சென்னை, பிப். 3- வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு விற்பனை பத்திரங்களை சிறப்பு முகாம்களில் ஒப்படைத்து பட்டா பெறலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில், 1961ஆம் ஆண்டில் இருந்து மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளை உருவாக்கி ஒதுக்கீடு செய்து வருகிறது. இப்படி ஒதுக்கீடு பெற்ற ஒதுக்கீடுதாரர்கள் முழு தொகையையும் செலுத்திய பிறகு நடைமுறையில் உள்ள வாரிய விதிகளின்படி விற்பனை பத்திரம் வழங்கி வருகிறது.
இவ்வாறு விற்பனை பத்திரம் பெற்ற ஒதுக்கீடுதாரர்களுக்கு முதற்கட்டமாக சென்னை மாவட்டத்தில் வருவாய் துறையிடம் இருந்து பட்டா பெறுவதற்கு ஏதுவாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள் பட்டா பெற வருவாய் துறையுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.
எனவே வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடுதாரர்கள் இந்த முன் முயற்சியை பயன்படுத்தி தாங்கள் வீட்டு வசதி வாரியத்திடம் இருந்து வாங்கிய சொத்திற்கு பட்டா பெறுவதற்கு ஏதுவாக விற்பனை பத்திரங்கள் மற்றும் இதர ஆவணங்களை ஒப்படைத்து பட்டா பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.