ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க
ஆதார் கட்டாயமாகிறது
சாலை விதிகளை மீறியதாக அனுப்பப்பட்ட ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான மின்னணு சலான்கள் நிலுவையில் உள்ளன. சாரதி மற்றும் வாஹன் இணையதளங்களில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ் (ஆர்.சி.) தரவுகள் பல பத்தாண்டுகளுக்கு முன்பு பதியப்பட்டவை ஆகும். அவற்றில் பலவற்றில் ஆதார் எண்களோ, செல்போன் எண்களோ இல்லை. இதனால் அவர்களை அடையாளம் காண்பது சிரமமாக உள்ளது. எனவே, ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்.சி. புததகம் வைத்திருப்பவர்கள் அதன் முகவரியை ஆதார் எண் அடிப்படையில் புதுப்பிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்குவது குறித்து ஒன்றிய அரசு பரிசீலித்து வருவதாக ஒன்றிய சாலை போக்குவரத்துத் துறை செயலாளர் வி.உமாசங்கர் தெரிவித்துள்ளார்.
பேரிடர் பாதிப்பு தணிப்புத் திட்டங்கள்
தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்பட 12 மாநிலங்கள் வறட்சியால், மிகவும் பாதிக்கக்கூடிய மாநிலங்களாக உள்ளன. அந்த மாநிலங்களுக்கு உதவும் வகையில், ரூ.2.022 கோடி மதிப்பிலான திட்டத்துக்கு ஒன்றிய அரசின் உயர்நிலைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. அதில் ரூ.1,200 கோடி ஒன்றிய அரசின் பங்காக இருக்கும். ரூ.818.92 கோடி செலவில் தமிழ்நாடு உள்பட 19 மாநிலங்களில் உள்ள 144 மாவட்டங்களில், காட்டுத் தீ ஆபத்தை கையாள்வதற்கான பேரிடர் பாதிப்பு தணிப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்த அந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தாய்லாந்தின்
கைவினைப் பொருள்கள் கண்காட்சி
தாய்லாந்து நாட்டின் முன்னணி பிராண்டுகளின் தயாரிப்புகள், பாரம்பரிய கைவினைப் பொருள்கள் முதல்புத்தாக்க மின்னணு சாதனங்களின் நவீன தொழில்நுட்ப தீர்வுகள் வரை ஒவ்வொன்றும் தனித்து வமான அடையாளங்களுடன் கூடிய கண்காட்சியை சென்னைக்கான தாய்லாந்து துணை தூதர் ராச்சா அரிபார்க் மற்றும் சென்னை தாய்லாந்து வர்த்தக மய்யத்தின் இயக்குநர் செக் ஜீனாபன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
ஜனவரி 24ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவின்யூ வர்த்தக வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சியில் பங்கேற்பாளர்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளை அறிந்து கொள்ள முடிந்தது. தாய்லாந்து நாட்டினர் உலகளாவிய சந்தைக்கு தமது படைப்பாற்றல் மற்றும் கைவினைத் திறன் மூலம் கொண்டு வரும் தயாரிப்புகளின் நேரடி அனுபவத்தைப் பெற்றனர்.
தாய்லாந்தின் மிகச்சிறந்த தயாரிப்புகள் மற்றும் புதுமைகளின் ஈர்க்கக்கூடிய பொருள்கள் பொதுமக்களை ஈர்த்தன. இந்த ஆண்டு கண்காட்சியானது தாய்லாந்து நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை மட்டும் சிறப்பித்துக் காட்டியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.