– அருணா ராய்
அருணாராய் அவர்களின் தந்தையார் தந்தை பெரியாரின் கொள்கைப் பற்றாளர். பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடு அறிவுக்குப் புறம்பானது என்பதை இப்பேட்டியில் சுட்டிக் காட்டுகிறார்.
‘‘எனது அப்பா பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றியவர் – போராட்டக் களங்களில் அச்சமின்றி நிற்கிற துணிவை எனக்குத் தமிழ்நாடும், தமிழ்பண்பாடும் கொடுத்திருக்கின்றன. கடினமான சூழல்களை எதிர் கொள்ளும் வலிமையை தமிழ்நாடு எனக்குத் தந்திருக்கிறது.’’
அருணா ராய் – இந்தியாவின் மனித உரிமைச் செயல்பாட்டாளர்களில் முக்கியமானவர். மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் (MKSS- தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் வலுசேர்க்கும் அமைப்பு) அமைப்பின் நிறுவனர்களில் ஒருவர். தகவல் அறியும் உரிமைச் சட்டம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் போன்றவை நிறைவேற்றப்பட்டதில் முக்கியப் பங்காற் றியவர். பிரதமருக்கு ஆலோசனை வழங்கும் தேசிய ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்தவர். இந்திய தேசிய மாதர் சம்மேளனத்தில் தலைவராக இருந்தவர். சமீபத்தில் சென்னை வந்திருந்தவரைச் சந்தித்து உரையாடியதில் இருந்து…
இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இருந்த உங்களைப் பொதுநலன் சார்ந்து பணியாற்றத் தூண்டியது எது?
டில்லியில் என்னுடன் பணியாற்றிய அதிகாரிகளில் பெரும்பாலானோர் பசியைப் பற்றியும் வறுமையைப் பற்றியும் பேசியதில்லை. இடமாற்றமும் பதவி உயர்வும்தான் எப்போதுமே அவர்களது பேசுபொருளாக இருக்கும். ஊழலும் லஞ்சமும் மலிந்திருக்கும் இடத்தில் அதிகாரமும் உடன் சேரும்போது என்னவாகும் ? அந்த அதிகாரமும் இடமும் தேவையில்லை என விலகினேன்.
சமத்துவத்தையும் பெண்ணியத்தையும் உங்கள் போராட்டத்தின் கருப்பொருளாகக் கொண்டது ஏன்?
ஜாதி, வர்க்கரீதியாக அனைத்து உரிமைகளையும் சலுகைகளையும் பெற்ற குடும்பத்தில் நான் பிறந் தேன். வீட்டில் அனைவருமே நன்கு படித்தவர்கள். முற்போக்குச் சிந்தனை கொண்டவர்கள். என் அப்பா பெரியாரியக் கொள்கைகளைப் பின்பற்றியவர். விடுதலைப் போராட்ட வீராங்கனையும் கல்வியாள ருமான அருணா அசஃப் அலி நினைவாகத்தான் எனக்கு அருணா எனப் பெயரிட்டனர். டில்லியில் எங்கள் வீட்டில் பல மதங்களைச் சேர்ந்தவர்களும் சமூகத்தின் பல படிநிலைகளைச் சேர்ந்தவர்களும் ஒன்றாகத் தேநீர் அருந்துவார்கள். அது இயல்பானது என்று நினைத்திருந்தேன். ஆனால், சென்னை வருகைதான் ஜாதியை எனக்கு அறிமுகப்படுத்தியது.
கலாஷேத்ரா நடனப் பள்ளியில் பயின்றபோது ஒருவர் என்னிடம், “நீ என்ன ஜாதி?” எனக் கேட்டார். அதை நான் என் தந்தையிடம் கேட்டேன். “ஜாதி என்று எதுவும் இல்லை. நாம் அனைவரும் மனிதர்கள்” என்றார் அப்பா. நான் வளர வளர ஜாதிரீதியிலான ஒடுக்குமுறை குறித்து அறிந்துகொண்டேன். பிறப்பின் அடிப்படையிலான பாகுபாடும் ஒடுக்குமுறையும் நியாயமற்றவை, அறிவுக்குப் புறம்பானவை. அறிவுக்குப் புறம்பானதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் அமைப்பு எப்படி உருவானது?
நான் சஞ்சித் பங்கர் ராயை மணந்துகொண்ட பிறகு, அவர் பணியாற்றிய ராஜஸ்தானுக்குக் குடிபெயர்ந் தேன். நாங்கள் வசித்த சிறு கிராமத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லை. பங்கர் நடத்திய ‘பேர்ஃபுட்’ கல்லூரியில் ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினேன். அதுவரை நான் படித்ததை எல்லாம் மறந்துவிட்டு, வாழ்க்கையின் வேறொரு பரிமாணத்தை அந்தக் கிராம வாழ்க்கை கற்றுக்கொடுத்தது. நிறையப் பெண்களோடு இணைந்து பணியாற்றும் சூழல் அமைந்தது. பங்கரின் திட்டங்கள் அடிப்படை வளர்ச்சி குறித்தவையாக இருந்தன. எனக்கோ மக்களின் அடிப்படை உரிமை களுக்காகப் போராடுவது பிடித்திருந்தது. நண்பர்கள் சங்கர் சிங், நிகில் டே இருவரோடும் நூற்றுக்கணக்கான விவசாயிகளோடும் இணைந்து, மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதனைத் தொடங்கியபோது எனக்கு 41 வயது.
மஸ்தூர் கிஸான் சக்தி சங்கதன் சாதித்தது என்ன?
ராஜஸ்தானின் கிராமங்களில் இருந்த பெண்கள் முதலில் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களோடு தங்கியிருந்து அவர்களில் ஒருவராக என்னை மாற்றிக் கொண்ட பிறகுதான், அவர்களுக்கு எங்கள் மீது நம்பிக்கை வந்தது. முதலில் நில மீட்புப் போராட் டத்தைக் கையில் எடுத்தோம். ராஜஸ்தானில் ஜாதி ஆதிக்கமும் பொருளாதார வலுவும் கொண்ட நிலச் சுவான்தார்களுக்கு எதிராக விளிம்புநிலை மக்களோடு நின்று போராடி வென்றோம். விவசாயிகளின் வேலை உறுதிக்கான போராட்டத்தில் ஈடுபட்டோம். எங்கள் போராட்டத்துக்கு அரசு செவிசாய்த்தது. 365 நாள்களில் குறைந்தது 100 நாள்களுக்கு வேலை உறுதி என்பதால் அதற்கு ஒப்புக்கொண்டோம். குறைந்தபட்ச ஆதாரக் கூலிக்கான எங்கள் போராட்டமும் வெற்றி கண்டது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், எங்கள் போராட் டங்களின் மைல் கல். அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை. ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் கூடாரம் அமைத்துத் தங்கி, எங்களோடு சேர்ந்து போராடி னார்கள். 11 நெடும் ஆண்டுகள் நீடித்த எங்கள் போராட் டத்தில் மக்கள் துணைநின்றனர். அதன் விளைவாக 2005இல் தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப் பட்டது. ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான மக்கள் இந்தச் சட்டத்தின் வாயிலாகத் தகவல் பெற்றுவரு கிறார்கள். ஆனால், அதற்கும்கூட இப்போது ஆபத்து வந்துவிடும்போல இருக்கிறது.
டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (Digital Personal Data Protection Act, 2023) ஒரு பிரிவைக் காரணம்காட்டி, சிலவற்றைத் தனிநபர் அந்தரங்கம் என்பதை முன்னிறுத்தித் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நீர்த்துப்போகச் செய்யும் வேலைகளை மத்திய அரசு செய்துவருகிறது. ஒருவரது தனிப்பட்ட தகவலைப் பராமரிப்பதாகக் காரணம் காட்டி, மக்கள் அறிந்துகொள்ள வேண்டிய அடிப் படைத் தகவல்களை மறைப்பது எப்படி நியாயம்? எது அந்தரங்கம், எது அரசியல் என்பதைத் தெளிவுபடுத்தாத வரை டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பாதிக்கும்.
‘Personal is Political’ புத்தகத்தை எழுதியிருக்கிறீர்கள். அந்தரங்கம் எந்த வகையில் அரசியலாகும்?
பெண் மீது இந்தச் சமூகம் நிகழ்த்தும் எந்த ஒரு எல்லைமீறலும் அரசியல்தான். பெண்கள் எல்லா நிலைகளிலும் எளிய இலக்காக இருப்பதன் அரசியல் இது. ஒடுக்கப்படுகிறவர்களின் அரசியலைப் பற்றிப் பேசினால், தலித் பெண்கள் மீதான ஒடுக்குமுறை அதற்குச் சரியான உதாரணமாக இருக்கும். இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக நாம் போராடத்தானே வேண்டும்?
பெண்ணாக இருப்பது உங்கள் அரசியல் செயல்பாடுகளுக்குத் தடையா, பலமா?
அதை ஒருபோதும் தடையாக நினைத்தது இல்லை. போராட்டக் களங்களில் அச்சமின்றி நிற்கிற துணிவை எனக்குத் தமிழ்நாடும் தமிழ்ப் பண்பாடும் கொடுத் திருக்கின்றன. ராஜஸ்தான் கிராமங்களில் நான் பார்த்த பெண்கள் மற்றவர்கள் முன் முகத்தைக்கூடக் காட்ட மாட்டார்கள். சத்தமாகப் பேசவும் தடை உண்டு. இதுபோன்ற எந்தத் தடையும் இல்லாத தமிழ்நாட்டில் இருந்து சென்றிருந்த எனக்கு, அவையெல்லாம் புதிதாகத் தெரிந்தன. கடினமான சூழல்களை எதிர் கொள்ளும் வலிமையையும் இந்தச் சுதந்திரம்தான் எனக்குக் கையளித்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்த தலித் பெண் நோரதி என் நீண்டகாலத் தோழி. முறையான கல்வியோ சரளமான ஆங்கிலப் பேச்சோ அவளுக்கு இல்லை. ஆனால், மிகச் சிறந்த போராளி. இந்தத் துணிவும் போராட்டக் குணமும் பெண்களுக்கு அவசியம். பெண்கள் மூன்று விஷயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். தன் கருத்துகளைத் துணிச்சலோடு சொல்லும் உரிமை, சுயமாக முடிவெடுக்கும் உரிமை, நம் அந்தரங்கம் என்று சொல்லப்படுவனவற்றில் இருக்கிற அரசியல்.
சமத்துவத்துக்கு எதிரான சமகாலப் பிரச்சினை எது?
தேசிய ஆலோசனைக் குழுவில் நான் அங்கம் வகித்தபோது, சமூகத்தின் அனைத்துத் தளங்களிலும் சமத்துவத்தை நிலைநாட்டுவதற்காகக் கொள்கைரீதி யான பணிகளில் ஈடுபட்டோம். தற்போது சக மனிதருக்கு எதிரான சகிப்புத்தன்மை குறைந்துவருவது மிகப்பெரிய அச்சுறுத்தல். இன்றைக்கு அம்பேத்கர், பெரியார், காந்தி அனைவரும் நமக்கு வேண்டும். ஒவ்வொருவருடைய கருத்தும் நமக்கு அவசியம். காந்தியின் பெயரைப் பயன்படுத்துகிறோம்; ஆனால், அவர் முன்மொழிந்த மத நல்லிணக்கத்தைக் கடைப்பிடிக்கிறோமா? அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய சகிப்புத் தன்மை நிறைந்த அரசியலே இன்றைய தேவை.
நன்றி: ‘இந்து தமிழ் திசை’ (31.1.2025)