மராட்டி பேசவோ மராட்டிய விழாவைக் கொண்டாடவோ கூடாதாம். மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு சங்கத்தின் இந்த விதியால் கொதித்துப் போனது மராட்டிய குடும்பம். மராட்டி மற்றும் மராட்டி மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் இறங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க புதிய சட்டம் இயற்றுவோம் – மராட்டிய அமைச்சர் உறுதி கூறுகிறார். கருநாடகாவை அடுத்து மாராட்டியத்திலும் எழும் மொழி உணர்வு அனலாகிறது.
மராட்டிய மாநிலத்தின் தலைநகர் மும்பை, இது மெட்ரோபாலிடன் நகரமாகையால் பல மாநில பல மொழி பேசும் மக்கள் அங்கே அதிகம் வசிக்கின்றனர். இந்த நிலையில் மும்பைக்கு அருகில் உள்ள புறநகரான டோம்பிவிலியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கும் அடுக்கு மாடி குடியிருப்புகள் உள்ளன. இதற்கான கேளிக்கைக் கூடங்களும் இவர்களின் வீட்டு விழாக்களின் போது கொண்டாடுவதற்கு கட்டப்பட்டுள்ளன.
அதில் கோவில் விழாக்கள் உள்ளிட்ட அனைத்து விழாக்களும் நடைபெறும். நூற்றுக்கணக்கான மிகவும் வசதிபடைத்தவர்கள் குடியிருக்கும் அந்த அடுக்கு மாடிகளில் அதிகம் ஹிந்திக்காரர்களும், குஜராத்திகளும், தமிழர்களும் உள்ளனர். அனைவருமே பெரும் தொழிலதிபர்கள், தனியார் நிறுவனங்களில் அதிஉயர் பதவியில் இருப்பவர்கள். இதில் சில மராட்டிய குடும்பங்களும் உள்ளன.
ஒரு மராட்டிய குடும்பத்தில் திருமணத்திற்கு முன்னதான மஞ்சள் நீராட்டுவிழா என்ற மராட்டிய நிகழ்வு நடப்பதாக இருந்தது.
இதற்கு குடியிருப்பு சங்கத்தில் உள்ள விழாக்கள் நடத்தும் அரங்கில் அனுமதி கேட்டனர்.
அதற்கு சங்கத்தினர் ஒரு குறிப்பிட்ட சமுக்கத்தின்(மராட்டிய சமூகம்) விழாக்களுக்கு அனுமதி தரமாட்டோம். இது அனைத்து சமூக மக்களும் குடியிருக்கும் இடம். இங்கே மாராட்டியர்கள் ஒன்று கூடுவது மராட்டி பாடல் போட்டு ஆடுவது, என்பது மற்ற குடியிருப்பு வாசிகளுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்று கூறி அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர். மேலும் மராட்டி நாளிதழ்களை வரவேற்பறையில் வைக்கவும் தடை செய்துவிட்டனர்.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மராட்டி பேசும் குடும்பம் நேராக தங்களுக்கு மிகவும் நெருக்கமான உறவினரான மராட்டிய மாநில அமைச்சர் உதய் சாமந்த் என்பவரிடம் புகார் அளித்தனர்.
இது தொடர்பாக பேசிய அமைச்சர் உதய் சாமந்த், எங்கள் மாநிலத்தில் எங்களின் தாய்மொழி மராட்டியில் பேசுவதற்கும், மாராட்டி நாளிதழ்களை வைக்கவிடாமல் தடுப்பவர்களை தண்டிக்க கடுமையான விதிமுறையை உருவாக்க வலியுறுத்தினார்.
மராட்டிய மாநிலத்தில் மராட்டி மொழி பேசும் மக்கள் அவர்களின் விழாக்களைக் கொண்டாட தடை விதிப்பதைத் சகித்துக்கொள்ள முடியாது. அந்த குடியிருப்போர் சங்கத்திடம் விளக்கம் கேட்டுள்ளோம். மேலும் இது தொடர்பாக கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாகும் என்றும் உறுதிபட தெரிவித்தார்.
“மராட்டி எங்கள் தாய்மொழி, அதைப் பேசுவதைத் தடுக்கும் எந்த முயற்சியும் கடுமையான நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும். இத்தகைய மிரட்டல்கள் சகித்துக்கொள்ளப்படாது. பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுடன் நாங்கள் தொடர்பு கொள்ளும்போது, அவர்களின் மொழியை மதிக்கிறோம், அவர்களை அவமதிப்பதில்லை. அதேபோல், எங்கள் சொந்த மாநிலத்தில் மராட்டியில் பேசுவதை அல்லது ‘ஹல்தி குங்கும்’ போன்ற கலாச்சார பாரம்பரியங்களை நடத்துவதை யாராவது தடுக்க முயன்றால், அத்தகைய செயல்களுக்கு எதிரான சட்டம் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும்,” என்று சமந்த் கூறினார்.
இந்த நிலையில் ஜனவரி 31 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெறவுள்ள ‘விஷ்வ மராட்டி சம்மேளன்’ (உலக மராட்டி மாநாடு) குறித்து பேசிய அமைச்சர் விளையாட்டுகளின் வர்ணனையில் மாராட்டி மொழியைப் பயன்படுத்தாமல் இருப்பதை கடுமையாக கண்டிக்கிறோம்
இது தொடர்பாக தனியார் விளையாட்டு நிர்வாக குழுவிடம் பேசியுள்ளேன். மேலும் மால்கள் மற்றும் மல்டிப்பிளக்ஸ்கள், திரையரங்குகள், பெரிய தனியார் நிறுவனங்களில் , மராட்டி மொழிக்கும் மராட்டியர்களுக்கும் எந்த அநீதியும் நடக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.மராட்டிய மொழி மற்றும் மராட்டிய மக்களுக்கு எதிராக எந்த ஒரு செயலையும் நாங்கள் சகித்துக்கொள்ளமாட்டோம் இதற்காக விரைவில் சட்டமன்றத்தில் பேசி புதிய மசோதா ஒன்றை நிறைவேற்ற சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசுவேன் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.