நண்பர்களும், நல்லெண்ணம் விழைவோரும், பிறந்த நாள் விழாக்களில் நீண்ட நாள் வாழ வேண்டும் என்று பிறந்த நாள் காணுவோரை வாழ்த்துவதை வெறும் சம்பிரதாயமாக்காமல், சரியான விழைவாகவே, நடைமுறையில் செயல் மலர்களாக அவற்றை மலர வைக்க வேண்டுமானால், வாழ்க்கை நெறிமுறைகள் பலவற்றைச் சரியாக கடைப்பிடித்தொழுக வேண்டும். வாழ்த்தப்படுவோர் வாழ்க்கையில் அத்தகைய மருத்துவ அறிவுரைகள் செயல்முறைகளாக மாற்றித் தீர வேண்டும்.
நோய் வந்த பிறகு சிகிச்சை அளித்து அதிலிருந்து வெளியே வந்து, உடல் நலம் பேணுவதன் மூலம் ஆயுள் வளருவது என்பதைவிட, நோய் வருமுன்னே, கவனத்துடன் அவற்றைத் தடுத்து விடும் வகையில் – நோய்க்கிருமிகளை அழித்து – விரட்டி அடித்து, விடியல் பெற்ற விவேகிகளாய் நாம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் மிக மிக முக்கியமானதாகும்.
உடலில் நோய் எதிர்ப்புத் தடுப்பு ஆற்றல் (Physical Immunity) என்பதை நாளும் உணவு, தூக்கம், ஓய்வு, உடற்பயிற்சி, கட்டுப்பாடான வாழ்க்கை முறை, விரும்பத்தக்க பழக்க வழக்கங்கள், (புகை பிடித்தல் தவிர்த்தல் ஒரு சிறு உதாரணம்) போன்றவற்றை இராணுவக் கட்டுப்பாட்டுடன் கடைப்பிடித்து ஒழுக வேண்டும். நல்ல உடல்பலம் நலம் கிட்டும்.
உடல் நல ஆலோசகர்கள், மருத்துவப் பெரு மக்கள் நோய் வந்த பின் அந்நோய்க்கு உரிய மருந்து கொடுத்து அவற்றை விரட்டியடிப்பதைவிட, வருமுன்னரே நோயைத் தடுத்தாட் கொண்டு, நோய்க் கிருமிகள் ஓடி, ஒளிந்து, இறுதியில் ஒழிந்தே விடும் நிலையை உருவாக்கும் ஒரு புத்தம் புதிய அணுகுமுறையே இன்றைய கால கட்டத்தில் மிக மிகத் தேவைக்குரியதாகும்.
அறுவை சிகிச்சைகள் அல்லது மருந்து மூலம் குணப்படுத்தும் சீரிய முறை பற்றி சில செய்திகள்:
நம் உடலில் நோய்த் தாக்குவதற்கு மூல காரணம் என்ன?
நாளும் வயது ஏற ஏற உடலுறுப்புகளில் நோய் எதிர்ப்புச் சக்தி அருகி கிருமிகளுக்குச் சிவப்புக் கம்பளம் விரித்து வரவேற்கும் நிலை.
அதிலும் தொற்று பற்றிக் கூறிட வேண்டியதே யில்லை. நோய் எதிர்ப்புச் சக்தி குன்றியவர்களைக் கெட்டியாகவே பிடித்துக் கொள்ளும்.
அதனால்தான் ‘நலம்’, ‘நலமாய் இருக்கிறோம்’ என்ற பதில் கூறுவதற்கு அடிப்படையானவை – Physical Health (உடல் நலம் – உறுப்பு நலம்) மற்றொன்று Mental Health (மனநலம்). கவலை, மன அழுத்தம், துயரம், துன்பம், பயம், தோல்வியால் துவண்டு விடுதல் முதலிய நிலையை எதிர்நீச்சல் மூலம் சந்தித்து வெற்றிக்கரை ஏறும் நிலைதான் அது.
ஆனால், அதைவிட மிக முக்கியம் நமது Metabolic Health என்ற நம் உடலில் உள்ள ‘செல்கள்’, பல உடல் உறுப்புகளின் தனித்தன்மைகள், பலங்கள், அதன் ‘‘கெமிஸ்ட்ரி’’ மூலம் உறுப்புகளை வலிமையாகவும், செம்மையாகவும் வைத்துக் கொள்ளும் நிலை. இதன்படி நமது உடல் எந்த அளவுக்குச் சரியாக, நலமுடன் இருக்கிறது என்ற சரியான பார்வை (Insight)க்கு உதவிடும்.
மேற்காட்டியவற்றில் மற்ற இரண்டைவிட, இப்போது குறிப்பிடும் மூன்றாவதான Metabolic Health என்பதே முக்கியமானதும், அடிப்படையானதுமாகும். இதில்தான் நாமும், அரசுகளும், உடல் நலம் பற்றிப் பேசுவோரும் அதிகமான பொறுப்புணர்ச்சியுடன் கவனம் செலுத்திடல் மிக மிக அவசியமாகும்.
Metabolism – நமது உடலின் உறுப்புகள், அவற்றை இயக்கும் செல்கள், அவற்றின் நலம் பற்றி அறிதலும், பரப்புரை செய்தலும் மிக மிக இன்றியமையாத் தேவையாகும்.
(வளரும்)