சென்னை, பிப். 4-–ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தனித்தனியாக கருத்துக் கேட்க வேண்டும் என்று திமுக வலியுறுத்தியுள்ளது.
கடிதம்
ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மாநிலங்களவை திமுக உறுப்பினர் பி.வில்சன் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:
அரசியல் கட்சிகளிடம் கருத்து
ஒன்றிய அரசின் ஒரே நாடு, ஒரே தேர்தல் மூலம், ஜனநாயகம், கூட்டாட்சி அமைப்பு ஆகியவற்றில் பாதிப்பை ஏற்படுத்தும்.
எனவே, ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக அனைத்து தரப்பினரிடமும் விவாதம் நடத்தவேண்டும் என்றும் பி.வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
வாய்ப்பு
அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தங்கள் கருத்துகளை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அனைத்து அரசியல் கட்சிகளின் கருத்துகளை தனித்தனியாக கேட்க வேண்டும். ஒரே நாடு, ஒரே தேர்தலால், கூட்டாட்சி கொள்கைகள் நிலை நிறுத்தப்படுவதையும், மாநிலங்கள் எதிர்கொள்ள உள்ள சிக்கல்களுக்கு தீர்வு காணுவது குறித்து மாநில கட்சிகளிடம் ஒன்றிய அரசு கலந்து ஆலோசிக்க வேண்டும்.
ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்துவது குறித்த குழுவின் பணி விதிமுறைகள், விவாதங்கள் மற்றும் பரிந்துரைகளை பொது வெளியில் தெரியப்படுத்த வேண்டும்.
ஒன்றிய அரசு முன் மொழிந்த திருத்தங்களின் செயல் பாட்டு சாத்தியக் கூறுகள் மற்றும் தேர்தல் மேலாண்மையில் அவற்றின் தாக்கங்கள் குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களின் கருத்துக்களை அறிய வேண்டும்.
விவாதம்
இதேபோன்று, ஒன்றிய நிதித்துறைச் செயலாளர் மற்றும் தேர்தல் நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர்களின் அனுபவங்களைப் பெறவேண்டும்.
மேலும், உச்சநீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் ஓய்வுபெற்ற நீதிபதிகள், அனைத்து மாநிலங்களின் காவல்துறை இயக்குநர்கள், மூத்த வழக்குரைஞர்கள் மற்றும் வழக்குரைஞர் சங்கங்கள், அரசமைப்பு நிபுணர்கள், தேர்தல் சட்ட நிபுணர்கள் உள்ளிட்ட 12 தரப்பினரிடம் ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பான நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.