‘அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்?’ என்று கேட்டார் வள்ளுவர்.
‘அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!’ என்று கருணை பொங்க மொழிந்தார் வள்ளலார் என்ற சமூகப் புரட்சித் துறவி.
‘அன்பும் அறிவும் தவிர எனக்கு வேறுபற்றில்லை’ என்றார் மகத்தான மானுடநேயர், தந்தை பெரியார்.
– இவற்றை வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக எண்ணாமல், நடைமுறை வாழ்வில் கண்டறிந்து, மகிழ்ந்த வாய்ப்புகள் இன்றைய நினைவு நாயகரான அறிஞர் அண்ணாவிடம் அவரை ஆளாக்கிய (ஒப்பற்ற தளபதி முதல் பேரறிஞர் வரை) தந்தை பெரியார் இருவரிடையே பல்லாண்டுகள் வரலாற்றை உள்ளடக்கிய அன்பு – அது ஊற்றெடுத்து, பெரு வெள்ளம் போல் பாசமாக வற்றாது மாறி, ஓடுகிறது. அவ்விருவரின் வாழ்வில் ஏற்பட்ட போற்றத்தக்க சில மறக்க முடியாத நிகழ்வுகளை நினைவு கூருகிறோம்.
18 ஆண்டுகள் பிரிந்த பிறகும் இணைந்தனர் இருவரும் என்று பிறர் சொல்லவே இடந்தரவில்லை தந்தையின் தனயர், தலைமகன் அறிஞர் அண்ணா!
‘எப்போதும் நாங்கள் பிரிந்ததே இல்லை. எனதுள்ளத்தில் அவர் என்றும், இருப்பார்; அவர் உள்ளத்தில் நான் இருப்பேன்’ எனவே பிரிந்தவர் சேர்ந்தனர், இணைந்தனர் என்று தயவு செய்து கூறாதீர்கள். அப்படி கூறியவர்கள் எங்கள் இருவரையுமே புரிந்து கொள்ளத் தவறியவர்கள்’ என்று தான் நான் கூறுவேன் என்றார்!
இந்தப்‘பிரகடனம்’ உண்மையானது என்பதை நான் நேரில் கண்டும், அனுபவித்தும் உள்ள ஒருவன் என்பதால் அவற்றில் சிலவற்றை மட்டும் நான் இப்போது சுட்டிக்காட்டுவது – அண்ணாவின் 56ஆவது நினைவு நாளில் பொருத்தமாக இருக்கும்.
அண்ணாவை நோய் தாக்கிய நிலையில், சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்படுமுன் சென்னை பொது மருத்துவமனையில் (G.H.) அண்ணாவை அய்யாவும், அம்மா மணியம்மையாரும் சென்று பார்க்கிறார்கள். (உடன் புலவர் இமயவரம்பனும் நானும்).
கவலை பொங்க விசாரிக்கிறார் அண்ணாவிடம்; கவனமாக உடல் நலம் – வெளிநாட்டு அறுவைச் சிகிச்சைபற்றி விசாரித்தார். அருகில் இருந்து ‘‘அன்புக் கண்ணீர்த் துளிகள்’’ வருவதை அடக்குகிறார் அண்ணா! திடீரென்று மடியில் இருந்து ஒரு கட்டு ரூபாய் நோட்டுகளை எடுத்து அண்ணாவிடம் மருத்துவச் செலவுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று பாசம் பொங்க (உணர்ச்சித் ததும்ப மற்றவர்களுக்கு) எடுத்து அண்ணா கையில் தருகிறார் தந்தை பெரியார். அண்ணாவோ நெகிழ்ந்து போன நிலையில், ‘அய்யா ரொம்ப நன்றி, இப்போது தேவைப்படாது – காரணம் இந்த செலவை அரசோ அல்லது இயக்கமோ ஏற்கும் நிலை உள்ளது.
தங்களது பாசம் மிக்க வாழ்த்து – நல் விருப்பமே போதும், தேவைப்படும்போது நிச்சயம் வாங்கிக் கொள்வேன்’ என்றார்.
அத்தொகை அநேகமாக ரூ.50 ஆயிரம் இருக்கக் கூடும் என்பது எங்களைப் போன்றவர்களின் யூகம் – தெரியாது.
அப்போது அங்கு வந்தார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். அவரும் அண்ணாவிடம் நலம் விசாரித்து பாசமும், நேசமும் பொங்க விழிகளில் வழிந்த கண்ணீரைத் துடைத்ததை பிறர் அறியாத வண்ணமே இருந்த காட்சி எங்களுக்கு நெக்குருகுவதாக இருந்தது!
அண்ணா பற்றியும் – உடல் தேறி மீண்டும் ஆட்சி செலுத்த அவர் வர வேண்டும் என்ற விழைவுகளின் சிந்தனை அலைகளில் மூழ்கியிருப்பார் என்று எண்ணத்தக்க வகையில், அய்யா தனது திடல் இல்லத்தில் அமைதியே வடிவாய் ஏதோ சிந்தனையில் மூழ்கிய வண்ணமே இருந்தார் அன்று முழுவதும்!
அன்று சுமார் பகல் 2.30 மணி இருக்கும். என்னை அழைத்தார் தந்தை பெரியார். விடுதலை அலுவலகத்தில் இருந்து சில அடி தூரம்தானே அய்யாவின் அமர்வு கட்டில், உடனே வந்தேன்.
‘ஏம்பா, அண்ணா எப்போது புறப்படுகிறார் அமெரிக்காவுக்கு? ஒரு மணிக்கா?’ என்று கேட்டார். ஆமாம் அய்யா, இந்நேரம் விமான நிலையத்திற்குள் சென்று விமானத்தில் அமர்ந்து புறப்பட ஆயத்தமாக இருக்கும் அய்யா என்றேன்.
அய்யாவின் பாசமும், கவலையும் மிஞ்சிடும் அந்நிலையைப் புரிந்து சொன்னேன்.
‘‘ஏன் நாம் போய் வழி அனுப்பி வரலாம் அண்ணாவைப் பார்த்து’’ என்றார்! தயக்கத்துடன், நாம் இங்கிருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் செல்லவே அரை மணி முதல் முக்கால் மணி நேரம் ஆகுமே என்றோம் நானும், புலவரும்.
‘அய்யா உடனே சொன்னார். சரி பறப்பட்டுச் செல்வோம். பார்க்க வாய்ப்பிருந்தால் பார்ப்போம்; இல்லை அவர் செல்லும் விமானத்தைப் பார்த்து திரும்புவோமே’
இந்த பதில் எங்களை இன்ப அதிர்ச்சியில் தள்ளியது.
‘என்னே பாசத்தின் ஊற்று!
‘தந்தை மகனுக்காற்றும் நன்றிக்குப் புது விளக்கமோ இது!
உடனே வேனில் ஏறி உட்கார்ந்தார் அய்யா – அண்ணா சாலையில் அதிக வேகமாக ஓட்டினார் டிரைவர் சீனிவாசன்!
சாலை இரு மருங்கிலும் மக்கள் ‘‘பெரியார் போறார்; பெரியார் போறார்’’ என்று அன்பு பீறிட்டுக் கிளம்பும் வண்ணம் வணக்கம் தெரிவித்தனர். வானத்தையே குறி வைத்து எங்கள் கண்கள் வட்டமிடுகின்றன.
அண்ணாவினை அழைத்துச் செல்லும் கார் இன்னும் வரவில்லை என்ற செய்தி தெரிகிறது! வேன் விமான வேகத்தில் ஓடுகிறது!
அய்யாவை அங்கு அமைச்சர்களோ வி.அய்.பி.களோ எதிர் பார்க்கவில்லை – எல்லோரும் வந்து வணக்கம் செய்கிறார்கள்.
இன்னும் அண்ணாவின் கார் வரவில்லை. அய்யாவை சக்கர நாற்காலியில் அமர வைக்கிறார்கள். விமானம் நிற்கும் தளத்திற்கு முன்னே மிக முக்கிய இடத்தில் காத்திருக்கிறார்.
சற்று நேரத்தில் அண்ணா அமர்ந்திருந்த கார் நுழைகிறது மெதுவாக வணக்கம் செலுத்தி வருகிறார் அண்ணா – அவரே எதிர்பார்க்கவில்லை– அதிர்ச்சி.
அய்யா காத்திருந்ததை கண்டு முன் சீட்டிலிருந்து தன்னை அறியாமலேயே இறங்கிட முயன்றார் அண்ணா.
‘‘இறங்காதீர்கள் விமானம் ஏறிச் செல்லுங்கள்’’ என்று கை அசைவு காட்டி சொல்லி வழியனுப்பினார் அய்யா.
இந்தக் காட்சியை பாசத்தின் ஊற்றல்லாமல் வேறு என்னவென்று எழுத….
வார்த்தைகள் எமக்குக் கிடைக்கவில்லையே!