பாணன்
இந்து மகாசபை தலைவி
காந்தியார் பொம்மையை சுட்டுக் கொண்டாடுகிறார்
“திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் கேலி செய்யப்படுகிறார் காந்தி” என்று கூறியுள்ளார் ஆளுநர் ஆர்.என்.ரவி.
நாள்தோறும் தனது பெயர் நாளிதழ்களில் வரவேண்டும் என்பதற்காக இவ்வாறு தொடர்ந்து கருத்து என்ற பெயரில் உளறல்களைச் கொட்டுவதே வேலையாகிப் போய்விட்டதோ இவருக்கு என்று எண்ணத்தோன்றுகிறது.
காந்தியாரைக் கோட்சே ஒரே ஒருமுறைதான் கொலை செய்தார். ஆனால் கோட்சேயின் கொள்கை ஆதரவாளர்களான ஹிந்துத்துவ அமைப்பின் பிரமுகர்கள் ஆண்டுக்கு ஆண்டு காந்தியாரைக் கொலை செய்கின்றனர்.
இதற்கான தண்டனைகள் எதுவும் இன்றுவரை தரப்படவில்லை. நாடாளுமன்றத்திலேயே மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளியும், நோய்தொற்று என்று பிணையில் வெளியே வந்து தேர்தலில் போட்டியிட்டு 5 ஆண்டுகள் போபால் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவருமான சாமியாரிணி பிரக்யா சிங், நாடாளுமன்றத்தில் ஆ.ராசாவின் உரையின்போது குறுக்கிட்டு, “கோட்சே தேசபக்தன். அவரைப்பற்றி பேசுவதை பொறுத்துக்கொள்ள மாட்டோம்” என்று கூறினாரே. அவருக்கு எந்த ஒரு தண்டனையும் கொடுக்கப்படவில்லையே!
மெரினாவில் காந்தியார் சிலை இருக்கும் இடத்தில் மெட்ரோ ரயில் வேலைகள் நடந்துவருவதால் எழும்பூர் அருங்காட்சியகத்தில் உள்ள காந்தியாரின் சிலைக்குத் தமிழ்நாடு அரசு மரியாதை செலுத்தியது.
உடனே, “அய்யோ… காந்தியைச் சிறுமைப்படுத்தும் விதமாக ஒரு மூலையில் வைத்து மரியாதை செலுத்துகிறார்களே” என்று பொய்யாகப் புலம்புகிறார்.
திராவிடத்தின் தலைமகன் தந்தை பெரியார் காந்தியாரின் மறைவிற்குப் பிறகு, “இந்த நாட்டிற்கு காந்தி தேசம் எனப் பெயரிடுங்கள்” என்று கூறியது வரலாற்றில் இன்றும் பதிவாகியுள்ளது.
காந்தியார் மறைவிற்குப் பிறகு ‘விடுதலை’யில் தந்தை பெரியார் எழுதியது
“காந்தியாரின் ஞாபகார்த்தமாக இந்தியா தேசத்திற்கு ‘காந்தி தேசம்’ என்று பெயரிடலாம் என்றும்; கிறிஸ்து ஆண்டு, முகம்மது ஆண்டு என்பதுபோல் ‘காந்தி ஆண்டு’ துவக்கலாம் என்றும், கிறிஸ்து மதத்தைப்போல், பவுத்த மதத்தைப்போல், ‘காந்தி மதம் ‘ என்ற ஒரு புது மதத்தைத் தோற்றுவிக்கலாம் என்றும், நான் யோசனை கூறியிருக்கிறேன்.
நமக்குத் தெரியாத கலியுக ஆண்டு, பசலி ஆண்டு, கிறிஸ்து ஆண்டு விவரம், தெளிவு கண்டுபிடிக்க முடியாத பிரபவ ஆண்டு முதலியவைகளை ஒப்புக் கொண்டு இருப்பதைவிட, நமக்குத் தெரிந்த ஒரு பெரியாரின் பேரால்-அதுவும் ஆயிரம் ஆண்டுகளாக இல்லாத ஒரு பெருமாறுதல் ஏற்பட ஆண்டு துவக்குவது எப்படித் தவறாகக் கருத முடியும்? இந்த நாட்டுக்கு என்று ஒரு ஆண்டு வேண்டாமா? அது காந்தியார் பேரில் இருக்கட்டும்.
காந்தியாரின் கொள்கைகளை வைத்து ஒரு மதத்தைத் தோற்றுவிப்பதுதான் எப்படித் தவறாகும்? சத்தியமும், அகிம்சையும்தானே அவருடைய முக்கிய தத்துவங்கள்! சத்தியமே கடவுள் என்பதுதானே அவருடைய முக்கிய சித்தாந்தம். தனியாக, வஸ்துவாக, ஆளாக ஒரு கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கை தனக்கு இல்லை என்று பலதடவை சொல்லி இருக்கிறார். சத்தியம்தான் கடவுள் என்று அவர் கொண்டு நடந்திருக்கிறபடியால் மக்கள் சத்தியமே கடவுள் என்று நம்பிப் பயப்பட்டு நடந்தால் இன்றையக் கடவுள்களால் ஏற்படும் பயனைவிட – எவ்வளவோ நலம் ஏற்படும். பிறகு மற்றதைப் பார்த்துக் கொள்ளலாம்.
அரித்துவாரில் பூங்கா ஒன்றில் கிடக்கும் திருவள்ளுவர் சிலை
அகிம்சையையும், அன்பையும் முக்கியத் தத்துவமாகக் கொண்டதுமான ஒரு மதத்தையும், சத்தியத்தையே கொண்டதான ஒரு கடவுளையும் ஏற்பாடு செய்து துவக்கினால் அதை மக்கள் எல்லோரும் போற்றித் தழுவ மாட்டார்களா? அதன் மூலம் இன்று மக்களிடையே இருந்துவரும் ஜாதி வேறுபாடுகளும், மதவெறி உணர்ச்சியும் அடியோடு அழிய மார்க்கம் பிறக்காதா?
அதன் மூலம் இன்று வரைக்கும் ஜாதி, மத பேதங்களை உண்டாக்கவும், மக்களைக் காட்டுமிராண்டி காலத்திற்கு அழைத்துச் செல்லவுமே பெரிதும் பயன்பட்டு வந்த இந்துமதம், போலிக் கடவுள் அழிய வழி பிறக்காதா? மதம் என்பதென்ன – மாற்றியமைக்கக் கூடாததொன்றா? மதம் என்பதே மக்களின் நல்வாழ்வுக்காகப் பெரியோர்களால் ஏற்படுத்தப்படும் நெறி அல்லது மார்க்கம் தானே! என்றாவது மொட்டையடித்துக் கொள்வதும் சாம்பல் பூசிக் கொள்வதும் மதம் என்றாகி விடுமா? ஆகவே, என்ன காரணம் முன்னிட்டேனும், இன்றையக் கடவுள் தன்மையும், மதத் தன்மையும் மாற்றப்பட்டாக வேண்டும். இன்றைய ஏற்பாடுகள், இன்றைய ‘ஆர்டர்’ எப்படியும் மாற்றப்பட்டாக வேண்டும். மாற்றப்படாத வரையிலும் இன்றைய மக்கள் வாழ்வு பாழாகத்தான் (Waste) போய்க்கொண்டிருக்கும்.” (‘விடுதலை’ 11.3-1948)
வாய்ப்பிருந்தால் இதனை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து படித்துப் பார்க்கலாம். அப்போதுதான் திராவிடம் காந்தியாருக்கு கொடுத்த மரியாதை என்னவென்று ஆளுநருக்குப் புலப்படும்.
ஹிந்துத்துவவாதிகள் திருக்குறள் எழுதிய திருவள்ளுவருக்குக் கொடுத்த மரியாதை என்ன தெரியுமா?
அரித்துவாரில் உள்ள மேளா பவன் (விழா மண்டபம்) என்ற முக்கியவீதியில் திருவள்ளுவர் சிலை வைக்கத் தமிழ் மொழியின் மீது திடீர் பாசம் (?!) கொண்ட தருண் விஜய் என்ற பாஜக நியமன நாடாளுமன்ற உறுப்பினர், முடிவு செய்தார். ஆனால் அங்குள்ள சங்கராச்சாரி உள்ளிட்ட முக்கிய அகாடா (சாமியார்கள் மடம்) தலைவர்கள் “என்ன, நாங்கள் புண்ணியகுளியல் போட்டுவிட்டு சூத்திரன் ஒருவனின் முகத்தில் விழிப்பதா?” என்று கூறி போர்க்கொடி தூக்கவே அப்படியே சிலையைத் தூக்கி மாநகராட்சிப் பூங்காவில் குப்பைகள் கொட்டும் இடத்தில் தானே சாய்த்து வைத்துள்ளார்கள். 2016ஆம் ஆண்டில் இருந்து அந்தச் சிலை அப்படியே கிடக்கிறது. இன்று அந்த சிலைமீது புல்லும் செடியும் முளைத்து புதராகிக் கிடப்பதாகத் தகவல்கள் வருகின்றன.
இதுதான் திருவள்ளுவருக்கு ஆரியர்கள் செய்த மரியாதை! இது குறித்து ஆளுநர் பேசுவாரா? அல்லது உத்தராகண்ட் அரசிடம் சொல்லி அதே மேளாபவன் சாலையில் மீண்டும் சிலையை வைக்கக் கோரிக்கை வைப்பாரா? நாட்டுக்கு உழைத்தோருக்கும், சான்றோருக்கும் எப்படி மதிப்புத் தர வேண்டும் என்று திராவிடத்திற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பாடம் எடுக்க வேண்டாம்.