ஊதிய உயர்வு
தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் கோ–ஆப்டெக்ஸின் 150 விற்பனை நிலையங்கள் செயல்படுகின்றன. தனியார் நிறுவனங்களுக்கு போட்டி அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசின் கோ ஆப்டெக்ஸ் இயங்கி வருகிறது. கோ–ஆப்டெக்ஸ் ஊழியர்களுக்கு உத்தேசமாக 15 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாலாற்றை மாசுபடுத்தினால்
திகார் சிறைதான்
பாலாற்றில் கழிவுகள் கலப்பதை தடுப்பது தொடர்பாக வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்பு குழு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு மேல் முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பரிதிவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு 30.1.2025 அன்று வழங்கிய தீர்ப்பில்:
பாலாற்றை மாசுபடுத்தினால் திகார் சிறைக்கு அனுப்பி வைப்போம் என்று கடுமையாக எச்சரித் துள்ள உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான உரிய இழப்பீட்டை தவறு செய்த தொழிற்சாலைகளிடம் இருந்து வசூலித்து மாநில அரசு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முடங்கிக் கிடக்கும்
ரயில்வே திட்டப் பணிகள்
நடப்பு நிதியாண்டில் (2024–2025) ஒன்றிய அரசு தமிழ்நாடு ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இவற்றில் தமிழ்நாட்டில் 10 புதிய ரயில் பாதை திட்டங்கள், 3 அகல பாதை திட்டங்கள் மற்றும் 9 இரட்டை வழிப்பாதை திட்டங்கள் அடங்கும். இவற்றில் புதிய ரயில் பாதைக்கு ரூ.246 கோடியும், அகலப்பாதை திட்டத்திற்கு ரூ.478 கோடியும், இரட்டை வழிபாதைக்கு ரூ.812 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தமாக நடப்பு நிதியாண்டில் மேற்கண்ட திட்டங்களுக்கு ரூ.1,536 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தமிழ்நாட்டுக்கு அறிவிக்கப்பட்ட பல்வேறு ரயில்வே திட்டங்களில் நடப்பு நிதியாண்டு வரை பல பணிகள் நிலுவையில் உள்ளன.
ஆர்டர்லி முறை ஒழிப்பு
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் சிறைக் காவலர்களை உயர் அதிகாரிகளின் வீட்டு வேலை களுக்கு பயன்படுத்தும் ஆர்டர்லி முறை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
தற்காலிக நீதிபதிகளை நியமிக்க அனுமதி
உயர்நீதிமன்றங்களில் 18 லட்சத்துக்கு அதிகமான குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதைக் கருத்தில் கொண்டு, அந்தந்த நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட பலத்தில் 10 சதவீதத்துக்கு மிகாமல் தற்காலிக நீதிபதிகளை நியமித்துக் கொள்ள உச்சநீதி மன்றம் 30.1.2025 அன்று அனுமதியளித்தது.
ஆதி திராவிடர் மாணவர்களுக்கு
கல்வி உதவித்தொகை
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு உயர் திறன் ஊக்க திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை வழங்குவது தொடர்பாக கடந்த 10.10.2024 அன்று வெளியிடப்பட்ட அரசாணையில் திருத்தம் செய்து அந்தத் துறையின் செயலர் ஜி. லட்சுமிபிரியா தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணையில் தெரிவிக்கப்பதாவது:
உயர்திறன் பயிற்சிக்காக சேர்க்கை பெற்ற பின்னர் அந்தப் பயிற்சிக்கான கட்டண விவரங்களை பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெற்று ஆதி திராவிடர் நல இயக்குநருக்கு ஆணைய வழியில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
பயிற்சி நிறுவனத்தின் சேர்க்கை மற்றும் கட்டண விவரங்கள் இணைய வழியில் பெறப்பட்டவுடன் அந்த விவரங்கள் ஆதி திராவிடர் நல இயக்குநரகத்தில் சரி பார்க்கப்படும். அதன் பிறகு பயிற்சிக்கான கட்ட ணங்கள் மாணவரின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் தகவல் அறிக்கையை உடனே இணையத்தில் பதிவேற்ற வேண்டும்
முதல் தகவல் அறிக்கையை உடனடியாக காவல்துறை இணையதளத்தில் பதிவேற்ற நடவடிக் கைகள் எடுக்க காவல் நிலைய அதிகாரிகளுக்கு உரிய உத்தரவிட வேண்டும் என்று சென்னை காவல் துறை ஆணையருக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கடிதம் எழுதியுள்ளார்.
சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு
தாம்பரத்தில் இருந்து நாகர்கோயில், கொச்சு வேலிக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்களின் சேவை மேலும் 4 மாதங்களுக்கும், தாம்பரம் – கோவை வாராந்திர ரயில் சேவை மேலும் ஒரு மாதத்துக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.