– காஞ்சி கதிரவன் –
உரிமைகளற்ற அடிமைகளாக இருந்தவர்களை, தாங்கள் அடிமைகளாக இருக்கின்றோம் என்பதைக்கூட உணராத மக்களைத் தட்டி எழுப்பி, ‘நீயும் மனிதன் தான்’ என்றுணர்த்தி, ‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’ என்பதை அறிவுறுத்திய தத்துவப் பேராசான் தந்தை பெரியாரின் தத்துவத் தலைமகன் அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில், தந்தை தந்த தனயன், கடலூர் கண்ட கருத்து வைரம், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், ஆதிக்க சக்திகளுக்கும், ஆதிக்க சக்திகளாக இருப்போருக்கும் அவர்களின் அடிவருடிகளாக இருப்போர்க்கும் எதிராக, மக்களின் அறிவாயுதத்தைக் கூர்தீட்ட அறிஞர் அண்ணா நினைவுநாளான பிப்ரவரி 3 அன்று மாலை 6 மணியளவில், காஞ்சிபுரம் காமராஜர் சாலையில் உள்ள தொண்டை மண்டல ஆதிசைவ வேளாளர் சமுதாயக் கூடத்தில் உரையாற்ற
வருகிறார்!
எச்சரிக்கை செய்யவரும்
தலைவர்!
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று பாடிய திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து, திரு வள்ளுவரை ஹிந்துத்துவா மயமாக்கவும் ‘ஜாதி, மத சகதியில் உழல மாட்டேன்’ என்று உரைத்த வள்ளலாரைச் ஸநாதனத்தைப் பின்பற்றியவர் என்றும் கூறி ஹிந்துத்துவா மயமாக்கத் துடிக்கின்ற பாசிச ஆர்எஸ்எஸ் கூட்டத்தின் தேள் ஒன்று தன் நச்சுக் கொடுக்கால் நாள்தோறும் கொட்டிக் கொண்டிருப்பதை நாட்டோர்க்கு எடுத்துக்காட்டி, சுயமரியாதைச் சூரியன் தந்தை பெரியார் வழியில் மக்களின் அறிவாயுதத்தைத் தீட்டவும் ‘திருட வருகிறார்கள்; எச்சரிக்கையாக இருங்கள்!’ என்று மக்களுக்கு அறிவுறுத்த ‘திருடர்கள் ஜாக்கிரதை’ என்று முழங்கவும் தமிழர் தலைவர் காஞ்சிபுரத்திற்கு வருகிறார்!
திருப்பம் தந்த காஞ்சிபுரம்!
1919இல் திருச்சியில் நடந்த 25 ஆவது மாகாண காங்கிரஸ் மாநாடு, 1920இல் திருநெல்வேலி யில் நடந்த 26ஆவது மாகாண காங்கிரஸ் மாநாடு, 1921இல் தஞ்சையில் நடந்த 27 ஆவது மாகாண காங்கிரஸ் மாநாடு, 1922இல் திருப்பூரில் நடந்த 28வது மாகாண காங்கிரஸ் மாநாடு, 1923இல் சேலத்தில் நடந்த 29ஆவது மாகாண காங்கிரஸ் மாநாடு, 1924இல் தன் தலைமையில் நடந்த 30வது மாகாண காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புவாரியாக உரிமைகளை அனைத்து ஜாதியினருக்கும் பகிர்ந்து தரப்பட வேண்டும் என்று தந்தை பெரியார் வற்புறுத்தினார். 1925இல் திரு.வி.க தலைமையில் காஞ்சிபுரத்தில் நடந்த 31 ஆவது மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி உரிமை கோரும் தீர்மானத்தை வலியுறுத்திய போதும் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்ததால் வெகுண்டெழுந்த தந்தை பெரியார், பார்ப்பனர்களின் ஆதிக்கக் கூடார மாக இருக்கின்ற காங்கிரஸிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார். 50 ஆண்டுகாலம் பிரச்சாரக்களம், போராட்டக்களம் கண்டு பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தரக் காரணமாக இருந்த காஞ்சிபுரத்திற்கு தமிழர் தலைவர் சங்கநாதம் எழுப்ப வருகிறார்.
திராவிடர் கழகத் தலைவர்!
சுயமரியாதை இயக்கத் தலைவர் தந்தை பெரியார் அதன் தொடர்ச்சியான நீதிக் கட்சியை, 1944 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27 இல் சேலத்தில் நடந்த மாநாட்டில் ‘திராவிடர் கழகம்’ என்று பெயர் மாற்றம் செய்தார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அத்தீர்மானத்தை முன்மொழிந்து உரையாற்றிய திராவிட இயக்கத்தின் தலைமகன் அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில், அத்தீர்மானத்தை வழிமொழிந்து பேசியவர் இன்று திராவிடர் கழகத்தின் தலைவராக தன் நினைவுகளை அசைபோட வருகிறார்.
அண்ணாவின் புகழ்பாடும் தலைவர்!
சூத்திரர்களுக்குத் திருமண உரிமையே இல்லை என்றும், தற்காலிகமாக பூணூல் அணிவித்து உயர் ஜாதியாக்கி திருமணம் செய்து வைத்து, அருவ ருக்கத்தக்க இழிவான மந்திரங்களைச் சொல்லி, நம் தாய்மொழியாம் தமிழுக்கு இடமின்றி சமஸ்கிருதத்தைப் புகுத்தி, தமிழை நீசமொழி என்று பார்ப்பனர்கள் கூறுவதை எதிர்த்து இழிவுகளைப் போக்கும் விதத்தில் பார்ப்பனர் மறுப்புத் திருமணமாக, அறிவார்ந்த திருமண முறையாக தந்தை பெரியார் கொண்டு வந்த சுயமரியாதை திருமணத்தைச் சட்டமாக்கியும், சென்னை மாகாணத்திற்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியும் தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மட்டுமே அரசின் அலுவல் மொழி என்று இந்தியத் துணைக் கண்டத்தின் முதல் பிரதமர் நேருவிடம் உறுதியைப்பெற்ற அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி மண்ணில், அந்த வரலாற்றுச் செய்திகளை எல்லாம் பகிர்ந்து கொள்ள, திராவிடர் கழகத் தலைவர்
வருகிறார்.
அறிவார்ந்த படைக்கலன் திரட்டும் தலைவர்!
சமத்துவத்திற்கு எதிரான கொள்கைகளைக் கொண்டி ருக்கும் ஆர்எஸ்எஸ், பிஜேபி வகையறாக்களின் சூழ்ச்சிகளை எடுத்துக்காட்டி மக்களை விழிப்புணர்வு கொள்ளச் செய்து அறிவார்ந்த படைக்கலன் திரட்ட தந்தை பெரியாரிடம் பகுத்தறிவுப்பால் உண்ட குழந்தையாய், 10 வயதில் மேடை ஏறி, 80 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்வில் ஈடுபட்ட பட்டறிவுடன் 92 வயதிலும் மானத்தை, அறிவை மண்ணில் பொதுவாக்கிட, பகுத்தறிவுச் சூறாவளியாய்ச் சுற்றுகின்றார் தமிழர் தலைவர். அப்படிப்பட்ட தலைவர் காஞ்சிபுரத்திற்கு வருகிறார்.
ஆட்சியைக் காக்கும் அரண்!
‘எல்லோர்க்கும் எல்லாமும்’ என்ற சீரிய சிந்தையுடன் ஒல்லும் வகையில் எல்லாம் உழைக்கும் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர், சமூக நீதிக்கான சரித்திர நாயகர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் சீரிய செயல்பாட்டிற்கு என்றும் துணை நின்று, வழிகாட்டி, ஆட்சியைக் காக்கின்ற அரணாகச் செயல்பட்டு வருகின்ற தலைவரான தமிழர் தலைவர் காஞ்சிக்கு வருகிறார்.
எல்லோரும் வாருங்கள்!
திராவிடர் கழகத்தினர், பெரியாரிய உணர்வாளர்கள், அரசியல் கட்சியினர், மக்கள் மன்றத்தினர், சிறுபான்மை யினர், கட்சிகளில் ஈடுபடாத பொது மக்கள், இளைஞர்கள், மாணவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல், ஆதிக்கத்தை எதிர்க்கும் ஆற்றலாளர்கள் அனைவரும் திராவிடர் கழகத் தலைவரின் கருத்துரையைக் கேட்க வாருங்கள்! அலைகடலெனத் திரண்டு வாருங்கள்!