நேற்றைய (30.1.2025) தொடர்ச்சி…
அண்ணாதுரை தீர்மானம்
“9. கால நிலையையும், உலக நிலையையும், சர்க்கார் நிலையையும், நம் மக்கள் தன்மையையும், இதுவரை நாம் கடந்து வந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் உண்டான பலனையும் மற்ற ஸ்தாபனங்களுக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும் நிலைமையும், அதனால் அவைகளுக்கு ஏற்பட்ட பலனையும் நன்றாக ஜாக்கிரதையாக ஆலோசித்துப் பார்த்தால் நம் சமுதாயத்தில் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கோரியும் நமது கட்சியின் பேரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்துவரும் போக்கை மாற்றி அமைத்துக்கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் தள்ளிக்கொண்டு போகப்பட்டுவிட்டோம்.
யுத்த நெருக்கடி
அதாவது, நம் கட்சி தோன்றிய காலம் முதல் இதுவரை நாம் பிரிட்டிஷ் சர்க்காருடன் ஒத்துழைத்து வந்ததும், சர்க்காருடன் ஒத்துழையாமை செய்து சர்க்காருக்கு தொல்லை கொடுத்து வந்த ஸ்தாபனங் களை எதிர்த்துப் போராடி சர்க்காருக்கு அனுகூலமான நிலைமையை உண்டாக்க உதவிசெய்து வந்ததும், குறிப்பாக சென்ற அய்ந்து வருஷ காலமாக நடந்துவரும் உலக யுத்தத்தில் உள்ள நெருக்கடியில் நேசநாடுகளின் வெற்றிக்குக் கேடு உண்டாகும்படியான நிலையில் நம் நாட்டில் பல ஸ்தாபனங்கள் செய்துவந்த பெருங்கிளர்ச்சிகளையும் நாசவேலைகளையும் எதிர்த்து அடக்குவதிலும் நேசநாடுகளுக்கு வெற்றி உண்டாக பணம், ஆள், பிரசாரம் முதலியவைகள் நிபந்தனையின்றி சர்க்காருக்கு உதவி வந்ததும் சர்க்காராலும் பாமர மக்களாலும் நம் கட்சியை இழிவாகக் கருதப்படத்தக்க நிலை ஏற்படுவதற்கு பயன்பட்டு விட்டது.
இந்திய அரசியல் சமுக இயல் சம்பந்தமான பேச்சுவார்த்தைகளில் சர்க்காரார் நம் கட்சியையும், நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.
நீதி நெறி
இந்திய மக்களின் அரசியல் சமுதாய இயல் சம்பந்தமான ஸ்தாபனங்களில் நம் ஸ்தாபனம் குறிப்பிடத்தக்கதாகவும், நீதி நெறி உடையதாகவும் இருந்து, ஒழுங்கு முறைக்குக் கட்டுப்பட்டு சர்க்கார் மெச்சும்படி நடந்துவந்தும், நம் ஸ்தாபனம் சர்க்காரால் மற்ற சாதாரண ஸ்தாபனங்களோடு ஒன்றாகக்கூட சேர்த்துப் பேசும் விதத்தில்லாதாக அலட்சியப்படுத்தப்பட்டது.
மாகாண கவர்னராலோ, கவர்னர் ஜெனரலாலோ, இந்தியா மந்திரியாலோ பிரிட்டிஷ் முதல் மந்திரி யினாலோ, இந்திய அரசியல் கட்சிகளைப்பற்றி பலதடவை பேச ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒன்று இரண்டு தடவை கூட நம் சமுதாயத்தையோ நம் ஸ்தாபனத்தையோ, நம் இலட்சியத்தையோ குறிப்பிட கட்டுப்பாடாய் மறுத்தே வரப்பட்டிருக்கிறது.
ஆகவே, இப்படிப்பட்ட நிலைமை மாறி நம் கட்சிநிலை மதிக்கப்படவும் குறிப்பிடவும் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படவும், நம் கட்சி இனியும் கட்டுப்பாடும் உரமும் பெற்று உண்மையான தொண்டர்களைக் கொண்டு நாணயமாகவும் தீவிரமாயும் தொண்டாற்றி மதிப்புப் பெறவும் நல்ல வசதியும் சவுகரியமும் ஏற்படுவதற்கு நம் கட்சிக்கு அடியில்கண்ட திட்டம் உடனே அமலுக்குக் கொண்டு வரப்படவேண்டியது அவசியமும் அவசரமும் ஆன காரியமென்று இம்மாநாடு தீர்மானிக்கிறது.
கவுரவப் பட்டங்கள்
அ. நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும் இனியும் வந்துசேர இருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் தங்களுக்கு அளிக்கப்பட்ட எந்தவிதமான கவுரவப் பட்டங்களையும் உடனே சர்க்காருக்கு வாபசு செய்துவிட வேண்டும்; இனி ஏற்றுக்கொள்ளவும் கூடாது.
ஆ. அதுபோலவே அவர்கள் யுத்தத்திற்கு ஆகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்கு ஆகவும், மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்காராலோ எந்தவிதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும், அவைகளையெல்லாம் உடனே இராஜிநாமா செய்துவிட வேண்டியது.
(இ). தேர்தல் அல்லாமல் ஸ்தல ஸ்தாபனம் அதாவது ஜில்லா போர்டு, முனிசிபல் சபை, பஞ்சாயத்துபோர்டு ஆகியவைகளின் தலைவர், உபதலைவர் அங்கத்தினர் ஆகிய பதவிகளில் சர்க்காரால் நியமனம் பெற்றே அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்தல் பெற்றோ இருக்கிறவர்கள் யாவரும் தங்கள் தங்கள் பதவிகளை உடனே இராஜிநாமா செய்துவிட வேண்டியது.
போட்டி இல்லை
(ஈ). சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்தவித மான தேர்தலுக்கும் கட்சி அங்கத்தினர்கள் நிற்கக் கூடாது.
“இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் எவரும் தங்களுக்கு இக்கட்சியில் இருக்க இஷ்டமில்லை என்று கருதி கட்சியை விட்டு நீங்கிக்கொண்டவர்களாகக் கருதப்பட வேண்டிய வர்களாவார்கள்.”
இதை சங்க காரியதரிசி தோழர் சி.என்.அண்ணா துரை அவர்கள் பிரேரேபித்தார்.
கட்சியின் காரியக்கமிட்டி காரியதரிசி தோழர் ஊ. பு. அ. சவுந்தரபாண்டியன் அவர்கள் மனப்பூர்வ மாய் ஆமோதிப்பதாக கூறி ஒரு திருத்தம் கூறினார். திருத்தம் தலைவர் பெரியாராலும், அண்ணாதுரை யாலும் ஒப்புக்கொள்ளப்பட்டது. திருத்தமாவது:
(உ) “இதையேற்று ஒரு வாரத்தில்” என்கின்ற பிரிவுக்கு பதிலாக ‘1945 மார்ச்சு 31 ஆம் தேதிக்குள்ளாக தமிழ்நாட்டில் 10000 அங்கத்தினர்களுக்குக் குறையாமல் அங்கத்தினர்களை சேர்த்து ஜில்லா தாலுகா சங்கங்களை இன்னும் அதிகமாக பலப்படுத்தி ஒழுங்குமுறை கண்டிப்புகள் ஏற்படுத்தி ஒரு தனி மாநாடு கூட்டி தெரிவித்து அன்று முதல் அமலுக்குக் கொண்டுவர வேண்டும்’ என்பதாகும்.
திருத்தப்பட்டபடி தீர்மானத்தை ஓட்டுக்குவிட தலைவர் எழுந்தார். மாநாட்டின் பெரும்பான்மையான பிரதிநிதிகளால், ‘வாய்தா கூடாது இன்று முதலே அமலுக்கு வரவேண்டும்’ என்றும் ‘ஒரு வார வாய்தா போதும்’ என்றும்,
சமாதானம்
அதிகமான காலம் 3 மாதத்திற்குள் என்று இருந்தால்போதும் என்று சொல்லிக்கொண்டு நூற்றுக் கணக்கான பேர்கள் மேடைக்குவந்து பேச தலைவர் அனுமதி கேட்டும் ஆரவாரம் செய்வதுமூலம் திருத் தத்தை எதிர்த்தார்கள். பிறகு தலைவர் 2-3 பேர்களை மாத்திரம் பேச அனுமதித்தபின் திருத்தத்தை எதிர்த்தவர்களுக்கு சமாதானம் சொல்லும் முறையில் பேசியதாவது:
“தோழர்களே,
இத்தீர்மானத்திற்கு பலமான எதிர்ப்பு இருக்கும் என்று கருதினேன். இந்த 15000 பேர் கொண்ட கூட்டத்தில் ஒரு சிறு எதிர்ப்புகூட இல்லை என்று கண்டேன். இந்த நிலை உங்களுக்கு என்னை, ஒரு சலிப்படைய முடியாத தொண்டனாக ஆக்கிவிட்டது. இந்த தீர்மானத்தை நான் இன்றும் இனிமேலும் ஒரு நிமிடமாவது தலைமை வகிப்பதற்கும், தலைமை வகிக்காமல் தப்பித்துக்கொள்ளவும் காரணமாக வைத்திருந்தேன். அப்படி இருக்க இத்தீர்மானம் இன்று நம்மில் யாருக்கும் அதாவது திருத்தம் பிரேரேபித்த என் நண்பர் மதுரை ஜில்லா போர்டு பிரசிடெண்ட், பாண்டியனுக்கும் இங்கு வீற்றிருக்கும் நண்பர் செங்கல்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் தோழர் டி. சண்முகத்திற்கும் மற்றும் சில பதவி ஆளருக்கும்கூட அபிப்பிராய பேதம் இல்லை என்பதை நீங்கள் காண்கிறீர்கள்.
ஆனால், கொஞ்சம் வாய்தா காலம் கேட்கப்படு கிறது. இது பாண்டியன் அவர்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானத்தைக் காப்பாற்றவல்ல. இப்பொழுதே விட்டுவிட அவர் தயாராய் இருக்கிறார். ஆனால், அவர் இத்திருத்த தீர்மானம் இங்கு கொண்டுவந்ததின் கருத்து பட்டம், பதவி ஆளர்களை வெளியில் அனுப்புவதற்கு ஆக அல்ல, அவர்களுடைய ஒத்துழைப்பை இன்னும் அதிகமாகப் பெறவும் பாமர மக்கள் ஆதரவை அதிகமாகப் பெறவும், சர்க்காரைத் திருத்தவும், நம் இயக்கத்தில் தன்னல மறுப்பு உணர்ச்சியும் நாணயமும் பெருகவும் ஆகவே கொண்டு வந்திருக்கிறோம். ஆதலால், சிறிது நாள் பொறுப்பதால் ஒன்றும் முழுகிப்போகாது. நாம் இத்தீர்மானத்தினால் 6 மாதகாலம் என்று அறுதியிட்டு வாய்தா கொடுக்கவில்லை. 6 மாதத்திற்கு உள்ளாக என்றுதான் போட்டிருக்கிறோம். 6 மாதத்திற்குள் என்பது ஒரு மாதத்திற்குள்ளாகவே என்றும் பொருள் கொள்ளலாம். நாளைக்கே ஆரம்பித்தாலும் இத்தீர்மானத்தின்படி குற்றமாகாது.
உழைப்பின் பலன்
ஆனால், இத்தீர்மானத்தை நிறைவேற்றுகிற நீங்களும் நானும் வெறும் வாய்ப் பேச்சாளர்களாயிருந்து சர்க்காரையும் பட்டதாரிகளையும் குறைகூறுகிறோம் என்று யாரும் கருதக்கூடாது. நமக்கு அதிகமாக நிபந்தனை இதில் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் ஜில்லா தாலுகா சங்கங்களை இத்தீர்மானங்களின்படி அமைக்க வேண்டும். ஜில்லாவுக்கு ஆயிரம் பேராவது அங்கத்தினர்கள் இதன்படி சேர்க்கப்படவேண்டும். தனி மாநாடு கூட்டி அதில் வெளிப்படுத்த வேண்டும் என்பது தவிர வேறு கஷ்டம் ஒன்றுமில்லை. தோழர் பாண்டியன் அவர்களோடு ஆலோசித்தேன். அவர் குறை கூறுபவர்களுக்கு வாய்ப்புக்காகவே இதைப் பிரேரேபிக்கிறேன் என்று சொன்னார். அது சரியென்றுபடுகிறது. என் தலைமையில் உங்களுக்கு இருக்கும் அன்பை இந்த சொற்ப நாள் வாய்தாவுக்கு அனுமதி கொடுப்பதின் மூலம் காட்டுங்கள். “இந்தச் சமயத்தில் தனிப்பட்ட முறையில் ஒன்றும் பேசக்கூடாது. எல்லோரையும் நண்பராகக் கருதுங்கள். நம்மை வைகிறவர்களையும் அவர்கள் விஷயத்தில் பரிதாபப்பட்டுக் கொண்டு நண்பராகக் கருதுங்கள். உழைப்பாளிகள் யார்? உழைப்பின் பலனை அனுபவிக்கிறவர்கள் யார்? என்பது இத்தீர்மானத்தின் செய்கையினால் விளங்கிவிடப் போகிறது” என்று கூறி ஓட்டுக்கு விட்டார்.
பெருத்த ஆரவாரத்தின் மீது ஆயிரக்கணக்கான கைகள் வெகுநேரம் தூக்கிய வண்ணமாக நின்று ஆதரவு அளித்தன.
ஆட்சேபிக்கிறவர்கள் கைதூக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஏகமனதாக…
6 மாத வாய்தா கூடாதென்று பேசிய இரண்டொருவர் கைதூக்கினர். அவர்களைப் பார்த்து தலைவர் இத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதாக பதிவு செய்ய நீங்கள் தயவுசெய்து அனுமதியளிக்கக் கூடாதா என்று கேட்டார். உடனே அவர்களும் கையை தொங்கப் போட்டுக் கொண்டார்கள். பிறகு தலைவர் ஆடசேபிக்கிறவர்கள் கை தூக்கலாம் என்றுசொல்லி இரண்டு தடவை நான்கு புறமும் திரும்பிப்பார்த்தார்.
திருத்தத்தின்படி தீர்மானம் ஏகமனதாக நிறை வேறியது. இதை தலைவர் சொன்னவுடன் சொல்ல முடியாத ஏராளமான கைத்தட்டலும், ஆரவாரமும் பெரியார் வாழ்க! கழகம் வாழ்க! திராவிடநாடு திராவிடருக்கே! என்கின்ற பேரொலியும் மக்களை இலக்கச் செய்துவிட்டது.