சரவணா
மவுனி அமாவாசை அதாவது தை மாதம் வரும் நிலவில்லா நாளில் நள்ளிரவு 12 மணியில் இருந்து காலை 8:30 மணிக்குள் 3 கோடி பேர் குளித்திருந்ததாக உத்தரப் பிரதேச அரசு தெரிவித்தது.
இந்த 3 கோடி பேரை எண்ணி விட்ட அரசுக்கு கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குறித்த எண்ணிக்கையை வெளியிட 17 மணி நேரம் தேவைப்பட்டது. முன்னணி நாளிதழ்கள் அனைத்தும் இந்த 30 பேர் மரணத்தை சாலையைக் கடக்கும் நண்டுகள் சக்கரத்தில் அடிபட்டு இறந்துபோன செய்தி போல ஒரு ஓரத்தில் எழுதியுள்ளன. இறந்தவர்கள் அனைவருமே ஏழைகள். ஏழைகள் இறந்தால் அவர்களது எண்ணிக்கை கூட மறைக்கப்பட்டு விடும்.
உத்தரப் பிரதேசத்தின் முன்னணி நாளிதழான தைனிக் ஜாக்ரனின் முதல் பக்கத்தில் மரணம் குறித்த செய்திகள் சுத்தமாக துடைக்கப்பட்டிருந்தது. தைனிக் ஜாகரனுக்கு தனியார் அமைப்பு கொடுத்த புள்ளிவிபரப்படி 55 கோடிக்கும் அதிகமான வாசகர்கள் உள்ளனர். இதன் 37 பதிப்புகள் வெளியாகின்றன, 11 மாநிலங்களை இது ரிப்போர்ட் செய்கிறது. அப்படியென்றால், 55 கோடி வாசகர்களுக்கு கும்பத்தில் இறந்தவர்களின் செய்தி ஏன் முன்னுரிமை பெறவில்லை?
மவுனி அமாவாசை நாளில் கும்பத்தில் ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர். ஆனால், முன்னணி செய்தி நிறுவனங்கள் இந்த விபத்து செய்தியை மறைத்துவிட்டன. இது ஒரு விபத்து மட்டுமல்ல – மக்கள் விபத்திலா இறந்தார்கள்? ஆனால், என்ன கொடுமை என்றால் அந்த நாளிதழ் தலைப்பு: “மௌனி அமாவாசையில் சங்கமத்தில் குளித்த ஜனசாகர் (மக்கள் கடல்)”.
30 பேர் இறந்தது மற்றும் 60 பேர் காயமடைந்தது என்ற செய்தி இரண்டாவது பக்கத்தில் கூட செய்தியாக இல்லை! செய்தி ஆறாவது பக்கத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. “இந்த விபத்தைக் குறித்து சாமியார் முதலமைச்சர் ஆதித்தியநாத் கண்ணீர் விட்டார்” இதுதான் தலைப்பு. கும்பமேளா மரணத்தை மறைப்பது மிகப்பெரும் துரோகம் ஆகும். இந்த விவகாரத்தில் நீதி விசாரணை தேவை – இதில் நாளிதழ்களும் விசாரணை வளையத்திற்குள் வரவேண்டும்.
பழி போடுகிறார்கள்
நவம்பர் 2016இல் கான்பூரில் ரயில் விபத்து நடந்தது. அதையும் பிரதமர் பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தினார், ஆனால் உடனடியாக உத்தரப்பிரதேச ரயில்வே காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை வெளியிட வேண்டியிருந்தது – இதில் பயங்கரவாத சதிக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று. விளக்கம் அளித்தார்.
ஜனவரி 2017இல் ஆந்திரப்பிரதேசத்தில் ஹீராகண்ட் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது, 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஊடகங்களில் இந்த சம்பவத்தில் பாகிஸ்தானின் தீவிரவாத அமைப்பு இருப்பதாக பாஜக பெருந்தலைவர்கள் கூறினர். உடனடியாக என்அய்ஏ அப்படி எதுவும் இல்லை என்று கூற வேண்டியிருந்தது.
02.06.2023 ஆம் ஆண்டு ஒடிசாவின் பாலேஷ்வரில் நடந்த ரயில் விபத்தில் இஸ்லாமியர் பெய்ரை வைத்து கதைகள் உருவாக்கப்பட்டன – ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் பொறியாளர் முஸ்லிம்கள் என்றும், அவர்கள் குற்றவாளிகளாக்கப்படுகிறார்கள் என்றும். ஆனால் அப்படி எதுவும் இல்லை, மத ரீதியான கோணம் எதுவும் இல்லை என்று ரயில்வே நிர்வாகம் கூறியது
விபத்து நடந்த இடத்திற்கு அருகில் உள்ள இஸ்கான் கோவிலை மசூதி என்று ஊடகங்கள் கூறியதோடு பல அபத்தமான கதைகள் சொல்லப்பட்டன, அனைத்தும் பொய் என நிரூபிக்கப்பட்டன. நல்லவேளை கும்பமேளாவில் இஸ்லாமியர்களுக்கு கடைகள் கூட வைக்க அனுமதி அளிக்கவில்லை. அப்படி இருந்தால் பழிமுழுவதும் இஸ்லாமியர்களின் கடைகள் மீதுதான் சென்றிருக்கும்.
டெலிகிராப் செய்தித்தாள் தனது முதல் பக்கத்தில் நேரில் கண்டவர்களின் வாக்குமூலங்களை வெளியிட்டுள்ளது. நாலந்தாவைச் சேர்ந்த ரமேஷ் குமார் கூறியதாவது: “காவல்துறை இரவில் அனைத்து பாண்டூன் பாலங்களையும் மூடிவிட்டது. பக்தர்களிடம் சங்கமத்திற்கு செல்ல வேண்டாம் என்று கூறினர். நான் அகாடா பாதையில் இருந்தேன். இரவு 4 மணிக்கு காவல்துறை தடியடி மூலம் கூட்டத்தை பின்னோக்கி தள்ள ஆரம்பித்தது.
அதுவரை யாரும் தடுப்புகளை தாண்டவில்லை. ஆனால் காவல்துறை தடியடி நடத்ததொடங்கியதும் மக்கள் எல்லா திசைகளிலும் ஓடத் தொடங்கினர். சிலர் தடுப்புகளை அகற்றினர். குழந்தைகளும் பெண்களும் தரையில் விழுந்து, பதற்றமடைந்த பக்தர்களின் கால்களுக்கு அடியில் சிக்கினர். சாலையின் இருபுறமும் தூங்கிக் கொண்டிருந்தவர்களும் ஓடியவர்களின் கால்களுக்கு அடியில் சிக்கினர்.” ரமேஷ் குமார் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. தேவரியாவைச் சேர்ந்த… மீனா தேவியின் வாக்குமூலம் பதிவாகியுள்ளது. அவர் தனது தாயைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இறுதியாக அவரது இறந்துபோன தாயாரின் உடலை ஆம்புலன்ஸில் ஏற்றினார்கள் என்றார்
அவரும் மற்றவர்களும் சங்கமத்திலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தபோது, காவல்துறை பாலத்தில் ஏறுமாறு கூறியது. இதனால் பாதை 30 கிலோமீட்டர் நீளமாகிவிட்டது.
அரசு மக்களிடம் மனிதாபிமானமற்ற முறையில் நடந்துகொள்கிறது. முக்கிய பிரமுகர்களுக்கான பாதையாக நதிக்கு அருகே கார் செல்லும் வரை வசதி செய்யப்பட்டது ஆனால் சாதாரண மக்களோ 10-10 கிலோமீட்டர், 15-15 கிலோமீட்டர் நடக்க வேண்டியிருந்தது.
கும்பமேளா குறித்த காட்சி குடியரசுதின அலங்கார ஊர்வலத்தில் தலைநகர் டில்லியில் வலம் வந்தது. கும்பமேளாவிற்காக உத்தரப் பிரதேச அரசு செலவழித்த தொகை 7500 கோடிகள் என்று அம்மாநில அரசு கூறுகிறது. இதில் ஒன்றிய அரசின் பங்களிப்பு வேறு உள்ளது. ரீவா என்ற நகரத்தில் இருந்து பிரயாக்ராஜ் செல்லும் பாதையில் 50 கிலோமீட்டர் போக்குவரத்து நெரிசல் சில கிலோமிட்டர் நகருவதற்கு 2 நாள் ஆகிறது.
காசி, அயோத்தி மற்றும் சித்ரகூட் நகரங்களில் இருந்து பிரயாக்ராஜ் வரும் பாதையில் 3 லட்சம் வாகனங்கள் சிக்கியுள்ளன. அயோத்தி மற்றும் வாரணாசி நகரங்களில் அனைத்து வகை வாகன போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.
வாரணாசி மண்டல ஆணையரின் அறிக்கையில், நகரத்தின் 20 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, வயல், காலி இடங்களிலும் மக்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அசாமைச் சேர்ந்த வணிகர் நீதிபால் என்பவரும் கும்பமேளாவிற்கு வந்துள்ளார். உடல் நலம் சரியில்லமால் இறந்துவிட்டார். இவர் சாதாரண நபர் அல்ல அசாம் மாநிலத்தில் பெரும் பணக்காரர்களில் ஒருவர்.
இவரது உடலை விமானம் மூலம் கவுகாத்தி கொண்டு செல்ல குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால் உ.பி. நிர்வாகம் இதற்கு அனுமதி அளிக்கவில்லை.
ஆம்புலன்ஸ் மூலம் 1500 கிலோமீட்டர் தூரம் செல்லவேண்டும் உடலை உடனடியாக அங்கிருந்து கொண்டு செல்ல முடியாத நிலை, சாலை எங்கும் நெரிசல் விளைவு குடும்பத்தினர் அவரது உடலை நதிக்கரையிலேயே எரிக்கும் கொடுமை நிகழ்ந்துள்ளது. இது த டெலிகிராப் ஆங்கில இதழில் வந்த செய்தி ஆகும். உயிரிழந்தவர்கள் மேற்குவங்கம், பீகார், கருனாடகா, குஜராத்திகள் என்று அந்த அந்த மாநில அரசுகள் கூறிவிட்டன. மேற்குவங்க அரசு தங்களது மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 15 பேர் மரணம் என்று அறிக்கை விடுத்துவிட்டது
மரணங்களுக்கு யார் பதில் கூறுவார்கள்
1. ஒரு அதிகாரி முக்கிய பிரமுகருக்கானது என்று பொதுமக்கள் பயன்படுத்தும் பாலத்தை மூடிவிட்டார். இதனால் கூட்டம் சங்கம் நோக்கி ஒட்டு மொத்தமாக நடக்கத் துவங்கிவிட்டது. இதனால் கூட்டத்தைக் கட்டுப்படுத்த எந்த ஒரு ஏற்பாடும் செய்யவில்லை. குறைந்த பட்சம் நதிக்கரை ஓரத்தில் ஆங்காங்கே அமர்ந்தும் தூங்கிக்கொண்டு இருந்த நூற்றுக்கணகான மக்களை எச்சரித்தாவது எழுப்பி இருக்கவேண்டாமா?
விபத்து நடந்துவிட்டது. இது குறித்து விரிவாக ஊடகங்கள் வெளிப்படுத்தினால் தானே அடுத்த முறை இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளமுடியும் அமைதியாக இருந்துவிட்டால். என்ன ஆகும் இறந்தவர்களுக்கான இழப்பீடுகள் கூட எந்த அளவு கிடைக்கும் என்று தெரியவில்லை. காரணம், 2024 ஜூலையில் ஹாத்ரஸில் போலே பாபா என்ற சாமியாரின் கூட்டத்தில் கூட்டச்சிதறல் ஏற்பட்டது. 121 பேர் இறந்தனர்.
இதுவரை எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை என்று மரணமடைந்தவர்களின் உறவுகள் புலம்புகின்றனர். அங்காவது எண்ணிக்கை கிடைத்தது, ஆகையால் அவர்களுக்கு கொடுக்கவேண்டும் – ஹத்ரஸ் மரணத்திற்கு யாருக்காவது தண்டனை கிடைத்ததா?
இன்னும் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. விசாரணை தொடர்கிறது. 3200 பக்கங்களாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனால், முதன்மை குற்றவாளியாக கருத்தப்படும் சாமியார் போலேபாபாவின் பெயர் குற்றப் பத்திரிகையில் இல்லையாம்.