ராமநாதபுரம்,பிப்.3- ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதற்கு மக்கள் பதிலடி தர வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பேரூராட்சி மன்ற தலைவர் டி.ராஜா மகன் தில்லை ராஜ்குமார் –- சக்திபிரியா திருமண விழா குஞ்சார்வலசை ராஜா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நேற்று (2.2.2025) நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்திப் பேசினார்.
உரிமைத் தொகை
அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டு பெண்களையும், அவர்களது உரிமைகளையும் பாதுகாப்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிக கவனம் செலுத்தி வருகிறார். முதலமைச்சராக பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக மகளிர் இலவச பயண திட்டத்திற்கு கையெழுத்திட்டார். இந்த திட்டத்தால் இதுவரை 600 கோடி முறை பயணித்து பெண்கள் பயனடைந்துள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் 1 கோடியே 14 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். இன்னும் 3 மாதங்களில் தகுதியான அனைத்து மகளிருக்கும் உரிமைத்தொகை வழங்கப்படும்.
புறக்கணிப்பு
நீட் தேர்வை ஒழிப்பதே எங்களது இலக்கு. சட்டப் பேரவையில் வாக்கிங் செல்லும் ஒரே ஆளுநர் தமிழக ஆளுநர்தான். ஒன்றிய பாஜ அரசு பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்துள்ளது. இதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஓட்டுச் சீட்டு மூலம் பதிலடி தரவேண்டும்.