சுதந்திர இந்தியாவில் இதுவரை பெரும்பாலும் முக்கிய துறைகள் உயர் ஜாதியினரின் கைகளில்தான் இருந்து வருகின்றன.
இந்த நிதி நிலை அறிக்கை தயாரிப்பில், 90 அதிகாரிகள் இணைந்து தயாரித்துள்ளனர், அதில் 3 ஓபிசி அதிகாரிகள் மட்டுமே இருந்துள்ளனர், அவர்களும் ஆலோசகர்களுக்கான உதவியாளர்கள் என்ற நிலை மட்டுமே – அதாவது உயர்ஜாதியினர் கூறுவதை செய்யும் வேலை என்று கூட கூறலாம் ஆனால் தலித் மற்றும் பழங்குடியினர் யாரும் இல்லை.
நிதி நிலை அறிக்கையில் தாழ்த்தப்பட்ட, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினருக்கான நிதி ஒதுக்கீடுகளில் கடுமையான வெட்டுக்கள் நிகழ்ந்துள்ளன. எடுத்துக்காட்டு, பட்டியல் சமூகத் தினரின் மேம்பாட்டுத் திட்டத்துக்கு 2024-2025 பட்ஜெட்டில் ரூ.2,140 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.800 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கான இளம் சாதனையாளருக்கான திட்டத்துக்கு ரூ.1,836 கோடி ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ரூ.1,381 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
எஸ்.சி.க்களுக்கான மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்காக 2024-2025 நிதி ஆண்டில் ரூ.6,360 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ.5,500 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது. இதேபோல், எஸ்.டி.க்களின் மேம்பாட்டுக்கான திட்டத்துக்கு ரூ.4,300 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், ரூ.3,630 கோடி மட்டுமே செலவிடப்பட்டுள்ளது.
நிதிப் பற்றாக்குறை 4.6 சதவீதம் இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது 4.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதில், மகிழ்ச்சியடைய எதுவும் இல்லை. இது பொருளாதாரத்திற்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. பொருளாதாரம் மிகவும் மோசமாகி வருவதற்கு எடுத்துக்காட்டு ஆகும்.
முந்தைய நிதி நிலை அறிக்கை உரைகளில் ஆரவாரத்துடன் அறிவிக்கப்பட்ட பல திட்டங்களில் அரசாங்கம் நம்பிக்கையை இழந்துவிட்டது. அரசாங்கத்தின் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது.
எடுத்துக்காட்டு, போஷன், ஜல் ஜீவன் மிஷன், பயிர் காப்பீட்டுத் திட்டம், யூரியா மானியம் மற்றும் பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா ஆகிய திட்டங்களின் செயல் திறன் குறைந்துவிட்டது.
ரயில்வே துறை பெரும்பாலான மக்களுக்கு சேவை செய்கிறது. ஆனால், ரயில்வேக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது.
2024-2025 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ரூ. 2,06,961 கோடியாக அறிவிக்கப்பட்டு, பின் அது ரூ. 2,12,786 கோடியாக திருத்தப்பட்டது. ஆனால், 2025-2026 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் ரூ. 2,13,552 கோடியாக மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது. உரிய அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இரயில்வேக்கு என்று தனி பட்ஜெட் என்பது நீக்கப்பட்டு விட்டது.
பிஜேபி. ஆட்சியில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதாக உறுதியளிக்கப் பட்ட, மிகவும் பாராட்டப்பட்ட – உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டங்கள் புதிய வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம், திறன் இந்தியா திட்டம் ஆகியவற்றில் நாட்டின் இளைஞர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இந்த திட்டங்களுக்கு 2024-2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் ரூ. 26,018 கோடியாக இருந்தது. ஆனால், ரூ. 15,286 கோடி மட்டுமே உண்மையாக செலவு செய்யப்பட்டுள்ளது.
நிதியமைச்சரோ, பிரதமரோ தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையைப் பொருட்படுத்தவில்லை.
ஆண்டு ஒன்றுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று மோடிஜி அறிவித்தாரே – அதை பொது மக்கள் மறந்தே விட்டனர்.
பொதுத்துறைகள் படுவேகமாக தனியார்மயம் ஆகின்றன. தனியார்த்துறைகளிலோ இடஒதுக்கீடு கிடையாது.
சமூகநீதி என்பதே சிறுகச் சிறுக சீரழிந்து வருகிறது. இந்த லட்சணத்தில் தன்னை ஒரு பிற்படுத்தப்பட்டவர் என்று தேவைப்படும் நேரங்களில் மட்டும் சொல்லிக் கொள்வார் பிரதமர். இவற்றையெல்லாம் மக்கள் தொகையில் பெரும்பான்மையினரான தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் சிந்தித்து விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே மாற்றத்திற்கான வாய்ப்பு ஏற்படும் இல்லையெனில் ஏமாற்றம்தான் மிச்சம்!