அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்க வேண்டும் என்று, அகமதாபாதின் ஹனுமான் கோவிலில் வேண்டுதல் வைக்கும் மக்கள், தற்போது, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர்.
குஜராத்தின் அகமதாபாதில் அமைந்துள்ளது சமத்காரி ஹனுமான் கோவில். இந்தக் கோவிலின் விசேஷம், ஹனுமானை மனமுருகி வேண்டிக் கொண்டால், உடனடியாக விசா கிடைத்து விடுமாம். குறிப்பாக அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்போர், இந்தக் கோவிலுக்கு வருவது சகஜம்.
சாதாரணமாக இந்தக் கோவிலிற்கு, தினமும், 1,000 பேர் வருகை தருவர். ‘விசா ஹனுமான்’ என்று அழைக்கப்படும் சமத்காரி ஹனுமானை தரிசிக்க தற்போது அதிகளவில் மக்கள் வருகின்றனர்; குறிப்பாக இளைஞர்கள் வருகை அதிகம்.
அமெரிக்க அதிபராக, கடந்த மாதம், 20ஆம் தேதி பதவியேற்றார் டொனால்டு டிரம்ப். உடனேயே, பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார், செயல்பட்டார்.
சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ளோரை வெளியேற்றுவது, வேலை பார்க்க வருவோருக்கான விசாவை குறைப்பது போன்றவை அதில் அடங்கும்.
அமெரிக்காவில் வேலை பார்ப்பதற்காக வழங்கப்படும் எச்1பி விசாவை அதிகம் பெறும் நாடுகளில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்நிலையில், டிரம்பின் அறிவிப்புகள், அமெரிக்க விசாவுக்காக காத்திருக்கும் மக்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் விசா கிடைக்க வேண்டும் என்று ‘விசா ஹனுமானி’டம் கோரிக்கை வைக்க ஆயிரக்கணக்கானோர் இந்தக் கோவிலுக்கு படை எடுத்து வருகின்றனர்.
தங்களுக்கு பிரச்சினை ஏற்படாத வகையில் முடிவுகள் எடுக்க டொனால்டு டிரம்புக்கு நல்ல புத்தி தர வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கின்றனர்.
இதுபோன்ற பல கோவில்கள் நாடு முழுவதும் உள்ளன. வெளிநாடுகளுக்குச் செல்ல நினைப்போர், தங்களுடைய பிரார்த்தனை நிறைவேறுவதற்காக அங்கும் படை எடுத்து வருகின்றனர்.
இப்படியெல்லாம் செய்திகள் வெளி வருவது எத்தகைய கேலிக் கூத்து – ஹனுமான் என்ன பாஸ்போர்ட் அதிகாரியா? அமெரிக்க அதிபரா?
ஹனுமான் சிலை அய்ம்பொன்னாக இருந்தாலோ, பித்தளையாக இருந்தாலோ அந்த சிலையையே வெளிநாடுகளுக்குக் கடத்திச் சென்று விற்று விடுவார்களே! இப்படி எத்தனை எத்தனையோ கடவுளர் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படுவதில்லையா?
சிவபுரம் நடராஜன் சிலைபற்றி எத்தனை ஆண்டுகளாக செய்திகள் உலா வந்தன! லண்டன் அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்தியக் கடவுளர் சிலைகள் கடத்தப்பட்டதுபற்றி அடிக்கடி செய்திகள் வந்த வண்ணமாகத் தானே உள்ளன!
மும்பையில் உள்ள செம்பூர் முருகன் கோயிலுக்கு ஒரு விசேஷம் என்ன தெரியுமா? ஆஸ்திரேலியாவுக்குச் செல்லுவோர் இந்தக் கோயிலுக்குச் செல்லுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனராம். கோயிலில் இதை விளம்பரமாகவே வைத்துள்ளனராம்.
பக்தி முற்றினால் இடுப்பிலிருந்து வேட்டி நழுவுவது கூடத் தெரியாதோ!
ஆடி மாதங்களில் அம்மன் கோயில்களுக்குப் பெண்கள் வேப்பிலை ஆடை கட்டிக் கொண்டு செல்கிறார்கள்; குறிப்பாக சென்னையையடுத்த பெரிய பாளையத்தம்மன் கோயிலில் இது விசேஷம்!
விஞ்ஞானம் வளர்ந்து என்ன பலன்? மூடத்தனத்தை விஞ்ஞானத் தேனில் குழைத்துச் சாப்பிடுகிறார்கள் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும் போலும்!
இந்த அநாகரிக அருவருப்பானவற்றை எடுத்துச் சொன்னால் மனம் புண்படுகிறதாம்.
தீராத நோய்க்கு அறுவைச் சிகிச்சை தேவை என்கிறபோது, கொஞ்சம் ரத்தம் சிந்தத்தானே செய்யும்!