சென்னை,பிப்.6- உலக புற்றுநோய் நாள் அனுசரிப்பின் ஒரு பகுதியாக அப்போலோ மருத்துவமனையும், இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் நிபுணர்களது சங்கம் , தமிழ்நாடு அறுவைசிகிச்சை புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மருத்துவ மற்றும் குழந்தை நல புற்றுநோயியல் மருத்துவ சங்கம் ஆகிய அமைப்புகளுடன் இணைந்து ‘யுனிஃபை டு நோட்டிஃபை’ என்ற தேசிய அளவிலான பரப்புரை திட்டத்தை தொடங்கி உள்ளது.
இது தொடர்பாக புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கர் சிறீனிவாசன், சுரேஷ், பிரசாத் ஈஸ்வரன் ஆகியோரும் சங்கங்களின் நிர்வாகி பாலசுந்தரம், அய்யப்பன், கலைச்செல்வி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அரியானா, கருநாடகா, திரிபுரா, மேற்கு வங்காளம், பஞ்சாப், மிசோரம், ஆந்திரா, கேரளா, குஜராத், தமிழ்நாடு, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம், அசாம், மணிப்பூர் மற்றும் ராஜஸ்தான் ஆகியவை உட்பட, 15 மாநிலங்கள், அறிவிக்கக்கூடிய நோயாக புற்றுநோயை ஏற்கெனவே அறிவித்திருக்கின்ற நிலையில், தேசிய அளவில் இதனை அமல்படுத்துவது இன்னும் அவசியமாக இருக்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் 14 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இது 2025ஆம் ஆண்டுக்குள் 15.7 லட்சமாக உயரும்.
அரசின் சுகாதாரத்துறை கண்டிப்பாக அறிவிக்கப்பட வேண்டிய நோயாக புற்றுநோயை அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவித்தால் நிகழ்நேர தரவு சேகரிப்பையும் மற்றும் துல்லியமான தகவலளிப்பையும் இது உறுதி செய்யும்;
இதன்மூலம் இந்நோயின் அளவு மற்றும் வீச்செல்லை குறித்து ஒரு தெளிவான அறிவு சாத்தியமாகும். புற்றுநோய் சிகிச்சையில் துல்லியம், திறன் மற்றும் அணுகுவசதியை மேம்படுத்த முடியும்.
இது உலகளாவிய புற்றுநோயியல் ஆராய்ச்சி மற்றும் பராமரிப்பில் இந்தியாவின் பங்கை வலுப்படுத்தும். நோய் வராமல் தடுப்பதற்கு சிறப்பான உத்திகளை உருவாக்கவும் ஆராய்ச்சிக்கான நிதியை ஒதுக்கீடு செய்யவும் இது நமக்கு உதவும்.
வனத்துறையில் உள்ள
72 காலி இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு உத்தரவு!
சென்னை,பிப்.6- தமிழ்நாடு வனத்துறையில் உள்ள 72 காலி இடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. வரைவாளர் மற்றும் இளநிலை வரைவுத் தொழில் அலுவலர் நிலையில் உள்ள 72 காலி இடங்களை நிரப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வனத்துறையில் உள்ள 34 வரைவாளர் மற்றும் 38 இளநிலை வரைவு தொழில் அலுவலர் பணியிடங்களை நிரப்ப அனுமதி அளித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் துறை சட்ட ஆலோசகர் பணி
பிப்.18-க்குள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,பிப்.6- தமிழ்நாடு காவல் துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறையின் 5 சரகங்களுக்கான சட்ட ஆலோசகா் பணியிடத்துக்கு தகுதி யுடையவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை குற்றப்பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை தலைமையிடம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு காவல்துறையின் குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறைக்காக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் பணி அமைப்புகள், குற்ற வழக்குகள் தொடா்பான வழக்குகள் மற்றும் மேல் முறையீடுகளில் வாதங்களுக்கான வரைவுகளைத் தயாா் செய்வதற்கு உதவியாக காஞ்சிபுரம், மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சேலம் ஆகிய சரகங்களுக்கு 5 சட்ட ஆலோசகா்கள் நியமிக்கப்படவுள்ளனா்.
இதில் சேரத் தகுதியுடைய நபா்கள் தமிழ்நாடு காவல்துறையின் இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பிப்.18-ஆம் தேதிக்கு முன் நேரடியாக சமா்ப்பிக்கலாம்.
அஞ்சல் மூலம் சமா்ப்பிப்பவா்கள் விண்ணப்ப உறையின் மீது சட்ட ஆலோசகா் பணிக்கான விண்ணப்பம் என்று தெளிவாகக் குறிப்பிடுவதுடன், கூடுதல் காவல் துறை இயக்குநா், குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத் துறை, 220, பாந்தியன் சாலை, எழும்பூா், சென்னை-600008 எனும் முகவரிக்கு அனுப்பலாம்.
நியமனம் செய்யப்படும் சட்ட ஆலோசகா்களுக்கு மாத ஊதியமாக ரூ.50,000 வழங்கப்படும். பிற படிகள் வழங்கப்படமாட்டாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.