மனிதர்களில் நீண்ட நாள் ஆயுள் வேண்டுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் எது?
நீண்ட ஆயுள் (Longevity) என்பதோடு எவ்வளவு நோய் நொடி இல்லா நலத்துடன் அவ்வாழ்வு அமைகிறது என்பது மிக முக்கியம்.
கிரேக்கத்தில் ஒரு கதை உண்டு – நீண்ட நாள் தன் காதலன்வாழ வேண்டும் (Immortality) என்பதற்கு வரம் கேட்டு வாங்கிய ஒரு ராஜகுமாரி நாம் சுட்டிக்காட்டிய மற்றொன்றான நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வரம் கேட்டு வாங்க மறந்ததின் விளைவாக, முதுமை – வயது ஏறத் தொடங்கியதால், முதுமையின் கொடுமையை ஏற்று அதற்கேற்ப தனது வாழ்வின் முறையை அமைத்தே தீர வேண்டிய நிலை வந்தபோது, இந்த கோரிக்கை எப்படி ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது என்பது கதை!
அடிக்கடி பொதுத் தொண்டு செய்கிறவர்கள் கூறுவதுண்டு.
‘‘ஒரு மனிதன் எவ்வளவு காலம் வாழ்கிறான் என்பதைவிட, அவன் வாழும் அல்லது வாழ்ந்த காலத்தில் அவனது சாதனை – நல்வினைகள் தொண்டறம் எப்படிப்பட்டன’’ என்பது தான் முக்கியம்.
அதுபோலவே, நோயற்ற வாழ்வும் முக்கியம். வயது கணக்குப்படி (Chronological age) வளர்ந்ததா என்று பார்ப்பதைவிட, உடல் நலம் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும்படி உகந்ததாக, ஊக்கத்துடன் – சோர்வு, மன அழுத்தம் இன்றி உற்சாகப் ெபருக்கத்தோடுவாழ்ந்திட ஏற்றதாக அமைந்துள்ளதா என்பதோ மிக மிக முக்கியமானதாகும்.
1) Chronological life span வயது கணக்குப்படி நீண்டகாலம்.
2) Health Span
இந்த Health Span என்பது வேறு ஒன்றும் அல்ல; நோயற்ற வாழ்க்கையா? உடற்கூறுகளின் ஒத்துழைப்பின்றி செயற்பட முடியாத (Disablility) உடல் உறுப்புகளின் ஒருங்கிணைந்த ஒத்துழையாமை இயக்கமா? என்று பார்த்தல் என்பது அவசியமானது.
பலவித நோய்களும் நம்மைத் தாக்க விடாது நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ளுதல் வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி (Immunity From Diseases) – நாம் உடல் நலம் பேண நம் உடலில் உள்ள பல வெள்ளை அணுக்கள்போன்று பல போர் வீரர்கள் நம்மைக் காப்பாற்ற ஆயத்தமாக உள்ளனர்.
அவர்களைத் தாண்டித்தான் நோய் நம்மைத் தாக்கி அண்ட முடியும்.
அதனால் உடல் உறுப்புகளில் செல்கள் (Cells) என்பதுபோன்ற பாதுகாப்புப்படைபோல பல உறுப்புகளில் உள்ளவைகளை நாம் சரிவர வைத்துக் கொண்டால் இந்த Health Span முறையாக நம்மைக் காக்கும்.
அதற்கு ஒரு முக்கிய கவனஞ் செலுத்த வேண்டிய பகுதி நம் உடற்கூறில் ஓர் அமைப்பு ரீதியான Metabolism care என்பதை Metabolic Health என்றும்கூட அழைக்கலாம்.
ஒரு மருத்துவரிடம் வந்த நடு வயதுக்காரர் ஒருவர் கூறினாராம்; ‘‘நான் நீண்ட காலம் வாழ விரும்பவில்லை டாக்டர்; காரணம் எனது பெற்றோர் முதுமையில் படும் அவதிகள் – நினைவு இழத்தல் போன்ற பல்வகை நோய் அல்லது வாய்ப்புக் கேடுகளுக்கு உள்ளாகி, விரக்தியுடன் அவர்கள் வாழுவது, எங்களது அன்றாட வாழ்க்கையின் வேக வீச்சுக்கிடையே நாங்களும் அவர்களிடத்தில் போதிய கவனஞ் செலுத்த இயலாத அனுபவம் காரணமாகவே இப்படி சொல்லித் தீர ேவண்டிய வகையில் உள்ளேன்’’ என்றாராம்!
அப்படி மனிதர்கள் யாரும் சகிப்பும், விரக்தியும், வேதனையும் அடைய வேண்டாம்!
உங்களது முதுமைக் காலத்தை முதுமையாக எண்ணாமலேயே, சுறுசுறுப்புடன் செயலாற்றினால் முதுமை எண்ணத் தாக்குதல் அறவே இராது.
உடலும்கூட பணி செய்தல் மூலம் இளமையாக இருக்கும் மனப்பாங்கினைத் தானே தரும். அனுபவமுள்ள நண்பர்களிடம் கலந்துரையாடுதல் இளமையில்விட முதுமையில் நல்ல பாதுகாப்பும், பலனும் தரும்.
தனிமை முதுமையினை மேலும் பெருக்கி, நம்மை மனோ தத்துவ ரீதியில் பலவீனமாக்கும். இவைகளிலிருந்துத் தப்பிக்க Metabolic Health என்ற உடல் உறுப்புகளைக் காக்க நல்லவற்றைப் பற்றி, உடற்பயிற்சி, உணவுப் பழக்கம் போதிய தூக்கம், இவற்றை ஆற்றொழுக்களாக கடைப்பிடித்தலே தக்கதாகும்.
(வளரும்)
கி.வீரமணி