பிரதமர் மோடி, யார் காலில் விழுகிறார் தெரியுமா?
ரவீந்திர நேகி.
டில்லி சாலையில் வீடு வீடாகச் சென்று எல்லோர் வீட்டிலும் காவிக் கொடி ஏற்றவேண்டும் என்று கூறி, காவிக் கொடியை விநியோகித்தவர்.
கடைகளில் காவிக் கொடி மற்றும் ஸ்டிக்கர்களை ஒட்டி, இனிமேல் ஹிந்துக்கள், ஹிந்துக்களின் கடைகளில் மட்டுமே பொருள்கள் வாங்கவேண்டும் என்று கூறியவர்தான் இந்த ரவீந்திர நேகி.
140 கோடி மக்கள் வாழும் ஒரு துணைக் கண்டத்தின் பிரதமர், இந்த சங்கியின் காலில் விழுகிறார்.
அடிமை தகர்ந்து சுதந்திரம் வந்ததாகப் பெருமையுடன் பேசுவதிலெல்லாம் குறைச்சல் இல்லை. ஆனால், ஒரு பிரதமரே காலில் விழும் காட்சியைக் கண்ட பிறகும், அடிமைத்தனம் இந்தியாவின் குருதியைவிட்டு விடை பெறவில்லை என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
மண்ணுக்கு விடுதலை கிடைத்தால் மட்டும் போதாது! மனித அறிவும் விடுதலை பெறவேண்டாமா?
அதைத்தானே விடிவெள்ளியாம் வெண்தாடி வேந்தர் தந்தை பெரியார் கேட்டார்.
‘‘மானமும், அறிவும் மனிதர்க்கழகு’’ என்று நான்கே சொற்களில், நான்கே எழுதினை உடைய ‘‘மனிதன்’’ என்பவனை அப்பட்டமாகப் படம் பிடித்துக் காட்டினார் – அறிவுலக ஆசானாம் அய்யா பெரியார்.
பெரிய பதவியில் அமர்ந்திருக்கலாம்; அதனாலேயே அந்த மனிதன் பெரிய மனிதன் என்ற தகுதி உடையவர் ஆகமாட்டார்.
காஞ்சி சங்கராச்சாரியார் என்ற ஆசாமி உயர்ந்த பீடத்தில் வீற்றிருக்க, அப்துல் கலாம்கள் தரையில் அமர்ந்திருந்தது எப்படி? அதேநேரத்தில் சுப்பிரமணிய சாமி, சங்கராச்சாரியார் பக்கத்தில் சரி சமமான ஆசனத்தில் அமர்ந்து அட்டகாசமாகச் சிரிக்கவி்ல்லையா?
‘‘அருந்தொண்டாற்றிய அந்தணர்கள்’’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை நாரதகான சபாவில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய காஞ்சி சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி, ‘‘கடவுளுக்குமேலே பிராமணன்!’’ என்று பேசியதுண்டே! பிரமதர் மோடிஜி இவற்றையெல்லாம் சிந்தித்துப் பார்க்கட்டும்!
– மயிலாடன்