பிரதமர் பாதுகாப்புக்கு ரூ.489 கோடி
பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்கும் எஸ்.பி.ஜி. படைக்கு பட்ஜெட்டில் ரூ.489 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரதமரின் பாதுகாப்பிற்கு நாளொன்றுக்கு ரூ.1.34 கோடி செலவிடப்பட உள்ளது. இன்னும் எளிமையாகச் சொன்னால், 1 மணி நேரத்திற்கு ரூ.5.58 லட்சமும், 1 நிமிடத்திற்கு ரூ.9,303 ஒதுக்கப்பட்டுள்ளது. மேனாள் பிரதமர் இந்திரா காந்தி படுகொலைக்குப் பிறகு இந்த சிறப்பு எஸ்.பி.ஜி. படை உருவாக்கப்பட்டுள்ளது.
எதற்கெல்லாம் வரி?
நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், உலகில் விதிக்கப்பட்ட வினோத வரிகள் கவனம் பெறுகின்றன. ஜன்னல்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 1696இல் இங்கிலாந்து மன்னர் வில்லியம் வரி விதித்தார். 1535இல் இங்கிலாந்திலும், 1698இல் ரஷ்யாவிலும் தாடிக்கு வரி விதிக்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட சமூகப் பெண்கள் மார்பகங்களை மூடுவதற்கு திருவிதாங்கூர் மன்னர் வரி விதித்தார். 9ஆம் நூற்றாண்டில் பேச்சிலராக இருப்பதற்கு ரோமில் வரி விதிக்கப்பட்டது.
பட்ஜெட்டை பங்கமாக கலாய்த்த கனிமொழி
ஒன்றிய பட்ஜெட்டை கனிமொழி எம்பி கலாய்த்துள்ளார். தான் நாடாளுமன்றம் சென்ற இத்தனை ஆண்டுகளில், பீகார் மாநில பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் கேட்பது இதுவே முதல்முறை என அவர் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதேபோல், பட்ஜெட்டில் விமான நிலையம், கனிம வளம் சார்ந்த அறிவிப்புகள் அதிகம் வந்துள்ளது. இவை அனைத்தும் அதானி சார்ந்த துறைகள் என்பது குறிப்பிடத்தக்கது என ஜோதிமணி எம்பியும் விமர்சித்துள்ளார்
இந்த பட்ஜெட் புதுசு இல்ல பழசு
கடந்த பட்ஜெட்டிலும் இருந்ததேதான் இந்த பட்ஜெட்டிலும் உள்ளது, இது நம்பிக்கை இல்லா தன்மையைக் காட்டுகிறது என ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். சுகாதாரம், கல்வி, கிராமப்புற மேம்பாடு மற்றும் சமூக நலன் போன்ற முக்கிய துறைகளுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு குறைந்துள்ளது. குறிப்பாக, ஜல் ஜீவன் திட்டம் போன்ற திட்டங்கள் மீது ஒன்றிய அரசு நம்பிக்கை இழந்திருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
சரிவை சந்தித்த பங்குச்சந்தை
ஒன்றிய பட்ஜெட் தாக்கத்தால், பகல் 12:00pm நிலவரப்படி மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 300 புள்ளிகள் குறைந்து 77,230 புள்ளிகளுக்கு சரிந்தது. நிப்டியும் 23,428 புள்ளிகளில் உள்ளது. IT, FMCG தவிர்த்த துறைகளின் பங்குகள், குறிப்பாக Sun Pharma, Bharat Electronics, UltraTech Cement, Adani Ports, Indusind Bank, Hero MotoCorp, ONGC, Dr Reddy’s Labs, Trent, Grasim Industries சரிவில் உள்ளன.
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீடு
காப்பீட்டுத் துறையில் 100 சதவீத வெளிநாட்டு முதலீட்டுக்கு ஒன்றிய அரசு அனுமதியளித்துள்ளது. தற்போது இது 74 சதவீதமாக உள்ளது. இந்நிலையில், இந்திய புதிய அறிவிப்பினை நிதி அமைச்சர் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.