மெய்யன்பர்களே!
உலகில் நடைபெறும் நிகழ்ச்சி முறைகளைப் பலருக்குத் தெரிவிப்பதற்கும் நல் உணர்ச்சியை மக்களிடையெழுப்புவதற்கும் பத்திரிகைகள் இன்றியமையாதன. கிராமாந்திரங்களில் விஷயம் யாதொன்றும் தெரிந்துகொள்ள இயலாதவர்கள் பத்திரிகைகளினால் வியாபாரம், அரசாங்கமுறை, தற்காலநிலை முதலியவைகளைத் தெரிந்து கொள்வார்கள், பல பெரியார்களின் கருத்தை அறிந்து கொள்வார்கள்.
வியாபாரம், விவசாயம் முதலிய ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு பத்திரிகையிருத்தல் அவசியமாகும். பல ஜனங்களுக்குப் பிரயோஜனமாகும் விஷயங்கள் பலவற்றிற்குப் பல பத்திரிகைகள் அவசியம். ஸ்ரீமான் நாயக்கரால் ஆரம்பிக்கப்படுகின்ற இக்குடிஅரசு பத்திரிகையின் தன்மையைக் கவனித்தால் மிகுந்த ஆராய்ச்சியுடன் ஆரம்பிக்கப்போகும் ஒரு பத்திரிகை யாகக் காணப்படுகின்றது. ஸ்ரீமான் நாயக்கரவர்கள் பேசியதிலிருந்து பலநாள் யோசித்து ஆரம்பிக்கப்படும் பத்திரிகை என்று தோன்றுகிறபடியால் முன்யோசனையுடன் இறங்குபவர்கள் என்றும் பின் வாங்காது தைரியமாய் நிலை பெற்று நிற்பார்கள் என்பது உறுதி. மிகுந்த செல்வாக்குடைய ஸ்ரீமான் நாயக்கர் அவர்கள் நடத்தும் இப்பத்திரிகை உங்களுக்கும் என்னைப் போன்றவர்களுக்கும் மிகுந்த பயனை அளிக்குமென நம்புகிறேன். பல பத்திரிகைகளிலிருந்தும் இப்பத்திரிகை போன்ற கருத்தையுடைய பத்திரிகை வேறொன்றுமில்லை. அதனுடைய பெயரே அதற்குச் சான்றாகும் .
நாம் நாளாக ஆக நமது நிலையைக் கீழாக்கிக் கொண்டே வருகிறோம். நல்ல குணம், நம்பிக்கை முதலியவைகளை யாமிழந்துவிட்டோம். இந் நிலையில் யாமிருந்தால் முடிவு என்னாகும் என் பதை நாம் கவனிக்கவில்லை. கெட்டவர்கள் இந்நாளில் மிகுந்துவிட்டனர். நன்மையடையும் வழிகள் தடைபட்டுக் கொண்டே வருகின்றன.
மேன்மை அடையும் வழியைக் காணோம். கண்டபடி ஆட்சி முறை நடக்கக்கூடாது. தன்னால், தன்பரிசனத்தால், பகைவரால், கள்வரால், விலங்குகளால் உண்டாகும் துன்பங்களைத் துடைத்துக் காத்தலே ஆட்சி முறையின் ஒழுங்கு.‘குடி அரசு’ இத்தன்மைக்கு நம்மைக் கொண்டு வரும் என நினைக்கிறேன். அவரவர்களுடைய கருத்துகளை யாதொரு நிர்ப்பந்தமுமின்றி வெளியிடச் சுதந்திரம் வேண்டும்.
நமக்குள் இருக்கும் அவநம் பிக்கை நீங்கிச் சகோதரபாவம் வளரவேண்டும் .இப்பொழுது நாம் பேச்சளவிலும், சிற்றுண்டி முதலிய சில்லரை விஷயத்திலும்தான் சகோதரப்பாவத்தைக் காண்கிறோம். உண்மைச் சகோதரத்துவம் எங்கும் காணோம். பிறரது சொத்தைப் பறிப்பதற்கே சகோதரப்பாவத்தைக் காண்பித்து வருகின்றனர்.உயர்வு, தாழ்வு என்ற ஆணவம் மிகுந்து கிடக்கின்றது. பணக்காரராக இருப்பினும் ஏழையாக இருப்பினும் அன்பு என்பது ஒருவருக்கொருவர் மிகுந்திருக்கவேண்டும். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற உணர்ச்சி எங்கும் பரவவேண்டும். ‘குடிஅரசி’ன் கருத்தும் இதுவே என நான் அறிந்து கொண்டேன். தேசோத்தாரணத்தில் கவனம் வைத்தல் அவசியமாகும். தேச சுதந்திரத்தினால் பாஷை, சமயம் முதலியவற்றிற்கு உத்தாரணம் பிறக்கும். சமயத்திலிருக்கும் கேட்டை ஒழிப்பது மிகவும் அவசியமாகும். இவையெல்லாம் ‘குடிஅரசி’ன் முதல் கொள்கைகளாயிலங்க வேண்டும். யான் இப்பத்திரிகாலயத்தைத் திறந்து வைப்பதால் ஸ்ரீமான் நாயக்கரவர் களுக்கு இதில் எவ்வளவு சிரத்தையுண்டோ அவ்வளவு எனக்கும் உண்டு. பொது ஜனங்களின் நன்மையைக்கோரி உழைக்கும் பத்திரிகையாகையால் எல்லோரும் ஆதரித்தல் அவசியம். இதுகாறும் கூறிய கருத்துகளில் மாறாது உண்மையான பத்திரிகையாக விளங்க வேண்டுமென எல்லாம் வல்ல இறைவனை வழுத்துகின்றேன்.
– ‘குடிஅரசு’ சொற்பொழிவு, 02.05.1925
குறிப்பு: குடிஅரசு செய்தித்தாள் அலுவலகத்தைத் திறந்து வைத்து திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் மடம் ஸ்ரீலஸ்ரீ. சிவஷண்முக மெய்ஞ்ஞான சிவாசாரிய சுவாமிகள் ஆற்றிய சொற்பொழிவு. (தொடக்க இதழின் முக்கியம் கருதி வெளியிடப்படுகிறது).