கேள்வி 1: தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் முதலமைச்சராக வேண்டும் என்று சிதம்பரத்தில் நடைபெற்ற சுவாமி சகஜானந்தாவின் 135ஆவது பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருப்பதைப் பார்த்தால், விரைவில் காஞ்சிபுரத்தில் உள்ள சங்கர மடத்திற்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்து விடுவார் என்று எதிர்பார்க்கலாமா?
– கண்மணி, காஞ்சிபுரம்.
பதில்: மில்லியன் டாலர் கேள்வி இது! ஆளுநர் ரவி என்ற ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகரான அவருக்கு நீங்களே ஒரு விரிவான கடிதத்தை எழுதலாம்; அதைவிட அவரது ராஜ்பவன் செக்ரட்ரியேட்டில் ‘தலித்துகள்’ எத்தனை பேரை முக்கிய பொறுப்பில் அவர் நியமனம் செய்துள்ளார் என்பதையும் எழுதிக் கேட்கலாமே!
– – – – –
கேள்வி 2: இந்திய தலைநகர் டில்லியின் எல்லைகளில் நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்ற விவசாயிகள், இரவு – பகல் பாராமல் கடும் பனி, குளிர், மழை, வெய்யில் ஆகியவற்றைக் கூட பொருட்படுத்தாமல் குடும்பத்துடன் மாதக் கணக்கில் சாலைகளில் அமர்ந்து அற வழியில் போராடியவர்களின் கோரிக்கைக்கு சற்றும் செவி சாய்க்காத ஒன்றிய அரசு விவசாயத் தொழிலையும், விவசாயிகளையும் ஊக்குவிக்க முனைப்பு காட்டுமா?
– சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: அய்யய்யோ, நீங்கள் மனுதர்ம சாஸ்திரம் படிக்கவில்லையா? விவசாயம் பாவகரமான தொழில் என்பதால் பெரியோர்களால் நிந்திக்கப்பட்ட தொழில் என்று அதில் கூறியுள்ளபோது, அவர்களை எப்படி ஊக்குவிக்க முடியும் அம்மா? என்பார்கள் ஆர்.எஸ்.எஸ். உணர்வார்களான ஒன்றிய ஆட்சியர்!
– – – – –
கேள்வி 3: உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் சாமியார்கள் என்று சொல்லிக்கொண்டும், வேடமிட்டுக்கொண்டும் ரவுடித்தனம் செய்த கயவர்களைக் குறித்து எந்த ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் கண்டிக்க முன்வராதது ஏன்?
– அ.ஆசைத்தம்பி, அய்தராபாத்.
பதில்: அங்கே ‘ஸநாதனம் கர்வ்’ ஆட்சியல்லவா நடைபெறுகிறது, தெரியாதா நோக்கு?
– – – – –
கேள்வி 4: ஸநாதனம் குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய பேச்சு சர்ச்சையானது தொடர்பாக இன எதிரிகளால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மூன்று வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டதை ஸநாதனவாதிகளுக்கு விழுந்த சம்மட்டி அடி என்று கருதலாமா?
– அங்காளம்மாள், திருவொற்றியூர்.
பதில்: அது தேர்தல் துருப்புச் சீட்டு என்பது (காவி) அவர்களுக்கே நன்கு தெரியுமே! மிஞ்சியது அனுதாபம் மட்டுமே!
– – – – –
கேள்வி 5: தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், பிற்படுத்தப்பட்டோர் மீண்டும் அடிமைகள் ஆக்கப்படுவதை எதிர்த்துக் குரல் கொடுத்தால் சிறையில் அடைக்கப்படுகிறார்கள் என்று ராகுல்காந்தி கூறியிருப்பதை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களா?
– ம.கண்ணன், மேல்மருவத்தூர்.
பதில்: அப்படி நடப்பது ஒரு வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சொரணையையும், சூட்டையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் என்றும் கூட நம்பலாமே!
– – – – –
கேள்வி 6: தந்தை பெரியார் குறித்து அவதூறு பரப்பி வரும் பைத்தியத்திற்கு பாஜக – ஹிந்துத்துவா அமைப்புகளைத் தவிர கட்சி, இயக்கம், அமைப்பு, ஜாதி, மதம் கடந்து கண்டனம் தெரிவித்து பொது மேடைகளிலும் பேட்டிகளிலும், சமூக வலைத்தளங்களிலும் அய்யாவின் கொள்கை, தொண்டு, பணியை புகழ்ந்து தலைமுறை வித்தியாசம் இன்றி பேசியும் பரப்பப்பட்டு வருவது குறித்து ?.
மன்னை சித்து, மன்னார்குடி – 1.
பதில்: பெரியார் மண்ணுக்கு அவர்மீது வீசப்படும் ஆசூசையான அசிங்கங்கள் நல்ல உரங்களாகி பெரியார் கொள்கை விளைச்சல் அமோகமாகப் பெருகவே செய்யும்! பைத்தியங்களை வைக்க வேண்டிய இடத்தில் வைப்பார்கள் மக்கள்!
– – – – –
கேள்வி 7: “பாவத்தைப் போக்க” என்று கும்பமேளாவிற்கு வந்து – அப்பாவி மக்கள் ஆயிரக்கணக்கில் பலியாவதற்கும், காயமடைவதற்கும் உ.பி. சாமியார் அரசின் நிர்வாகத் திறமையின்மைதானே காரணம்?
– க.காளிதாசன், காஞ்சி
பதில்: அதைப் பற்றி எதிர்க்கட்சியாளரும், நடுநிலையாளர்களும் கூறுவது ஒருபுறமிருந்தாலும், சங்கராச்சாரியார்களே பகிரங்கமாக கண்டித்து, குற்றப்பத்திரிகை வாசித்துள்ளார்களே! அது போதாதா?
– – – – –
கேள்வி 8: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கெதிரான ஒன்றிய அரசின் எந்தத் திட்டங்களையும் கடுமையாக எதிர்ப்போம் என்ற ‘திராவிட மாடல்’ முதலமைச்சரின் உறுதி குறித்து?
– அ.வேலுச்சாமி, மதுரை
பதில்: இந்த முதுகெலும்புள்ள முதல் அமைச்சர்கள் பலரும் வரவேண்டும்!
பதவிக்கு முக்கியத்துவம் தராமல் கொள்கைக்கே முன்னுரிமை என்பதாகக் கொண்டு இயங்குவதால், இந்த துணிச்சல் நம் முதல் அமைச்சருக்கு உள்ளது.
– – – – –
கேள்வி 9: தமிழ்நாடு அரசின் பாடத் திட்டத்தின் தரம் குறித்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் விமர்சனத்திற்குக் காரணம் என்ன?
– வெ.செந்தாமரை, வேலூர்
பதில்: “பிடிக்காத மனைவிக்குக் கால் பட்டால் குற்றம் – கை பட்டால் குற்றம்” என்ற கிராமியப் பழமொழிதான் நமக்கு நினைவுக்கு வருகிறது! இவர் என்ன பெரிய கல்வி நிபுணரா? காமலைக் கண்ணன், அவ்வளவுதான்!
– – – – –
கேள்வி 10: கங்கையில் நீராடினால் பாவம் தொலைந்துவிடும் என்று நம்பும் வடமாநில மக்களிடம் தந்தை பெரியாரின் கருத்துகளைக் கொண்டு சேர்ப்பதில் தங்கள் திட்டம் என்ன?
– அ.சங்கத்தமிழன், நுங்கம்பாக்கம்
பதில்: சிதம்பரத்தில் பிப். 15இல் கூடும் கழகப் பொதுக்குழு செய்தியில் உங்கள் கேள்விக்கு விடை கிடைக்க வாய்ப்பு உண்டு!