பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் 2025–2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கான நிதி உதவிகள் – மழை வெள்ள நிவாரணம் என்ற வகையிலோ அல்லது வளர்ச்சித் திட்டங்களுக்கான எந்த அறிவிப்போ, நிதி ஒதுக்கீடு ஏதும் இடம்பெறாதது பெருத்த ஏமாற்றமாகும்! பட்டை நாமம் தீட்டப்பட்டுள்ளது.
பீகார் சட்டமன்ற தேர்தலை நோக்கி!
மாறாக, இவ்வாண்டு பீகாரில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை மனதிற்கொண்டோ அல்லது கூட்டணியைத் தாங்கிப் பிடிப்பதற்காகவோ, பீகார் ஆதரவு ஆட்டங்காணாமல் இருப்பதற்காகவோ அறிவிக்கப்பட்ட திட்டம் – புதிய திட்டம் – பழைய திட்டங்களை மேம்படுத்துதல் என்று பீகாரை முன்னிறுத்தியே முழுக்க முழுக்க பட்ஜெட்டை – மைனாரிட்டி அரசான ஒன்றிய பா.ஜ.க. அரசின் நாற்காலி ஆட்டங்காணாமல் பாதுகாக்க ஓர் அரசியல் பாதுகாப்பிற்கான கருவியாகவே பட்ஜெட்டைப் பயன்படுத்துகிறது என்பது தெள்ளத் தெளிவாய் விளங்குகிறது!
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் ஆந்திராவுக்கு இது போல் தனி நிதிச் சலுகை அளித்ததுபோல், இவ்வாண்டு பீகாருக்கு வாரி வழங்கப்பட்டுள்ளது!
‘‘சூட்சமம் புரிகிறதா தம்பி?’’ என்று முன்பு அறிஞர் அண்ணா எழுதிய தலைப்பைத்தான் வெகுவாக நினைவூட்டுவதாக இது உள்ளது!
திருக்குறள் – வள்ளுவரைக்கூட இம்மாதிரி அரசிய லுக்குத் துணையாகத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.மற்றபடி தமிழ், தமிழ்நாட்டிற்கு வேறு ஆக்கப்பூர்வ உதவி ஏதும் இடம்பெறவில்லை. எல்லா மாநில மக்களும் இணைந்த கூட்டாட்சிதான் இந்திய ஒன்றிய ஆட்சி என்பதைப் புறக்கணிப்பது நியாயமா?
கூட்டுறவுக் கூட்டாட்சி என்பது வெறும் வாயுரைதான்!
இடையே ‘‘கூட்டுறவு கூட்டாட்சி’’ (‘‘Cooperative federalism’’) என்ற ‘நாமாவளி’ பட்ஜெட் வெறும் வாயுரை மட்டும்தானே பயன்பட்டுள்ளது! தமிழ்நாட்டு மக்களின் வரி வருமானம் பெற்றும் இப்படி ஓரவஞ்சனை, பாராமுகம், அரசமைப்புச் சட்டப்படியும், அறவழிக் கண்ணோட்டத்திலும் நியாயம்தானா?
தமிழ்நாட்டு மக்கள், தமிழ்நாட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் புரிந்து சிந்திப்பார்களாக!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்.
சென்னை
1.2.2025