சுமன்கவி
மன்னராட்சியை ஒழித்து மக்களாட்சியை உலகெங்கிலும் மலரச்செய்வதற்கான துவக்கப்புள்ளியாக இருந்தது பிரெஞ்சுப் புரட்சி. அதில் பிரதானமாக ஒலித்த முழக்கங்கள் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம். இந்த மூன்று முழக்கங்களில் மூன்றாவதாக இருக்கும் சகோதரத்துவத்திற்கு கூடுதல் மதிப்பு உண்டு. இது இன பேதமற்று, மொழி பேதமற்று, வர்க்க பேதங்களற்று மக்களை இணைக்கிற ஒரு உறவு. அந்த சகோதரத்துவத்தை போற்றுகிற நாள்தான் உலக சகோதரத்துவ தினம். இது 2021 முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் கடைப்பிடிக்கப்படும் இந்நாளில் நாம் சகோதரத்துவத்தோடு எவ்வாறு திகழ்கிறோம் என்பதை பரிசீலிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்.
வேற்றுமையில் ஒற்றுமை நிறைந்த நாடு இந்தியா; உலகிலேயே மாபெரும் ஜனநாயக நாடு இந்தியா என்றெல்லாம் பெருமிதத்தோடு சொல்லிக் கொள்கிறோம்.
அந்த பெருமிதத்திற்கு பெரிய குந்தகம் ஏதும் கடந்த 2014க்கு முன்பு வரை நேர்ந்ததில்லை. ஆனால் ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியமைந்த பின்னர் இந்தியாவின் பன்முகத்தன்மையும், மக்களின் சகோதர உணர்வும் கேள்விக்குள்ளாகி இருக்கிறது.
சக மனிதனை மதத்ததின் பெயராலும், ஜாதியின் பெயராலும் பிரிக்கின்ற சதியை தொடர்ந்து திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மோடி அரசு. 2019 ஆம் ஆண்டு CAA சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம், இஸ்லாமிய சிறுபான்மையினரின் இருப்பை கேள்விக்குறியாக்கினர். விஷ்வ கர்மா யோஜனா என்கிற குலத்தொழிலுக்கு மக்களை இழுத்துச் செல்கிற திட்டத்தை 2023ல் அறிமுகம் செய்ததன் மூலம் ஜாதிய படிநிலையை பாதுகாக்க வழி செய்தனர். இவ்வாறு மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் மக்களை பிரிப்பதற்கான திட்டத்தை அரசே முன்நின்று நடத்துகிறது என்றால் நாட்டில் சகோதரத்துவம் மக்களிடையே எவ்வாறு நிலவும்?
ஒருவரை ஒருவர் பகை பாராட்டுவதற்கும், ஒடுக்குவதற்கும் லைசென்ஸ் அரசே கொடுக்கிறது என்றால் தனி மனிதர்கள் இந்த சதிவலையில் இருந்து எவ்வாறு தப்பிச்செல்ல இயலும். படிப்பிலும் பகுத்தறிவிலும் முன்னேறிய தென்மாநிலங்களே பாஜகவின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்க, எல்லா வகையிலும் பின்தங்கி இருக்கும் வடமாநில மக்கள் என்ன கதியாவார்கள்..?
அரசின் சட்டதிட்டங்கள் மட்டுமல்ல, பொது வெளியில் பரப்பப்படுகிற பொய் வதந்திகளையும் மூலதனமாகக் கொண்டே இயங்குகின்றது இந்துத்துவக் கூட்டம்.
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுகிறார்கள் என்கிற ஒரு போலியான செய்தியை 2023ல் பீகார் மாநிலத்தில் பரப்பியது பாஜக இந்துத்துவ கும்பல். 12 பீகார் மாநிலத்தவர்கள் தமிழ்நாட்டில் தூக்கிலிடப்பட்டனர் என்றும், 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் வதந்தி பரப்பினர். இதனால் பீகார், மற்றும் தமிழ்நாடு அரசுகள் இடையேயும், மக்களிடையேயும் பெரும் குழப்பத்தையும் பதற்றத்தையும் விளைவித்தனர். இவர்களின் சதிக்கு டைனிக் பாஸ்கர் என்கிற ஹிந்தியில் வெளியாகும் முதன்மையான நாளேடு உதவி புரிந்தது. “ஹிந்தியில் பேசியதற்காக பீகார் தொழிலாளர்களை தமிழ்நாட்டு தாலிபான்கள் தண்டிக்கின்றனர்” என்று பதிவிட்டது.
தமிழர்களை தாலிபான்கள் என்று தனது வன்மத்தை கொட்டியது மட்டுமின்றி மாநில உறவுகளையே சிதைப்பதற்கு சதி செய்தது இக்கூட்டம்.
மனிதர்களை குழுக்களாக பிரித்து அவர்களுக்கு இடையில் சண்டை மூட்டி விடுவதனால் மட்டுமே தங்களது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொண்டிருக்கும் ஒரு சமூக விரோத கும்பல்தான் இந்த இந்துத்துவ கூட்டம்.
1948ல் சட்ட முன்வரைவை அளித்த அம்பேத்கர், அதில் சகோதரத்துவத்திற்கு கூடுதல் முக்கித்துவத்தை அளித்தார். நாடு பிரிவினையை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் முன் எப்போதும் இல்லாத வகையில் இன்று சகோதரத்துவத்தின் தேவை கூடுதலாக உள்ளது என்று அவர் அழுத்தமாக குறிப்பிட்டார்.
சகோதரத்துவத்தைக் அவர் வலியுறுத்தி சுமார் 75 ஆண்டுகள் ஆகியும், அதற்கான தேவையும், முக்கியத்துவமும் கூடுதலாகத்தான் ஆகியிருக்கிறது. பிரிவினை எண்ணத்தை அம்பேத்கர் வகுத்த சட்டங்களின் ஊடாகவே நடைமுறைப் படுத்துகிற கொடிய காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். “முன் எப்போதையும் விட” என்று அம்பேத்கர் சொல்லிய சொற்கள் இன்னும் வலுப்பெற்றிருக்கின்றன. நாம் சகோதரத்துவத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். சகோதர உணர்வே நம்மை இணைக்கும், அதுவே நம்மைப்பிரிக்கும் இந்துத்துவ பாசிசத்திற்கு சவக்குழியை தோண்டி புதைக்கும்.
ஒழியட்டும் பாசிசம்…!
ஓங்கட்டும் சகோதரத்துவம்..!