அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகமான ஸ்டாண்ஃபோர்டு (Stanford University) பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவரும், அப்பல்கலைக் கழகத்தின் மேனாள் மாணவியுமான கேசி மீன்ஸ் எம்.டி. அம்மையார் அவர்களும், ‘Truemed’ என்ற ஓர் அறக்கட்டளை போன்ற அமைப்பின் நிறுவனர்களில் ஒருவருமான கேலிமீன்ஸ் (Calley Means) என்பவரும் (இவரும் ஸ்டாண்ஃபோர்டு பல்கலைக் கழகத்தின் மருத்துவப் பட்டதாரி என்பதோடு ஹார்வேர்டு பிசினஸ் ஸ்கூலில் பட்டம் பயின்றவர்.) இருவரும் இணைந்து ஓர் அருமையான, புதுமையான கண்ணோட்டத்தில் மனிதர்களின் நலவாழ்வு எப்போதும் பாதிக்கப்படாமல் இருப்பது பற்றி, ஆழமான புதுமை நோக்கோடு Good Energy – The Surprising Connection Between Metabolism and Limitless Health என்ற ஒரு நூலை 2024இல் எழுதி வெளியிட்டுள்ளனர்.
‘Energy’ என்ற ஆக்க சக்திதான் நம்மைப் பெரிதும் அன்றாட வாழ்வில் இயங்க பயன்படுகிறது. அதுவன்றி நமது வாழ்வு கிடையாது – மிட்டோகாண்டிரியோ (Mitochondria) என்ற ஒரு வகையான கெமிக்கல் எனர்ஜி, ரசாயன முறையை, உடலில் ஏற்படுத்திவரும் சக்தியை நாம் எவ்வளவுக்கெவ்வளவுப் பெருக்கிக் கொள்ளுகிறோமோ அவ்வளவு நாம் சுறுசுறுப்புடனும், நோயற்ற நலவாழ்வுக்குரியவர்களாகவும் நம்மை நாமே ஆக்கிக் கொள்ள முடியும். (Optimum Level)
இந்த நூல் எப்படி ஒரு தனித்தன்மையான சீரிய சிந்தனையின் தொகுப்பாக உள்ளது என்றால், நோய்கள் வந்தபின் மருந்து, மாத்திரை அல்லது அறுவைச் சிகிச்சை மூலம் மனிதர்கள் நோய்களை விரட்ட Auto immunity என்று சொல்லத் தகுந்த நோய் எதிர்ப்பு சக்தியை – நமது உணவு முறை, தூக்கம், ஒழுங்கு முறையான வாழ்வு மூலம் பெற்று நோய்களின் தாக்குதலை வருமுன் காக்கும் முறையிலேயே வாழ்ந்து காட்டலாம் என்பதை இந்தத் தனித் தன்மையான நூல் வாசகர்களுக்கு நன்கு விளக்குகிறது.
தற்போதுள்ள மருத்துவ சிகிச்சை முறைகளை இந்நூலாசிரியர்கள் மறைமுகமாக சாடுகிறார்கள்!
‘நோய் நாடி நோய் முதல் நாடும்’ அருமையான அறிவியல் பூர்வ அணுகுமுறையே இந்நூல் முழுவதும் நிறைந்துள்ளது. தனது அறிவுச் சிறகை விரித்து சிந்தனை ஓட்டத்தில் நமக்கு ஒரு நல்ல தெளிவுத் தீர்வினை தருவதாக உள்ளது!
Regenerative Agriculture என்று சொல்லக்கூடிய, organic forms of producers முறைகளைத் தவிர்த்து இப்போது விவசாயத்தில் நவீன உரங்களையும், மற்றவைகளையும் கலந்து, அவற்றை உண்ட பிறகு நமது உடலில் நச்சுத் தன்மையை அவை ஏற்படுத்தி உடல் உறுப்புகளைத் தாக்கி நமது சக்தியை பறிப்பதோடல்லாமல், ‘உயிர்க் கொல்லி’யாகவும் திகழும் நிலை ஏற்படுவதை நன்கு விளக்குகிறார்கள் இரு நூலாசிரியர்களும்.
(Focus) எதை மய்யப்படுத்துகிறது – மிட்டோ காண்டிரியாவை முதன்மைப்படுத்தி ஊட்டச்சத்தோடு பலமுள்ள ஒரு வாழ்வாக அமைத்துக் கொண்டால் பல நோய்களிலிருந்து விடுதலை பெற்று நிரந்த நல வாழ்வு வாழ முடியும்.
அடிப்படை சக்தியையும் நமக்கு வரவழைத்துக் கொள்ள முடியும்.
நமது மருத்துவக் கல்வி முறையில் அதற்கான பாடத் திட்ட அமைப்பு மாற்றங்களும் புதியதோர் வாழ்க்கை நெறியை உருவாக்கும். பல தரப்பட்டவர்களும், மருத்துவக் கல்வியாளர்களும் – ஏன் ஆட்சியாளர்களும்கூட – படித்து இதனை மருத்துவக் கல்லூரிக் கல்வியில் இணைக்கலாமே!
அதிகமான மருந்துகளைத் தவிர்த்து, வருமுன்னர் காக்கும் இம்முறை வாழ்க்கையின் தேவையாகும். பொத்தாம் பொதுவில் மற்ற எல்லோரும் சொல்வதுபோல் இல்லாமல், புதிய அணுகுமுறையோடு மக்களுக்கு வெளிச்சம் தரும் ஒரு நல்ல புதிய கலங்கரை விளக்கம்.
புதிய பாதையைக் காட்டும் இந்நூலைப் படித்துப் பயன் பெறுவோம்.
(நிறைவு)
கி.வீரமணி