ஈரோடு, பிப்.6 ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியில் நேற்று நடந்த இடைத்தேர்தலில் 6 மணி நிலவரப்படி 72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவைத் தொடர்ந்து, இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலை அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்த நிலையில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி உட்பட மொத்தம் 46 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.இந்நிலையில், நேற்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. இத்தேர்தலில் 2 லட்சத்து 27 ஆயிரத்து 546 வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக, 53 இடங்களில் 237 வாக்குச்சாவடி மய்யங்கள் அமைக்கப்பட்டன. இவற்றுள் 9 வாக்குச்சாவடி மய்யங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது.
72 சதவீத வாக்குப் பதிவு
மாலை 6 மணிக்கு வாக்குப் பதிவு நிறைவடைந்த நிலையில், 72 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ‘சீல்’ வைக்கப்பட்டு, வாக்கு எண்ணும் மய்யமான, சித்தோடு அரசு பொறியியல் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டன. வரும் 8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.
குரூப் 1, குரூப் 2 , 2 ஏ, குரூப்-4
பாடத் திட்டங்களில் மாற்றம் இல்லை
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளக்கம்
சென்னை, பிப். 6 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டி.என்.பி.எஸ்.சி.), குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித்தேர்வுகள் வாயிலாக அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. இதற்கான, பாடத்திட்டம், டி.என்.பி.எஸ்.சி.யின் அதிகாரப்பூர்வ www.tnpsc.gov.in என்ற இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன.
போட்டித் தேர்வு
அந்த வகையில், குரூப் 1, குரூப் 2 மற்றும் 2ஏ, குரூப்-4 போட்டித் தேர்வுகளான புதிய பாடத் திட்டங்கள் கடந்த ஆண்டு டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், போட்டித்தேர்வுகளின் பாடத்திட்டங்கள் மாற்றப்பட இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலானது. ஆனால், இந்த தகவலை டி.என்.பி.எஸ்.சி. மறுத்துள்ளது.
மாற்றம் இல்லை
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டி.என்.பி.எஸ்.சி., ‘2025-ஆம் ஆண்டு நடைபெற உள்ள குரூப்-1, குரூப்-2 மற்றும் 2ஏ, குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையிலேயே நடைபெறும். பாடத்திட்டம் மாற்றப்படும் என சமூக வலைதளங்களில் பரவும் செய்தியை தேர்வர்கள் நம்ப வேண்டாம்’ என தெரிவித்துள்ளது.
பயோ டெக்னாலஜி படிப்புக்கான
நுழைவுத் தேர்வு ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறுகிறது
மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
சென்னை, பிப்.6 முதுநிலை பயோ டெக்னாலாஜி படிப்புகளுக்கான கேட்-பி நுழைவுத் தேர்வு ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெற உள்ளதாக என்டிஏ தெரிவித்துள்ளது.
நுழைவுத் தேர்வு
நாடு முழுவதுமுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வுகள் ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி தேர்வு கணினி வழியில் ஏப்ரல் 20-ஆம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விருப்பமுள்ளவர்கள் https://dbt2025.ntaonline.in/ என்ற இணையதள வழியாக மார்ச் 3-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300 எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.650 செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பங்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் மார்ச் 5, 6-ஆம் தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும், தேர்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை /www.nta.ac.in/ என்ற வலைத்தளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.