அறிஞர் அண்ணா அவர்களின் 56ஆவது நினைவு நாளையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு.
தந்தை பெரியார் குறித்து பேரறிஞர் அண்ணா கூறியது:
“எது நேரிடினும் மனத்திற்பட்டதை எடுத்துச் சொல்வேன் என்ற உரிமைப் போர் பெரியாருடைய வாழ்வு முழுவதும். அதிலே அவர் கண்ட வெற்றி மிகப்பெரியது. அந்த வெற்றியின் விளைவு அவருக்கு மட்டும் கிடைத்திட வில்லை; இன்று அனைவரும் பெற்றுள்ளனர்.”
தந்தை பெரியாரின் புகழொளியையும் – அறிவொளி யையும் தந்து நம்மை ஆளாக்கிய தமிழ்த்தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணாவுக்குப் புகழ்வணக்கம்! நம்முடைய நோக்கம் பெரிது! அதற்கான பயணமும் பெரிது! வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்! இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
ஒன்றிய அரசின் பட்ஜெட்டைக் கண்டித்து
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
சென்னை, பிப். 3- ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாளை (பிப்.4) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம்
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வாரி வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் மீதும், விவசாயிகள் மீதும் வரிச்சுமைகளை ஒன்றிய அரசு ஏற்றியுள்ளது. அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழ்நாடு, கேரளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
அரசமைப்பு சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராக, எதேச்சதிகாரமாக செயல்பட்டு வரும் ஒன்றிய அரசை கண்டித்து, அதன் நாசகர பட்ஜெட்டை எதிர்த்தும், தமிழ்நாடு முழுவதும் மாநகரம், நகரம், பேரூர் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை (பிப்.4) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில் கட்சி அணிகளும், அனைத்து பகுதி மக்களும், வணிகர்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.