படி சாதனை படைப்பார்கள்?