வி.சி.வில்வம்
இயக்க மகளிர் சந்திப்பின் 50ஆவது நேர்காணலில், அருமையான சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் மருத்துவர் அருமைக்கண்ணு அவர்கள்! சவால் நிறைந்த மயக்கவியல் துறையில், 38 ஆண்டுகளை நிறைவு செய்திருக் கிறார்! எந்த ஒரு கருத்தையும் மனோதத்துவ ரீதியில் (Psychology) பேசுகிறார்! இந்த வாரம் அவரைச் சந்திப்போம்!
டாக்டர் வணக்கம்! பொது மருத்துவம், குழந்தைகள் நலன், மகளிர் நலம் போன்ற துறைகளில்தான் பெண்கள் அதிகம் இருப்பார்கள். நீங்கள் வித்தியாசமாக மயக்கவியல் துறையில் (Anesthesiology) இருக்கிறீர்களே?
ஆமாம்! நான் விரும்பிப் படித்த துறை அது! நான் படித்த காலத்தில், அந்தத் துறையில் ஆண்களே அதிகம் இருந்தார்கள். ஆனால் இன்றைக்கு ஆண்களுக்கு நிகராக மயக்கவியல் துறையில் பெண்கள் கோலோச்சி வருகிறார்கள். நான் 1979இல் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படிப்பைத் தொடங்கினேன். “பிள்ளைகளுக்குச் சிறப்பான கல்வியைக் கொடுக்க வேண்டும்”, என எங்கள் பெற்றோர் நினைத்தார்கள். அந்தச் சிந்தனைகளுக்குக் காரணம் தந்தை பெரியார். நான் மருத்துவம் முடித்தவுடன் உரத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 8 ஆண்டுகள் பணி செய்தேன். பிறகு தஞ்சை மருத்துவக் கல்லூரியில் 10 ஆண்டுகள், மன்னார்குடி அரசு மருத்துவமனையில் ஒன்றரை ஆண்டுகள், பாபநாசம் அரசு மருத்துவனையில் தலைமை மருத்துவர் என 2017 வரை பணியாற்றி, ஓய்வு பெற்றேன்.
மயக்கவியல் என்பது மிக முக்கியமான துறை. எங்களுக்கு நோயாளிகளுடன் நேரடி அறிமுகம் இருக்காது. மருத்துவர்களுடன் மட்டுமே தொடர்பில் இருப்போம். பொது மருத்துவம், மூளை, இருதயம், நுரையீரல், எலும்பு என எந்தச் அறுவைச் சிகிச்சையாக இருந்தாலும் எங்கள் பணி முக்கியமானது. நாங்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்.
சக பெண் மருத்துவர்கள் குறித்து,
தங்கள் பார்வை எப்படி இருக்கிறது?
நான் சற்று ஆழமான நட்பைப் பேணுவேன். மருத்துவத் துறையில் பெண்கள் நிறைந்து காணப்படுகிறார்கள். சுதந்திர உணர்ச்சியோடு இருக்கிறார்கள். மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள். தங்கள் பெற்றோர்களும் “பெரியாரிய உணர்வு கொண்டவர்கள்தான்”, எனப் பல மருத்துவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அதேநேரம் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட இனத்தில், அதிலும் பெண்கள் மருத்துவராக வருவதற்குப் பெரியாரின் பங்களிப்பு எத்தகையது எனத் தொடர்ந்து நான் பேசுவதுண்டு.
அதேநேரம் வளரும் இளம் பெண்கள் சுதந்திர எண்ணத்தோடும், ஆழ்ந்த சிந்தனையிலும் இருக்கிறார்கள். சக மருத்துவக் குடும்பங்களில் கூட சில பெண்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புவதில்லை. அதுகுறித்தும் நிறைய யோசிக்க வேண்டியுள்ளது.
கொஞ்சம் விவரமாகக் கூறுங்களேன்?
பெண் கல்வி குறித்தும், பெண்களுக்கான வேலை வாய்ப்பிற்காகவும் போராடி வெற்றி பெற்றவர் தந்தை பெரியார். அவர் வாழ்ந்த காலத்தை விட, பெண்களின் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்துவிட்டது. நானே 38 ஆண்டு கால மருத்துவப் பணியை முடித்திருக்கிறேன். வெளியில் செல்வாக்கு இருக்கலாம்; புகழ் கிடைக்கலாம்; பணம் பெருகலாம்! ஆனால் எல்லாவற்றையும் முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்தால் நேரடியாக அடுப்படிக்குத் தான் போக வேண்டியிருக்கிறது.
குடும்பப் பராமரிப்பில் இருந்து பெண்கள் மீள முடியவில்லை. நம் வாழ்க்கைதான் இப்படி இருக்கிறது என நினைத்தால், அதற்கடுத்து நம் பிள்ளைகளின் பிள்ளைகளையும் (பெயரன்-பெயர்த்திகள்) நாமே பார்த்துக் கொள்ளும் சூழல் வருகிறது. இவை குறித்தெல்லாம் நாம் பேசினாலும் தீர்வு கிடைக்கவில்லை. அதனால்தான் சில இளம் தலைமுறையினர் திருமணம் குறித்து யோசிக்கிறார்கள்.
இதற்குத் தீர்வு இருக்கிறதா அல்லது தீர்வை நடைமுறைப்படுத்த இயலவில்லையா?
நல்ல கேள்வி! மகளிர் உரிமைகள் குறித்துப் பேசிய பெரியார், அதற்கான தீர்வையும் தந்துவிட்டுப் போனார். அதாவது பெண்கள் படித்து வேலைக்குப் போனால், குடும்பச் சிரமங்கள் அதிகரிக்கும் என்பதையும் அறிந்தே இருந்தார். அதனால்தான் விரும்பினால் மட்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றார், குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போடுங்கள் என்றார், குழந்தைகள் இல்லையென்றாலும் பிரச்சினை இல்லை என்றார், சமையல் வேலையைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்றார், பொது சமையல் கூடம் வேண்டும் என்றார்.
ஆனால், பெரும்பாலும் இவைகள் நடைமுறைக்கு வரவில்லை. எனக்குத் தெரிந்த குடும்பங்களில் பெரும் பதவி வகித்த சில மகளிர் வேலையை விட்டுவிட்டார்கள். காரணம் குடும்பப் பராமரிப்பின் அழுத்தம். இதுபோன்ற காரணத்தை முன்னிறுத்தியும் திருமணம் வேண்டாம் எனக் கருதுகிறார்கள். கூட்டுக் குடும்பம் சுருங்கி வருவதாலும் மனித வளம் சிக்கலாகிறது.
இதுகுறித்து நீங்கள் மேலும் கருதுவது என்ன?
ஒவ்வொருவருக்கும் ஒரு பிரச்சினை இருக்கிறது. எனவே இதைப் பொதுவாக அணுக முடியாது. ஓரளவு தீர்வு தெரிந்த நமக்கே, அதைச் சாத்தியமாக்கும் சூழல் கிடைக்கவில்லை. அதனாலே பிரச்சினையில் மாட்டிக் கொள்ள வேண்டாம் எனச் சிலர் திருமணத்தைத் தவிர்க்கிறார்கள். வேறு சிலரோ குடும்பத்தைத் தவிர்க்க முடியாமல், வருமானம் தரும் வேலையை விட்டுவிடுகிறார்கள். மேலும் சிலர் ஜாதகம், மூடநம்பிக்கை என அலைந்து, முடிவு கிடைக்காமல் இருக்கிறார்கள்.
நான் பெரியார் வாழ்க்கை வரலாற்றை அய்ந்து, ஆறு முறை படித்திருப்பேன். பொதுவாகச் சில நூல்களை நான் திரும்பத் திரும்ப வாசிப்பதுண்டு. காரணம் எனக்கான தெளிவு பெரியாரின் எழுத்துகளில் கிடைக்கிறது. சக மருத்துவர்களுக்கும் இதை நான் பரிந்துரை செய்கிறேன். என்னால் சில மருத்துவர்கள் நூல்களும், விடுதலையும் படிக்கும் நிலைக்கு வந்திருக்கிறார்கள்.
ஒரு அதிர்ச்சியான செய்தியை இங்கே நான் பதிவு செய்ய வேண்டும். என்னுடைய மருத்துவ நண்பர், தம் பெண்ணுக்கு ஜாதகம் பார்க்கத் துணைக்கு அழைத்தார். ஜாதகம் பார்ப்பவர் ஏதேதோ அடித்துவிட்டார். நான் அமைதியாக இருந்தேன். பொதுவாக எனக்கு “பொட்டு” வைக்கும் பழக்கம் கிடையாது. இதைக் கவனித்த அந்த ஜாதகக்காரர், “மேடம், வீட்டுல சார்…”, என இழுத்தார். நான் கொஞ்சமும் யோசிக்காமல், “சார், வீட்டுல மேடம்…”, என இழுத்தேன். முகமே சுருங்கிவிட்டது அவருக்கு! இப்படி பல நடைமுறைச் சிக்கல்களை மகளிர் சந்திக்க வேண்டியுள்ளது.
பணிச்சுமை நிறைந்த மருத்துவப் பணியிலும், உங்களின் ஆழமான சிந்தனை வியக்க வைக்கிறதே?
சிறு வயதில் இருந்தே பெரியார் கொள்கையால் வளர்க்கப்பட்டவர்கள் நாங்கள்! அப்பா தர்மராஜ், அம்மா மணியம்மாள். எங்கள் வீட்டில் நடந்த 4 சுயமரியாதைத் திருமணங்களில் ஒன்றைப் பெரியாரும், மூன்றை ஆசிரியர் அய்யாவும் நடத்தித் தந்தார்கள். அந்தளவிற்கு இயக்கப் பாரம்பரியம். எனது வயது 65 ஆகிறது.
இணையர் பெயர் சண்முகநாதன். எங்களுக்கு ஒரே மகள் நீதிசிந்தியா. மருத்துவராக இருக்கிறார். மருமகன் அண்ணாமலை, பொறியாளர். இவர்களின் திருமணத்தையும் ஆசிரியரே நடத்திக் கொடுத்தார்கள்.
முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட எழுத முடியாத அளவிற்கு, பெரியாரின் எழுத்துகள் இருக்கின்றன. அதுவும் இத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியிருப்பது கூடுதல் வியப்பு! ஒவ்வொன்றிற்கும் அவர் இடும் தலைப்பு, அதற்குத் தரும் விளக்கம் போன்றவை அற்புதமாக இருக்கும். உலகத்தின் பல நாடுகளுக்கும் சென்ற பெரியார், அந்த அனுபவங்களை இந்நாட்டு மக்களுக்குப் பிரச்சார முறையில் எடுத்துரைத்தார். அதையும் பலமுறை நான் படித்திருக்கிறேன்.
அதேபோல ஆசிரியர் அய்யாவின் வாழ்வியல் சிந்தனைகள் மிகவும் பிடிக்கும்! அவர் எழுதாத துறைகளே இல்லை! அதிலும் மருத்துவம் குறித்த அவரின் எழுத்துகள் அழகானவை! தவிர ஏதாவது பொதுப் பிரச்சினை அல்லது குழப்பமான சமூகச் சூழல் நிலவும்போது, அதுகுறித்து எப்படி சிந்திப்பது, என்ன முடிவெடுப்பது என்பதை விடுதலையில் ஆசிரியர் எழுத்துகளில் அறியலாம்!
ஆசிரியர் அவர்களை மிகச் சிறந்த சிந்தனையாளராக நான் கருதுகிறேன். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமைப் பெற்றவர். ஒரே செய்தியைப் பலமுறை ஆசிரியர் பேசுவார். அதாவது அடிக்கடி ஒரு விசயம் குறித்துப் பேசுவது. இதைப் பெரிய விசயமாக நான் பார்க்கிறேன். “பெரியாரை நான் சுவாசிக்கிறேன்”, என ஆசிரியர் கூறுவார் அல்லவா! அதனால் வரக்கூடிய சிறப்பு இது! அயற்சியோ, சோர்வோ இல்லாமல் மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் சொல்லும் மகத்துவம் இது!
வசீகரிக்கும் வார்த்தைகளால் கருத்துகளை வெளிப்படுத்தும் நீங்கள், மேடையில் பேசி இருக்கிறீர்களா?
பெரியளவிற்கு இல்லை. தஞ்சாவூரில் நடைபெறும் “பெரியார் பேசுகிறார்” நிகழ்ச்சியில் அவ்வப்போது கலந்து கொள்வேன். அங்கு பேசியும் இருக்கிறேன். அதேபோல திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் ஒருமுறை பேசியிருக்கிறேன். எனது பெயரே கூட மேடையில் முடிவானதாகச் சொல்வார்கள்.
அதாவது எனக்குப் பெயர் வைக்கச் சொல்லி, பெரியாரிடம் கொடுத்துள்ளார்கள். குழந்தையைப் பெற்ற அவர் “அருமை கண்ணு” எனக் கொஞ்சி இருக்கிறார். அதுவே “அருமைக்கண்ணு” ஆனதாகச் சொல்வார்கள்.
அம்மா ஊர் சாலியமங்கலம், அப்பா ஊர் மன்னார்குடி. மொத்தம் சேர்த்து 10 – க்கும் மேற்பட்ட குடும்பங்கள், அதில் 50, 60 உறுப்பினர்கள் இருப்போம். அனைவருமே பெரியார் கொள்கையில் தான் இருக்கிறோம்.
சிறு வயது முதலே முற்போக்கு வாழ்க்கைதான் எங்களுக்கு! பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில் மணலில் அமர்ந்து நாள் முழுக்கக் கூட்டம் கேட்டுள்ளேன். பெரியார் பேசும்போது, “ஒரு வார்த்தையில் ஆரம்பித்து, நீண்ட வரிகள் பேசியே முடிப்பார்”, எனத் தம் நுணுக்கமான கண்ணோட்டத்தை நம்மோடு பகிர்ந்து கொண்டார் மருத்துவர் அருமைக்கண்ணு அவர்கள்!