– ஜெர்மனியிலிருந்து யாழ்ப்பாணத் தமிழர் வி.சபேசன் ஆனந்த விகடனின் இணைய வழித் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணல்
சீமான் அவர்களின் ஒரு மாத காலப் பேச்சுகள் உச்சக்கட்ட ‘‘ஹீரோயிசமாக’’ இருந்தன. அணையும் நேரத்தில் மெழுகுவத்திகள் பிரகாசமாகவே எரியும்! சமூக ஊடகங்களில் பற்றி எரிந்த பெரியார் நெருப்பில் “சீமான்ஜி’’ கருகிப் போய்விட்டார். அதேநேரம் 15 ஆண்டுகளாக எதை மூலதனமாகக் கொண்டு பிழைத்தாரோ, அந்த மோசடி முடிவுக்கு வந்தது.
வைக்கம் போராட்டத்தின் போது “பெரியார் இறந்து போகட்டும்’’ எனப் பார்ப்பனர்கள் யாகம் செய்வார்கள். ஆனால், மன்னர் இறந்துவிடுவார். அதேபோல பெரியாரின் பிம்பத்தை உடைக்கிறேன் எனச் சவால் விட்ட இரண்டே வாரத்தில் மானம், மரியாதையை இழந்து, துரோகத்தையும், கேவலத்தையும் பூசிக் கொண்டார்!
ஒரே ஒரு நிழற்படத்தை வைத்துக் கொண்டு ஓராயிரம் பொய்களைக் கூறி வந்த சீமானை, தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி தமிழீழ மக்களும் சான்றுகளுடன் பிழிந்துவிட்டார்கள். ஈழத்தமிழர்கள், பிரபாகரன், திராவிட அரசியல் குறித்து எண்ணற்ற காணொலிகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில்
ஆனந்த விகடனின் இணைய வழித் தொலைக்காட்சிக்கு ஜெர்மனி நாட்டில் இருந்து யாழ்ப்பாணத் தமிழர் வி.சபேசன் ஒரு நேர்காணல் கொடுத்துள்ளார்.
பொதுவானவர்களும் உணரும் வண்ணம், கிஞ்சிற்றும் உணர்ச்சிவசப்படாமல், நேர்மையாகத் தம் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார். அதை அப்படியே ‘விடுதலை’ வாசகர்களுக்கு வழங்குகிறோம்!
கேள்வி: பெரியார் – ஈழத் தமிழர்கள், பெரியார் – விடுதலைப்புலிகள், தமிழரா? திராவிடரா? போன்ற விவாதங்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகிறதே?
தந்தை பெரியார், திராவிடம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஈழத்திற்குப் புதிதானது அல்ல!
பதில்: திராவிடம் மற்றும் பெரியார் குறித்த வரலாற்றைப் படிக்காதவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அதிலும் சீமான் போன்றோரை ‘‘ஈழ ஆதரவு தலைவராக’’ நினைப்பவர்கள் திராவிடத்தைப் பொய் என்றும், பெரியாரைத் தமிழுக்கு எதிரி என்றுமே நினைப்பார்கள். இப்படியான புரிதல் உள்ள மக்கள் வெளிநாடுகளிலும் இருக்கிறார்கள். அதேநேரம் வாசிப்புப் பழக்கம் இருக்கிற அறிவுசார் மக்கள், பெரியார் குறித்து ‘‘பிரமிப்பான பார்வை’’ வைத்திருக்கிறார்கள்!
தந்தை பெரியார், திராவிடம் என்கிற வார்த்தைகள் எல்லாம் ஈழத்திற்குப் புதிதானவை அல்ல. ‘‘சுயமரியாதை இயக்கம்’’ என்கிற பெயரில் இலங்கையில் ஒரு இயக்கம் இருந்தது. 1932 இல் அந்த இயக்கம்தான் பெரியாரை அழைத்து, இலங்கையின் பல இடங்களில் கூட்டம் நடத்தியது. பெரியாரின் அந்தப் பேருரைகள் வரலாற்றில் இடம்பிடித்துள்ளன. படித்தவர்களுக்கு இது தெரியும். அதேபோன்று பெரியார், ‘‘திராவிடர் கழகம்’’ எனப் பெயர் மாற்றிய போது, இலங்கையிலும் திராவிடர் கழகம் என மாற்றம் வந்தது. 1960 வரை இந்த இயக்கம் தீவிரமாகச் செயல்பட்டது!
யாழ்ப்பாணத்தில் ஜாதிக்கு எதிரான கருத்துகளை முதன்முதலில் முன் வைத்தது இலங்கை திராவிடர் கழகம்தான்! 1950 ஆம் ஆண்டுகளிலே தீவிரமாக இயங்கியது. அதேபோல கம்யூனிசக் கட்சிகளும் போராடின. கோயில் நுழைவுப் போராட்டங்களும் நடந்தன. அதேபோல யாழ்ப்பாணத்தில் ‘‘திராவிடன்’’ என்கிற இதழ் வந்தது. அது யாழ்ப்பாணத்தில் தயாராகி இலங்கை, மலேசியா எனப் பல நாடுகளுக்கும் சென்றது. அது ஒடுக்கப்பட்டோர் இதழாகவே பார்க்கப்பட்டது!
எனவே பெரியார் என்பதோ, திராவிடம் என்பதோ எங்களுக்கு சர்ச்சைக்குரிய பெயர் அல்ல. அது இயல்பான ஒன்று! நாங்கள் மிகவும் அறிந்த பெயர்களும்கூட! இலக்கியம், கலை, அரசியல் அனைத்தையும் நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து தானே பெற்று வருகிறோம்! தமிழ்நாட்டின் தாக்கம் எப்போதும் எங்களுக்கு இருக்கும்! அடுத்த மாதம் ஜெர்மன் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஆனாலும், ஜெர்மன் வாழ் ஈழத்தமிழர்கள் ஈரோட்டுத் தேர்தல் குறித்துதான் ஆர்வமாக இருக்கிறோம்!
கேள்வி: பிறகு ஏன் ஈழத்தில் உள்ள இளைஞர்கள், பெரியார் மீது மாற்றுப் பார்வை வைத்திருக்கிறார்கள்?
வரலாறே தெரியாமல் ஒரு சமூகம் இடையில் உருவானது உண்மை!
பதில்: ஈழத்தில் விடுதலைப்புலிகள் போராட்டம் தொடங்கிய போது, அப்போதிருந்த இளைஞர்களுக்குப் பெரியார் குறித்த அறிதல், புரிதல் இருந்தது. ஆனால், 2009 ஆம் ஆண்டிற்குப் பிறகு வந்தவர்களுக்கு இதுகுறித்த வரலாறும் தெரியவில்லை. அதனால் பெரியார் குறித்த பாதகமான பார்வை அவர்களிடம் இருந்தது. வரலாறே தெரியாமல் ஒரு சமூகம் இடையில் உருவானது உண்மை!
ஆனால், இது சரியான பாதை கிடையாது. திராவிடம், பெரியார் குறித்து விடுதலைப்புலிகள் இதழ்களில் நிறைய செய்திகள் வந்துள்ளது. அன்டன் பாலசிங்கம் ‘‘போரும் சமாதானமும்’’ எனும் தமது நூலில், ‘‘திராவிட குடிகள் என்று சொல்லக்கூடிய தமிழர்கள்’’ என்று தான் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத்துப் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள், திராவிடம் குறித்து ஆய்வு செய்து எழுதியுள்ளார். அதேபோல ஈழத் தமிழர்கள் பெரியார் குறித்தும் நூல்கள் எழுதியுள்ளார்கள். இந்த நிலையில் வாசிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் தான் இப்படி மாறுபட்டு பேசி வருகிறார்கள். அதேபோல 2009 போர் முடிவு காரணமாகச் சிலர் மனப்பிறழ்வுக்கு ஆளாகி, தங்கள் கோபத்தை, வன்மத்தை இப்படிக் கொட்டுகிறார்கள். மற்றபடி அறிவுசார் சமூகத்திடம் எந்தப் பிரச்சினையும் இல்லை!
கேள்வி: விடுதலைப்புலிகள் பெரியாரை எப்படிப் பார்த்தார்கள்?
விடுதலைப்புலிகள் செய்தது அனைத்தும் பெரியார் கொள்கை சார்ந்துதான்!
பதில்: விடுதலைப்புலிகள் பொது வெளியில் பெரியார் குறித்துப் பேசி நான் அறிந்தது கிடையாது. அதேநேரம் திராவிடர் இயக்கத் தோழர்கள்தான் எப்போதும் நெருக்கமாக இருந்தார்கள். அவர்கள் அடிக்கடி சந்திக்கும் போது, பெரியார் குறித்துப் பேசியிருப்பார்கள். விடுதலைப்புலிகள் செய்தது அனைத்தும் பெரியார் கொள்கை சார்ந்துதான். ‘‘பெரியார் சொன்னார்; விடுதலைப்புலிகள் செய்கிறார்கள்!’’ என்றுதான் நாங்கள் அடிக்கடி சொல்லிக் கொள்வோம்!
அதேநேரம் ‘பெரியார் வழியில்’ என்று அவர்கள் நேரடியாகக் குறிப்பிட்டது கிடையாது. எனினும் பெரியார் முன் வைத்த மண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகியவற்றை நடைமுறைக்குக் கொண்டு வந்தார்கள். ஈழப் போராட்டம் என்பதே முற்போக்கு சமூகத்திற்கு வழிவகுத்ததுதான். அந்த வகையில் தமிழ்த் தேசியம் உருவாக, ஜாதியை ஒழிக்க வேண்டும் என்கிற தேவை இயல்பாக எழுகிறது. அதேபோல தமிழ்த் தேசியம் உருவாகத் தமிழர்கள், தமிழர்களாக ஒன்றிணைய வேண்டிய அவசியமும் எழுகிறது. ஆண், பெண் சமத்துவமாகப் போரிட வேண்டிய சூழலும் உருவாகிறது.
விடுதலைப்புலிகள் திராவிடர் இயக்கங்களுடன் இணைந்தே செயல்பட்டார்கள்!
அதேநேரம் விடுதலைப்புலிகள் திராவிடர் இயக்கங்களுடன் இணைந்தே செயல்பட்டார்கள். திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொளத்தூர் மணி, கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் நெருக்கமாக இருந்தனர். இதுதவிர எண்ணற்ற பெரியாரியத் தோழர்களும் தமிழ்நாட்டில் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளார்கள்; சிறைக்கும் சென்றுள்ளார்கள். தமிழ்நாட்டில் நமக்கு யார் உதவி செய்கிறார்கள் என்பதை விடுதலைப்புலிகள் நன்கு அறிந்தே வைத்திருந்தனர்.
அதேநேரம் தமிழ்நாட்டில் பெரியார் பேசிய பார்ப்பனர்கள் குறித்த கருத்தை யாழ்ப்பாணத்தில் பேச இயலாது. இங்கிருந்த ஜாதிய ஒடுக்குமுறைகள் வேறு. எனினும் பெரியாரிய கருத்துகளுக்கு ஒப்பவே விடுதலைப்புலிகளின் செயல்களும் இருந்தன.
கேள்வி: டொமினிக் ஜீவா என்பவர் ஆலய நுழைவுப் போராட்டம் நடத்தினாரே?
பதில்: ஆமாம்! அதற்கு முன்னரே இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம் பகுத்தறிவுப் பிரச்சாரங்களைப் பல வடிவத்திலும் செய்தது. ஆலய நுழைவுப் போராட்டங்களும் நடந்தன.
‘‘பெரியார் வழியில் நாம் போராட வேண்டும்!’’
சண்முகதாசன் தலைமையில் கம்யூனிச இயக்கங்களும் பங்கேற்றன. டொமினிக் ஜீவா தம் இலக்கியக் கருத்துகள் மூலம் தொடர்ந்து பிரச்சாரம் செய்தார். தந்தை பெரியாரின் நூற்றாண்டையொட்டி 1978 இல் விழா ஒன்று நடைபெற்றது. அப்போது ஈழத்தில் இருந்து வந்த மல்லிகை இதழில் பெரியார் குறித்து ஒரு கட்டுரை எழுதினார் டொமினிக் ஜீவா. அதில் “வெள்ளையர்கள் இருந்த போதே சமூகநீதிப் போராட்டத்தைப் பெரியார் தொடங்கிவிட்டார். குறிப்பாக ஜாதியில் இருந்து விடுதலை பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினார். இப்போதுதான் நாம் யாழ்ப்பாணத்தில் இதுகுறித்துப் பேசுகிறோம். ‘‘பெரியார் வழியில் நாம் போராட வேண்டும்’’, என டொமினிக் ஜீவா 1978 ஆம் ஆண்டில் எழுதினார்.
எனவே பெரியாரும், அவரது கருத்துகளும் ஈழத்திற்குப் புதிது என்று சொல்வது வடிகட்டின பொய்!பிற்காலத்தில் வந்தவர்கள் வாசிப்புப் பழக்கம் இல்லாமல் தேங்கிப் போனார்கள். பெரியாரைப் புகழ்ந்தும், ஜாதியத்திற்கு எதிராகவும் எழுதியதோடு, பெரியார் வழியைப் பின்பற்றுவோம் என டொமினிக் ஜீவா எழுதியது மிக, மிக முக்கியமானதாகும்!
கேள்வி: இலங்கையில் உருவான இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தடை செய்த போது, யாருமே எதிர்ப்புக் குரல் கொடுக்கவில்லையா?
பதில்: ஈழத்தமிழர்களின் முக்கியத் தலைவராக இருந்த அமிர்தலிங்கம் கண்டித்துப் பேசினார். அதுதவிர இலங்கையின் பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பைப் பதிவு செய்தன.
இலங்கை அரசு என்ன சொன்னது? இலங்கையில் உள்ள திமுக, தமிழ்நாட்டுடன் இணைந்து இங்கே ‘‘தமிழரசு’’ என்ற ஒன்றை நிறுவப் பார்க்கிறது எனக் குற்றம் சாட்டியது. தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான பேரை அழைத்து வருவார்கள் எனவும் வதந்தி பரப்பியது. இப்படியான காரணங்களைக் கூறியே இலங்கை திமுவை தடை செய்தார்கள்.
கேள்வி: திராவிட கட்சிகள் புரட்சியை மட்டுப் படுத்திவிட்டன என்று சிலர் சொல்கிறார்களே?
ஒவ்வொரு காலகட்டத்திலும் காலச் சூழல் வேறு!
பதில்: ஆமாம்! அப்படி ஒரு கருத்து இருக்கிறது. திராவிடர் இயக்கங்கள் தனித் தமிழ்நாடு கேட்டு, பிறகு சமரசமாகப் போனது என்கிற எண்ணம் ஈழத்திலும் இருந்தது. ஆனால், இன்றைய சூழலில் இதைப் பேச இயலாது. ஏனெனில் ஒவ்வொரு காலகட்டத்திலும் காலச் சூழல் வேறு. ஈழ இயக்கங்களிடமும் பல்வேறு கருத்துகள் இருந்தன. இது நீண்ட விவாதத்திற்குரிய விசயம். கள யதார்த்தத்தை வைத்தே முடிவு எடுக்க வேண்டும். ஈழத்தில் நாங்கள் ஒரு முடிவு எடுக்கிறோம், அதைத் தமிழ்நாட்டில் செய்ய முடியாது. தமிழ்நாட்டில் ஒரு முடிவு எடுப்பார்கள், ஈழத்தில் அதை நாங்கள் செய்ய முடியாது.
கேள்வி: பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளுடன் சீமான் நெருங்கிய உறவில் இருந்ததாகவும், விருந்தோம்பல் தொடர்பான செய்திகளும் வருகிறதே, உங்கள் கருத்து என்ன?
பதில்: பலரும் பலவிதமாகச் சொல்கிறார்கள். 2006 ஆம் ஆண்டு கால கட்டத்தில் வெளிநாடுகளில் இருந்து நிறைய பேர் ஈழம் போனார்கள். பிரபாகரன் அனைவரோடும் ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். ஒரு கட்டத்தில் வன்னியில் உள்ள மக்கள்,‘‘எங்களைச் சந்திக்காமல் வெளிநாட்டு மக்களை மட்டும் சந்திக் கிறாரே?’’, என்கிற முணுமுணுப்பு கூட வந்தது. அந்தச் சூழலில் தமிழ்நாட்டில் இருந்தும் திரைத்துறையைச் சார்ந்தவர்களும் சென்றார்கள். சீமானும் அப்படி போனவர்தான். எல்லோருடனும் படம் எடுத்தது போலவே சீமானுடனும் படம் எடுத்திருப்பார்கள். ஆனால், அந்தப் படம் உண்மை இல்லை என்று சிலர் சொல்கிறார்கள். இதற்குச் சீமானும் தகுந்த ஆதாரம் கொடுக்கவில்லை. அந்தப் படம் உண்மைதான் என அவர் இப்போது வரை நிரூபிக்கவில்லை.
பிரபாகரன் அவர்களை நாங்கள் ஒரு தத்துவமாகப் பார்க்கிறோம்!
அதேபோல ஆமைக்கறி சாப்பிட்டேன், மான் கறி சாப்பிட்டேன் என்கிறார். இதுகுறித்து எனக்கு உறுதியாகத் தெரியாது. இதை உண்மை என்றே வைத்துக் கொள்வோம். ஈழத்தில் 14 நாள்களில் இது மட்டும்தான் நடந்ததா? இதை மட்டும்தான் கற்றுக் கொண்டு வந்தாரா? பிரபாகரன் அவர்களை நாங்கள் ஒரு தத்துவமாகப் பார்க்கிறோம். ‘‘விடுதலை’’ உணர்வாகப் பார்க்கிறோம்.
காலம் காலமாக மனவுலக இருளுக்குள் மூழ்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்!
‘‘தலைவிதி என்றும், கர்மவினை என்றும், தனக்காக விதிக்கப்பட்ட மனுநீதி என்றும், பழைமை என்றும், பண்பாட்டுக் கோலம் என்றும், காலம் காலமாக மனவுலக இருளுக்குள் மூழ்கிக் கிடந்த பெண்ணினம் விழித்தெழ வேண்டும்’’, எனப் பிரபாகரன் பேசியிருக்கிறார். தந்தை பெரியார் பேசியது போலவே இருக்கும்! ஆனால், பேசியது பிரபாகரன்! ஈழத்தில் 30 ஆண்டுகள் போரிட்டு, எண்ணற்ற உயிர்களைத் துறந்து, தனி அரசு நடத்தி, சமூகச் சீர்திருத்தம் செய்த ஒரு தலைவரின் தத்துவத்தைப் பேசாமல், பிரபாகரன் அவர்களை ரசிக மனப்பான்மையோடு உருவாக்கிவிட்டார்.
கேள்வி: சீமானுக்கு மாற்றிப் பேச வேண்டிய தேவை என்ன?
ஆரியம், பெரியார் போன்றவை எல்லாம் விடுதலைப்புலிகளின் இதழ்கள் மூலமே நாங்கள் அறிந்தோம்!
பதில்:ஈழத்தில் இருந்த உண்மையான சிந்தனைகளை இவர் பேசியிருந்தால், இவரை இயக்குபவர்கள் அதை அனுமதித்திருக்க மாட்டார்கள். ‘‘பிரபாகரனை நீங்கள் இப்படித்தான் காட்ட வேண்டும், அவரால் எந்த மாற்றமும் வந்து விடக்கூடாது, ரசிக மனப்பான்மையோடு வைத்திருங்கள்’’, என அவர்கள் கூறியிருப்பார்கள். ஆரியம், பெரியார் போன்றவை எல்லாம் விடுதலைப்புலிகளின் இதழ்கள் மூலமே நாங்கள் அறிந்தோம். அதில் மனுநீதி என்கிற வார்த்தையெல்லாம் வரும். அதுகுறித்து அப்போது எங்களுக்குத் தெரியாது.
அதேபோல ‘‘சுதந்திரப் பறவைகள்’’ எனப் பெண் போராளிகளுக்கான பத்திரிகை வந்தது. அதில் மந்திரங்கள் தொடர்பான கருத்துகள் இருக்கும். சடங்குகள் மற்றும் மதத்திற்கு எதிரான கருத்துகளும் வரும். இதற்கான கூடுதல் தெளிவைப் பெரியாரிடம் இருந்தே நாங்கள் பெற்றோம். ஆக, பிரபாகரன் பேசிய பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு உள்ளிட்ட செய்திகளை சீமான் பேசவே இல்லை. ஒருவேளை பேசியிருந்தால் பெரியார் கொள்கைக்கும், ஈழத்திற்குமான தொடர்பு தெரிந்திருக்கும்.
ஆமைக் கறி சாப்பிட்டேன், அரிசிக் கப்பலில் சுட்டேன், மான் சுட்டேன் எனக் கதை எழுதினார்!
தமிழ்நாட்டில் சமூகநீதியை முதலாம் இடத்தில் நிறுத்தியவர் பெரியார். மண் விடுதலையை முதலாம் இடத்தில் நிறுத்தியவர் பிரபாகரன். எதை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதில் மட்டுமே இருவருக்கும் வேறுபாடு இருந்தது. ஈழத்தில் இருந்த ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை, புராண எதிர்ப்புப் போன்றவற்றைப் பேசினால் பெரியாருக்கே வலு சேரும் என்பதால், ஆமைக் கறி சாப்பிட்டேன், அரிசிக் கப்பலில் சுட்டேன், மான் சுட்டேன் எனக் கதை எழுதினார். அதுவும் இவர் சாப்பிட்டதைப் பின்னால் இருந்து எழுதினார்கள் எனவும் சொன்னார். எல்லா கதையையும் சொல்லிவிட்டு,
இடையிடையே ‘‘நாம் பிரபாகரனின் பிள்ளைகள்’’ என்று சொல்லிவிட்டால் இளைஞர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்; கைதட்டுவார்கள். இதைத்தான் சீமான் உருவாக்கினார். ஒரு விஜய்யை பார்ப்பது போல, ஒரு ரஜினிகாந்தைப் பார்ப்பது போல, ரசிக மனப்பான்மையில் பிரபாகரனை பார்க்க வைத்துவிட்டார்.
கேள்வி: தமிழ்நாட்டில் தமிழ் உணர்வை ஊட்ட திராவிடமும், பெரியாருமே தடை என்கிறார்களே?
சீமான் பேசும் தமிழ் முழுக்க, முழுக்க இனவாதம் கொண்டது
பதில்: கலைஞர் கருணாநிதி அளவிற்குத் தமிழ்ப்பற்று உடையவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ்ப் பெயர்கள் தொடங்கி, தமிழ் விடயங்கள் சார்ந்த அத்தனையும் திமுக ஆட்சியில் தான் நடந்தது. யாரும் இதை மறுக்க முடியாது. வரலாறு படித்தவர்களுக்கு தெரியும். சீமான் பேசும் தமிழ் முழுக்க, முழுக்க இனவாதம் கொண்டது. பாவலரேறு பெருஞ்சித்திரனாரை கூட தெலுங்கர் என்று சொல்லுமளவு வந்துவிட்டார்கள். தமிழர்களை இழிவு செய்யும் செயல் இது. இப்போது நான் ஜெர்மனியில் இருக்கிறேன். என் பிள்ளை இங்கே முதலமைச்சர் ஆகலாம், கனடாவில் 20 ஆண்டுகளில் ஒரு தமிழர் பிரதமர் ஆகலாம், இங்கிலாந்தில் இருந்து கூட ஒரு தமிழர் பிரதமராக வரலாம்.
தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களைப் பார்த்து, சீமான் இனவாதம் பேசுகிறார்!
சீமானை எப்போது நான் எதிர்க்கத் தொடங்கினேன் என்றால், சிங்களப் பேரினவாதம் எங்களைக் குறித்து என்னவெல்லாம் சொன்னதோ, அதையே சீமானும் தமிழ்நாட்டில் முன்மொழிந்தார். ‘‘தமிழர்கள் எல்லா இடத்திற்கும் வந்துவிட்டார்கள்”, தமிழர் கடைகள் எல்லா இடத்திலும் வந்துவிட்டது, தமிழர்கள் எல்லா அதிகாரத்திற்கும் வந்துவிட்டார்கள் என்று சொல்லி, சொல்லியே சிங்களப் பேரினவாதம் எங்களை அடித்தது, கொன்றது, இன அழிப்பு செய்தது. அதேபோன்று தான் தமிழ்நாட்டில் 500 ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர்களைப் பார்த்து, சீமான் இனவாதம் பேசுகிறார்.
கேள்வி: திரைத்துறையினர் சென்ற குழுவில் சீமான் போனார். அப்போது போரும் உச்சத்தில் இருந்தது. திரும்பி வந்ததும் ‘‘இப்படிப் பயன்படுத்திக் கொள்வோம்’’ என்று நினைத்தா போயிருப்பார்?
பதில்: தவறான நோக்கத்தில் அவர் சென்றார் என்றோ, 2009 ஆம் ஆண்டு வரை அவர் அப்படி இருந்தார் என்றோ நான் கூறவில்லை. அவர் எண்ணமே தவறு என்றும் நான் நம்பவில்லை. ஆனால், பின்னாளில் அப்படி அவரை உருவாக்கி இருக்கலாம் அல்லது நம்ப வைக்கப்பட்டிருக்கலாம். ஈழப் போராட்டம் இறுதிக் கட்டத்தில் இருந்தபோது யார் மீது கோபம் வந்திருக்க வேண்டும்? அதுவும் ஒரு மாநில முதலமைச்சர்தான் காரணம் என்றால் எப்படி ஏற்க முடியும்? எங்களின் நேரடி எதிரிகள் மிகவும் பலம் வாய்ந்தவர்கள். அவர்களை இவர்களால் எதிர்க்க முடியாது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதைச் செய்தார்கள் என்கிறபோது, இந்தியாவின் மீது கோபம் திரும்பிவிடாமல் தமிழ்நாட்டின் முதலமைச்சர் சரியில்லை, அவர் போரைத் தடுக்கவில்லை, உதவி செய்யவில்லை, காரணம் அவர் தமிழர் கிடையாது, தெலுங்கர் என மடைமாற்றிவிட்டார்கள்.
15 ஆண்டுகளில் சீமான் என்ன செய்தார்?
இந்தப் பெரிய வேலையைச் செய்ய சீமானை நியமித்திருப்பார்கள் அல்லது இவராகவே விலை போயிருப்பார்! ‘‘மானமும் அறிவு மனிதருக்கு அழகு என்று சொன்ன தந்தை பெரியாரின் கைத்தடிதான், ஈழத்தில் ஆயுதமாக இருக்கிறது’’, என்று ஒரு காலத்தில் சொன்ன சீமான், இப்போது பெரியாரா? பிரபாகரனா? என்று வந்து நிற்கிறார்.
‘‘போராட்டத்தை உங்களிடம் கொடுத்துவிட்டுப் போகிறேன்’’, என்று பலருக்கும் சொன்னதை, தனக்குச் சொன்னதாகச் சீமான் சொல்கிறார். சரி! அதையும் உண்மை என்றே வைத்துக் கொள்வோம். இந்த 15 ஆண்டுகளில் அதற்காக இவர் என்ன செய்தார்?
சீமானுக்கு விடுதலைப்புலிகள் அமைப்பை திராவிடர் இயக்கங்கள் மூலமாகத்தான் தெரியும்!
தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை பிரபாகரனைக் கொண்டு போய் சேர்த்தது திராவிடர் இயக்கங்கள். கண்காட்சி நடத்துவது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்கொடைத் திரட்டுவது என அனைத்தையும் அவர்களே செய்தார்கள். சீமானுக்கே விடுதலைப்புலிகள் அமைப்பை எப்படித் தெரியும்? திராவிடர் இயக்கங்கள் மூலமே தெரியும். ஆக முடிவாகச் சொல்வதனால் ஈழத் தமிழர்களுக்கும் சரி, விடுதலைப்புலிகளுக்கும் சரி, தமிழ்நாட்டிற்கும் சரி யாருக்குமே இவர் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை. இவரது நிலையை இப்போதாவது இளம் தலைமுறையினர் அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி!
தொகுப்பு: வி.சி.வில்வம்