பிரயாக்ராஜ் கும்பமேளா நடந்து கொண்டி ருக்கிறது. மிகவும் நகைச்சுவை, அதிர்ச்சி, வியப்பு கலந்த செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன.
இதில் ஒரு காட்சிப் பதிவில், மிகப்பெரிய அண்டாவில் கும்பமேளாவிற்கு வருபவர்களுக்கு சமையல் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது, அங்கு வந்த ஒரு காவல் அதிகாரி – மண் கலத்தில் இருந்த சாம்பலை தூக்கி, அதை – தயாராகும் உணவில் கொட்டி கலந்து கொண்டு இருக்கும் காட்சிப் பதிவு சமூக வலைதளத்தில் பரவுகிறது.
இது தொடர்பாக கங்கா நகர் காவல் ஆணையர், சாம்பலைக் கலந்த சோராவன் காவல்நிலைய அதிகாரி பிரிஜேஷ் குமார் திவாரியிடம் விசாரணை நடத்தினார்.
பொது இடத்தில் மக்கள் போக்குவரத்துக்கு இடையூறாக உணவை சமைத்துக் கொண்டி ருந்ததால் சாம்பலை உணவுப் பாத்திரங்களில் போட்டதாக அந்த அதிகாரி சமாதானம் கூறினார். இதனை அடுத்து, அவரை உடனடியாக தற்காலிக பணி யிடை நீக்கம் செய்ய உத்தரவிட்டனர்.
போபாலில் ஒரு சாமியார் தனது சிறுநீரைக் கலந்து பிரசாதமாக கொடுத்த செய்தியும், கருநாடகாவில் தன்னுடைய மலத்தையே காயவைத்து எரித்து சாம்பலாக்கி அதை பிரசாதமாக தன்னைக் காணவரும் மக்களுக்குக் கொடுத்த செய்தியும் ஏற்ெகனவே வந்த நிலையில் – தற்போது பொது மக்களுக்கு மனித சாம்பல் கலந்த உணவைக் கொடுத்த அவலம் நிகழ்ந்துள்ளது.
பக்தியின் பெயரால் மாட்டுமூத்திரத்தைக் குடிக்கலாமாம், மலத்தையே காய வைத்து, எரித்து சாம்பலாக்கிக் கொடுக்கலாமாம். அதையும் பயபக்தி யாக வாங்கி நெற்றியில் பூசிக் கொள்ளலாமாம்.
ஏதோ பாமர மக்கள்தான் இந்த மூடத்தனத் துக்குப் பலியாகின்றனர் என்று சொல்ல முடியாது. உத்தரப்பிரதேச முதலமைச்சரே, தனது கேபினட் அமைச்சர்கள் சகிதமாகச் சென்று கும்பமேளாவில் நீராடி இவற்றிற்கெல்லாம் பச்சைக் கொடி காட்டுகிறார்.
பரீட்சார்த்தமாக இந்த யமுனை நீரை பரிசோ தனைக்கு அனுப்பி, சோதித்துப் பார்த்தால் – எத்தகைய விபரீதமான காரியம் நடந்து கொண்டிருக்கிறது; மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள் என்பது எளிதில் வெளியாகும்.
கரோனா கால கட்டத்தில் இந்தக் கும்பமேளா நடந்திருந்தால் கும்பமேளாவைத் தடை செய் திருப்பார்களா?
சொல்ல முடியாது – இது மத விஷயம், தடை யெல்லாம் போட முடியாது – போடவும் கூடாது என்று தான் வரிந்து கட்டிக் கொண்டு மல்லுக்கு நிற்பார்கள்.
கடவுள் சங்கதி, மதம் சம்பந்தப்பட்டது. அதில் தலையிடக் கூடாது என்ற எண்ணம் இருக்கும் வரை இந்த நாடு கரை தேறாது – முன்னேற்றமும் முட்டுச் சந்தில்தான் போய் நிற்கும்.
இந்த வெட்கக் கேட்டில் இந்திய அரச மைப்புச் சட்டத்தில் (51-A-h) மக்கள் மத்தியில் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது – ஒவ்வொரு குடிமகனின் கடமை என்ற பிரிவும் இருந்து தொலைகிறது! பகுத்தறிவுவாதிகளுக்குத்தான் அதிகம் வேலை இருக்கிறது – சந்திப்போம்!