சென்னை, பிப். 1- சென்னையில் காலை உணவுத் திட்டத்தை மாநகராட்சியே தொடர்ந்து செயல்படுத்தும் என்று மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:
‘தமிழ்நாட்டில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளின் உடல் நலன் காக்கவும், சோர்வின்றி கல்வி கற்கவும் ஏதுவாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சென்னை மாநகராட்சியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 356 பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 49,147 குழந்தைகளுக்கு 35 சமையல் கூடங்கள் மூலம் காலை உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மாநகராட்சியில் வெளி நிறுவனம் வாயிலாக காலை உணவு சமைத்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்குவதற்காக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் கோரும் பணி ரத்து செய்யப்பட்டு, காலை உணவு சமைத்து வழங்கும் பணியை மாநகராட்சியே தொடர்ந்து மேற்கொள்ளும்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் காலை உணவு சமைத்து வழங்கும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி முடிவு செய்து, அதற்கான ஒப்பந்தம் கோரியது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
நேற்று முன்தினம் (30.1.2025) நடைபெற்ற மாநகராட்சி மன்ற கூட்டத்திலும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி கவுன்சிலர்களும், ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தினர். இந்நிலையில், காலை உணவுத் திட்டத்தின் கீழ் உணவு சமைத்து வழங்கும் பணியை மாநகராட்சியே தொடர முடிவு செய்துள்ளது கவனிக்கத்தக்கது.
சென்னையில் முதல்முறையாக கேபிளில் தொங்கும் பாலம்
போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, பிப்.1- சென்னை சாந்தோம் – பசுமைவழிச் சாலை வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க முதல்முறையாக கேபிளில் தொங்கும் பாலம் ஒன்றை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
தமிழ்நாட்டின் தலைநகரமாகவும், இந்தியாவிலுள்ள பெருநகரங்களில் ஒன்றாகவும், 426 சதுர கிமீ பரப்பளவில் சென்னை மாநகராட்சி அமைந்துள்ளது. இது 1688ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மிகப்பழமையான மாநகராட்சியாகும். இம்மாநகரில் ஏற்கெனவே உள்ள போக்குவரத்து உள்கட்டமைப்பு வசதிகளை, வருங்கால தேவைக்கு ஏற்றவாறு மேம்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அடையார் பாலம் மற்றும் பசுமைவழிச் சாலை ஆகியவை பொது மற்றும் தனியார் வாகன போக்குவரத்து நிறைந்ததாக உள்ளன. பசுமைவழிச்சாலை மற்றும் சாந்தோம் வழித்தடத்தில் அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் ஆகியோரின் அரசு இல்லங்கள் நிறைந்துள்ளன. கல்வி நிறுவனங்கள், கடற்கரை பகுதியை அணுகும் பகுதி, தேவாலயங்களும் உள்ளன. அதனால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அந்த சாலையை அகலப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கேபிளில் தொங்கும் பாலம்
இந்நிலையில் மாநகராட்சி சார்பில் பட்டினப்பாக்கம் -சீனிவாசபுரம் மற்றும் பெசன்ட்நகர் ஊரூர் குப்பம் இடையே அடையாற்றின் குறுக்கே உடைந்த பாலம் வழியாக கேபிளில் தொங்கும் பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ரூ.20 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, ஒப்பந்தப் புள்ளி கோரப்பட்டுள்ளது.
தெரிவுசெய்யப்படும் நிறுவனம், கேபிளில் தொங்கும் பாலம் அமைப்பதற்கான நில கணக்கீடு, போக்குவரத்து கணக்கீடு, அந்த தரவுகளை பகுப்பாய்வு செய்தல், இத்திட்டத்துக்கு மாற்று திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.